Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 மார்ச், 2020

திரௌபதி கேட்கும் நீதி...!


 துச்சாதனன், திரௌபதியை இழுத்து வந்து சபையில் தள்ளினான். திரௌபதி பாண்டவர்களை பார்த்தாள். பாண்டவர்கள் தலைகுனிந்தனர். துரியோதனன், திரௌபதியை பார்த்து பலமாக சிரித்தான். அவன், இன்று முதல் நீ என் தாதி. வா! என் மடி மீது வந்து அமரு எனக் கூறினான். அங்கிருந்த கௌரவர்கள் திரௌபதியை பார்த்து தாதி எனக் கூறி ஏளனம் செய்தனர். இதைப் பார்த்து துரியோதனன் ஆணவ சிரிப்பு சிரித்தான். சகுனி மனம் மகிழ்ந்தான். சபையில் இருக்கும் சான்றோர்களையும் அரசாள்வோரையும் நோக்கி கண்ணீருடன் அதே கேள்வியை திரௌபதி கேட்கிறாள். பீஷ்மர், தருமன் சூதில் தன்னை இழந்த பின் தான் உன்னை இழந்தான்.

திரௌபதி, ஒருவர் தன்னை இழந்து பின்பு எப்படி என்னை பணயமாக வைக்க முடியும் என கேள்வி எழுப்பினாள். பீஷ்மர், மனைவி எப்போதும் கணவனின் உடைமை என்று சாஸ்திரம் சொல்கிறது, உயிரே போனாலும் தர்மம் தவறாதவன் யுதிஷ்டிரன். அவனது செயல்களில் தவறு இருப்பதாக தோன்றவில்லை. ஒருவன் தன் தாரத்தை தானம் என வழங்கிடலாம். தருமன் தன்னை அடிமை என விற்ற பின்னும் உன்னை பிறர்க்கு அடிமையாக்க உரிமையுண்டு. இதற்கு சாஸ்திரத்திலும் சான்று இருக்கிறது. ஆனால் உண்மையில் இது அநீதி தான். நீ இங்கு முறையிட்டதால் அதற்கான பதிலை கூறினேன். இத்தகைய தீஞ்செயலை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன் எனக் கூறி தலைகுனிந்து நின்றார்.

 திரௌபதி, பிதாமகரே! எனக்கு தர்மநெறியை நன்றாக உரைத்தீர்கள். மண்டபம் ஒன்றை அமைத்து, அதை காண எங்களை அழைத்து வந்து, என் கணவர்மார்களை சூதாட வற்புறுத்தி, நாட்டை கைப்பற்ற நினைத்தது முறையா? பெண்களுடன் பிறந்த நீங்கள் பெண்ணாகிய என்னை பணயம் வைத்தது மரபா? எனக் கூறி அழுதாள். இதைக்கேட்டு பீஷ்மர், விதுரர் முதலானோர் தலைக்குனிந்து நின்றனர்.

விகர்ணன் :

 விகர்ணன், கண்பார்வையற்ற மன்னனான திருதிராஷ்ட்டிரனுக்கும், அவனது மனைவியான காந்தாரிக்கும் பிறந்த நூறு மகன்களில் ஒருவன். நூறு பேரில் தொண்ணூற்று ஒன்பது பேர் பொல்லாதவர்களாக இருந்தாலும் ஒருவனாவது நல்லவனாக இருப்பான் என்பதற்கு உதாரணமாக கௌரவர் கூட்டத்தில் விகர்ணன் இருந்தான். விகர்ணன் வயதில் இளையவன். ஆயினும் அறத்தால் நிற்பவன். துரியோதனன் சபையிலும் துணிவுடன் நியாயத்தை எடுத்துக் கூறும் பண்பும் விவேகமும் மிக்கவன்.

 அப்பொழுது விகர்ணன் எழுந்து, யுதிஷ்டிரன் முதலில் தன்னை வைத்து இழந்தார். அதன் பிறகு அவருக்கு எவர் மீதும் உரிமையில்லை. எனவே, அவர் திரௌபதியை பணயம் வைத்தது ஏற்க முடியாது. திரௌபதி தருமனுக்கு மட்டுமல்ல, ஐவருக்கும் மனைவி. தன்னைத் தோற்ற தருமனுக்கு மனைவியைப் பணயமாக வைக்க உரிமை இல்லை. சூதும் குடியும் தீயவை என்று விலக்கப்பட்டவை. சூதில் அகப்பட்டவனின் செயல் அறம் என்று சொல்லத் தக்கதல்ல எனக் கூறினான்.

 கர்ணன் எழுந்து, இளவரசே! தாங்கள் வயதில் இளையவர். தங்களுக்கு நல்லவை எது. தீயவை எது என்று அறியக்கூடிய பக்குவம் இன்னும் வரவில்லை. உங்கள் சகோதரர் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை. திரௌபதியின் கணவர் அடிமையானதும் அடிமைகளின் மனைவியும் அடிமைதான். அவளை மீண்டும் பணயம் வைக்கத் தேவையில்லை, இருந்தாலும் அனுதாபத்தால் அவளைத் தனியாக பணயம் வைக்க ஒப்புக்கொண்டோம் எனக் கூறினான்.

 விதுரர், அநியாயத்தால் பாதிக்கப்பட்ட திரௌபதி நீதிமான்கள் நிறைந்த சபையில் அவளின் உரிமை கேட்டு முறையிடுகிறாள். திரௌபதியின் இந்த முறையீடுக்கு பொய் உரைப்பதோ அல்லது பதிலளிக்காமல் இருப்பதோ துரோகத்திற்கு சமமாகும். அதனால் தர்மம் தெரிந்தவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.

 துரியோதனன், தர்மன் பணயம் வைத்த பொருட்கள் பொய்யானது எனக் கூறட்டும். அதன் பின் நான் திரௌபதியை அடிமைத்தனத்தில் விடுவிக்கிறேன் என்றான்.

 இதைக்கேட்டு கொண்டிருந்த தர்மன் எதுவும் பேசாமல் மௌனமாக தலை குனிந்து நின்றான். தர்மர் மௌனமாக இருப்பதை பார்த்த பீமன், அண்ணா! நம்மை கணவர்களாக அடைந்த திரௌபதி, இன்று கௌரவர்களால் இத்தகைய அவமானத்தை சந்திக்க நேர்ந்துவிட்டது. இன்று நீங்கள் தர்மத்தையே கொன்றுவிட்டீர்கள். சூதாடி துருபதனின் மகளையும் அடிமையாக்கி விட்டீர்கள். அண்ணா! சூதாடிய உங்கள் கைகளை நான் எரிக்கப் போகிறேன். சகாதேவா! நெருப்பைக் கொண்டு வா என கோபத்துடன் கூறினான்.

அர்ஜூனன், பீமா! உன் கோபம் மதியை இழக்க வைக்கிறது. அண்ணனை தகாத வார்த்தைகளால் பேசுதல் கூடாது. மனதில் வஞ்சனை கொண்டவர்கள், சூதாட அழைக்கும்போது அதை மறுக்க முடியுமா? அண்ணன் அனைத்தையும் தர்மத்தின் படியே செய்துள்ளார். அதனால் இன்று கட்டுண்டு இருக்கிறோம். நிச்சயம் காலம் மாறும். அதுவரை நாம் பொறுமை காக்க வேண்டும்.

தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும்

என்பதை மறந்து விடாதே பீமா. தருமத்தை நிலைநாட்டி நாம் நிச்சயம் வெல்வோம் என்றான். அதன் பிறகு பீமன் அமைதியானான்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக