புதன், 4 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 125


காந்தர்வம் கொள்ளுதல் :

நாரதர் மறைந்த பின்பு அக்குழந்தையை எடுத்து மாயாவதி அன்போடு வளர்த்து வந்தாள். அக்குழந்தையான பிரத்தியும்னன் கிருஷ்ணரை போலவே அழகான உருவத்துடனும், காண்போரை கவரும் விதத்திலும் வளர்ந்து வந்தார். பிரத்தியும்னனுடைய அழகில் தனது மனதை பறிகொடுத்தாள் மாயாவதி. அவளுக்கு அவ்வப்போது முன் ஜென்ம நினைவுகள் தோன்றி நிகழ்வுகளை நினைவுப்படுத்திக் கொண்டிருந்தன. அவர் மீது கொண்ட காந்தர்வ எண்ணங்களால் தான் கற்ற மாய கலைகளையும் பயிற்றுவித்து அதில் பிரத்தியும்னனையும் தேர்ச்சி அடையச் செய்தாள்.

பிரத்தியும்னன் தன் பிறப்பை பற்றி அறிதல் :

மாயாவதியின் நடவடிக்கைகள் யாவும் பிரத்தியும்னனுக்கு ஒருவிதமான சங்கடத்தையும், ஆச்சரியத்தையும் அளித்துக் கொண்டிருந்தது. ஏனெனில் பிரத்தியும்னன் மாயாவதியை தன்னுடைய தாயாகவே எண்ணி அவளிடம் பழகினார். ஆனால், மாயாவதியோ பிரத்தியும்னனை தன் கணவனாக எண்ணி பழகினாள். ஒருநிலையில் மாயாவதியின் அன்பும் செயல்பாடுகளும் எல்லைக்கடக்க தொடங்கின. அதன் காரணமாக சினம் கொண்ட பிரத்தியும்னன் மாயாவதியிடம் தன் மனதில் இருந்த சினத்தையும், ஐயத்தையும் எடுத்துரைத்து தாங்கள் இவ்விதம் நடந்து கொள்வது முறையன்று, ஏனெனில் தாங்கள் என் தாய் அல்லவா? என்று கூறினார்.

இந்த தருணத்திற்காகவே காத்திருந்தது போல, மாயாவதி தன்னைப் பற்றியும், தான் யார்? என்றும் பிரத்தியும்னனிடம் கூறினாள். இதைக்கேட்டதும் மிகுந்த அதிர்ச்சியும், வியப்பும் கொண்ட பிரத்தியும்னன், என்னிடம் கொண்ட காமவேட்கைக்காக தாங்கள் என் தாய் அல்ல? என்று கூறுவது முறையல்ல என்று சினந்து கொண்டார். ஆனால், மாயாவதியோ பிரத்தியும்னன் கொண்ட சினத்திற்கான காரணத்தை நன்கு அறிவாள்.

அதனால் அவள் அவரிடம் எவ்விதமான கோபத்தையும் காட்டாமல் அவர் பிறப்பை பற்றிய ரகசியத்தை எடுத்துரைக்கத் தொடங்கினாள். அதாவது நீங்கள் இந்த நகரத்தில் பிறந்தவர் அல்ல. துவாரகையில் உள்ள கிருஷ்ணருக்கும், ருக்மணிக்கும் பிறந்த மகன் என்றும், தாங்கள் பிறந்த ஆறாம் நாட்களிலேயே இந்த நாட்டினை ஆளும் அரசனான சம்பரன் உங்களை உங்கள் பெற்றோரிடமிருந்து பிரித்து கடலில் தூக்கி எறிந்துவிட்டான் என்றும் கூறினாள்.

உங்களை கடலில் எறிந்த போது கடலில் இருந்த மீன்களில் ஒன்று உங்களை விழுங்கி விட்டது என்றும், பின்பு அங்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் அகப்பட்ட மீன்களை அரண்மனைக்கு அனுப்பும் பட்சத்தில் அந்த மீனின் வயிற்றில் இருந்து நீங்கள் இங்கு வந்து சேர்ந்தீர்கள், உணவு படைக்கும் பொருட்டு அறுக்கும்போது நீங்கள் என்னிடம் கிடைத்த அவ்வேளையில் நாரத முனிவர் தோன்றி முன் ஜென்மத்தில் தாங்கள் என் கணவராகவும், நான் உங்களின் காதல் மனைவியாகவும் இருந்துள்ளதாக கூறினார் என்று எடுத்துரைத்தாள். நாம் இருவரும் முற்பிறவியில் ஓருயிர் ஈருடலாக இருந்து காந்தர்வம் கொண்டு வாழ்ந்துள்ளோம் என்றும் கூறினாள்.

போருக்குத் தயாராகுதல் :

தன் பிறப்பை பற்றி அறிந்த பிரத்தியும்னன் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் கொண்டார். பின்பு தன்னை வளர்த்த மாயாவதியிடம் தாங்கள் என்னை அடைய இயலாது என்றும், தாங்கள் சம்பரனின் பத்தினி ஆவீர்கள் என்றும் கூறினார். ஆனால், மாயாவதி பிரத்தியும்னனிடம் சம்பரன் என்னை மயக்கி இங்கு அழைத்து வந்துவிட்டான் என்றும், அவன் சக்திகளைக் கொண்டு என்னை மயக்கி அவன் மனைவியாக ஆக்கிக் கொண்டான் என்றும் கூறினாள். ஆனால், நானோ அவனிடம் கற்ற மாய வித்தைகளை கொண்டு அவனை மயக்கி இந்நாள் வரை அவனை என் அருகில் நெருங்கவிடாமல் இங்கு வாழ்ந்து கொண்டு வருகிறேன்.

இந்த துன்பத்திலிருந்து என்னை விடுவித்து என்னை காக்க வேண்டும் என்று பிரத்தியும்னனிடம் கூறினாள். மாயாவதி தனக்கும், இந்த ஜென்மத்தில் பிரத்தியும்னனாக இருக்கும் மன்மதனுக்கும், முற்பிறவியில் இருந்த தொடர்பைப் பற்றி எடுத்துரைக்கும் பொழுது மாயாவதியிடம் தோன்றிய முன்ஜென்ம நினைவுகளை பிரத்தியும்னனின் கண்முன்னே உருவகப்படுத்தி மன்மதனும், ரதியும் இருந்த நிலை மற்றும் அவர்கள் கொண்ட காந்தர்வ நிலையையும் அவர் கண் முன்னே நிறுத்தினாள்.

அந்த காட்சிகளில் பிரத்தியும்னனின் உருவம் போன்றே மன்மதனின் உருவமும், ரதி தேவியின் உருவம் போன்றே மாயாவதியின் உருவமும் ஒன்றியிருக்க என்ன செய்வதென்று அறியாமல் இருந்தார் பிரத்தியும்னன். மேலும், தன் மனதில் மாயாவதியும் மாயக்கலையில் வல்லவர் ஆயிற்றே. இவளும் தன்னை மணம் புரிய மயக்குகின்றாளோ என்ற எண்ணத்தில் மாயாவதி உருவாக்கிய காட்சிகளை தன் மாய சக்தியைக் கொண்டு சோதித்தறிய முற்பட்டார் பிரத்தியும்னன். தன் மாய சக்தியைக் கொண்டு சோதித்த பின்பே, மாயாவதி உருவாக்கி தனக்கு காண்பித்த காட்சிகள் யாவும் மெய்யே என்று தன் மனதளவிலும், சிந்தனை அறிவாலும் உணர்ந்து கொண்டார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்