சம்பரன் தன்னை நெருங்கி இன்பம் அடைய வரும் வேளைகளில் தான் கற்ற மாய சக்திகளால் அவனது நினைவுகளில் மட்டும் அவள் இருப்பது போல் உருவாக்கி, அவனையும் தனது மாயசக்தியைப் பயன்படுத்தி மயக்கினாள் மாயாவதி. அதுமட்டுமின்றி இசை இசைப்பதில் வல்லவளாகவும் திகழ்ந்தாள். தன் இசையால் சம்பரனின் நினைவுகளை அவ்வப்போது மாற்றி அமைத்தாள். பின்பு, அரண்மனையில் சமையல்காரர்களின் தலைமை சமையலராகவும் இருந்து வந்தாள். அரண்மனையை சுத்தம் செய்து பாதுகாக்கும் பணி அவளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அனுதினமும் தான் இவ்விதம் அகப்பட்டு இருப்பதை விரும்பாத மாயாவதி இவ்விடத்திலிருந்து தன்னை விடுவித்து, சுதந்திரம் அளிக்கக்கூடிய வல்லமை கொண்டவர் எப்பொழுது வரப்போகிறார் என்று மனதில் எண்ணி தனது விதியை நினைத்து கலங்கி கொண்டே இருந்தாள். மாயாவதிக்கு சுதந்திரம் அளிக்கக்கூடிய வல்லமை கொண்ட மாபெரும் வீரன் உதிக்கத்தொடங்கினான்.
பிரத்தியும்னன் துவாரகையில் ருக்மணிக்கும், கண்ணனுக்கும் பிறந்தவர் ஆவார். அவர் பிறந்த ஆறாம் நாளில் தன்னை கொல்ல வல்லமை உடைய அந்த காலனை அழித்தே தீரவேண்டும் என்று சம்பரன் மாறுவேடம் தரித்து துவாரகைக்குச் சென்றான். பின்பு எவரும் அறியாவண்ணம் அக்குழந்தையை அவ்விடத்திலிருந்து தூக்கிக்கொண்டு மறைந்துவிட்டான்.
துவாரகையில் கண்ணனின் குழந்தை காணவில்லை என்று பலரும் அக்குழந்தையைத் தேடி அலைந்து கொண்டே இருந்தனர். ஆனால் கண்ணனோ நிகழ்ந்தவற்றை அறிந்தவர். அதனால் எவ்வித கலக்கமும் இன்றி காலம் பதில் உரைக்கும், அனைவரும் அமைதி கொள்ளவேண்டும் என்று அங்கிருந்தவர்களை அமைதிக்கொள்ள செய்து தனது மனைவியையும் ஆறுதல் படுத்தினார்.
கரங்களில் ஏந்திய அக்குழந்தையை கண்ட சம்பரன், அதன் அழகிலும் கண்டோரை மனம் மாற்ற செய்யும் புன்னகையையும் கொண்ட அந்த சிறு குழந்தையை கொல்ல மனமில்லாமல் லவண சமுத்திரம் என்ற கடல் பகுதியில் அதிக மீன்கள் இருக்கும் அப்பகுதியில் எரிந்து அவ்விடம் விட்டு சென்றான். பல மீன்கள் சூழ்ந்த நிலையில் அங்கிருந்த ஒரு மீனானது அக்குழந்தையை இறையாக எண்ணி விழுங்கியது. கண்ணனின் புதல்வனாக பிறந்த குழந்தையானது மீனின் வயிற்றில் செரிக்கப்படாமல் உயிருடன் இருந்தது.
அச்சமயத்தில் மீன்பிடிப்பதற்காக வந்த மீனவர்களின் வலையில், குழந்தையை விழுங்கிய மீனானது அகப்பட்டு தனது உயிரை நீத்து குழந்தையின் உயிரைக் காத்தது. அங்கு அகப்பட்ட மீன்கள் அனைத்தையும் சம்பரன் ராஜ்ஜியத்தை சேர்ந்த மீனவர்கள் பிடித்தனர். பின்பு, மீன்கள் அனைத்தும் அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அரண்மனைக்கு வந்த மீன்கள் அனைத்தும் அரண்மனையிலுள்ள சமையலறைக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் மீன்கள் அனைத்தையும் மாயாவதி அறுக்க முற்பட்டப்போது அங்கு இருந்த ஒரு மீனின் வயிற்றில் ஒரு அழகான குழந்தை உயிரோடு வந்தது. அதை கண்டதும் ஆச்சர்யம் கொண்டாள் மாயாவதி.
நாரதர் வருகை :
இந்த அழகிய குழந்தை எவ்வாறு இந்த மீனின் வயிற்றினுள் வந்தது? ஒரே விந்தையாக உள்ளது. இதை யார் செய்து இருப்பார்கள்? என மாயாவதி சிந்தித்து கொண்டிருந்த வேளையில் சர்வலோகங்களிலும் பயணிக்கும் முனிவரான நாரத முனிவர், சம்பரன் ஆட்சி செய்யும் அவனின் அரண்மனையிலுள்ள சமையலறையில் மாயாவதி இருக்கும் இடத்தில் தோன்றினார். நாரத முனிவரை கண்ட மாயாவதி அவரை வணங்கி, பின்பு நிகழ்ந்தவற்றை அவரிடம் கூறி இச்செயலை யாரால் செய்ய இயலும்? எங்களை மிஞ்சிய அளவில் மாயக் கலைகளில் வல்லவர்கள் உள்ளார்களா? என்ற வகையில் விடை காணும் பொருட்டு அவரிடம் கேள்வியை தொடுத்தாள்.
பூர்வ ஜென்ம பலனை அறிதல் :
நாரதர் மாயாவதியிடம் ஆயக்கலையில் நீங்கள் அறிந்தது சிறு பகுதி மட்டுமே என்றும், பல கலைகளை அறிந்த ஒரு மாயக்கண்ணன் உள்ளார் என்றும் கூறினார். பின்பு இந்த குழந்தையானது கிருஷ்ணரின் குழந்தை. தன்னை அழிப்பதற்கான வல்லமை கொண்ட இந்த குழந்தையை சம்பவ இடத்தில் இருந்து எடுத்து வந்து கடலில் சம்பரன் எறிந்துவிட்டான் என்றும், பின்பு இக்குழந்தை முற்பிறவியில் மன்மதனாக இருந்ததாகவும், அந்த மன்மதனுக்கு மனைவியாக ரதிதேவி என்னும் பெயரில் நீ வாழ்ந்து வந்தாய் என்றும் மாயாவதியிடம் எடுத்துக்கூறினார். உன் வாழ்க்கையில் உள்ள துன்பங்களை களைக்கக்கூடிய மாவீரனும் இவரே என்றும் கூறினார். மேலும், மாயாவதியிடம் நீ இக்குழந்தையை வளர்த்து ஆளாக்கி உனக்கு இருக்கும் இன்னல்களை களைந்து, அவரை காதல் மணம் புரிந்து வாழ்வாயாக... என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு மறைந்து சென்றார் நாரதர்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக