Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 123


மாயாவதியின் எழில் மிகு தோற்றமே அவரின் வாழ்க்கையை திசை திருப்பி முற்பிறவியில் இழந்த தன் நாயகனோடு தன்னை இணைத்துச் செல்லும் பாதைக்கு அழைத்துச் சென்றது. காண்போரை மதி இழக்கச் செய்யும் மாயாவதியின் அழகை கேள்வியுற்ற அசுரன் ஒருவன் அவளை அடையும் பொருட்டு அவள் இருக்கும் இடத்தை தேடி வந்தான். அவன் கேள்வியுற்றதை விட அவள் மிகுந்த அழகுடன் இருந்தாள்.

அவளின் அழகில் அவன் வந்த எண்ணத்தை மறந்து மாயாவதியின் அழகில் தன்னை இழந்து அவள் நினைவில் இருந்தான் சம்பரன் என்னும் அசுரன். இச்சிறு வயதில் இவ்வளவு அழகு கொண்டிருக்கும் இவள் வளர்ந்திருக்கும் தருணத்தில் எவ்வளவு அழகாக இருப்பாள் என எண்ணினான் சம்பரன்.

தான் கண்ட அழகிகளை காட்டிலும் அழகிற்கு அழகியாக விளங்கும் இந்த பேரழகியை எவ்விதத்திலாவது தான் அடைந்தே தீரவேண்டும் என்று எண்ணினான். சிறிது சிந்தித்த சம்பரன் தனது தோற்றத்தை மாற்றி அவள் அருகில் சென்று தனது அசுர சக்தியால் அவளை மயக்கி அந்த பேரழகியை தன்னுடைய இருப்பிடத்திற்கு தனது மாய சக்திகளின் மூலம் தூக்கிச் சென்றான்.

தனது மாய சக்தியால் மயக்கி தூக்கி வந்த மாயாவதியை தனது அரண்மனையில் சிறிது மயக்க நிலையில் கண்டு அவன் பெரிதும் மகிழ்ந்தான். பின்பு, இந்த பேரழகியை தன்னிடமிருந்து எவரேனும் பிரித்து விடுவார்களோ? அல்லது இந்த பேரழகியே தன்னை விட்டு சென்று விடுவாளோ? என்ற எண்ணம் அவனிடம் உருவாயிற்று.

பின்பு, இந்த பேரழகியை எவரும் கண்டறிய இயலாத வகையில் அவளைச் சுற்றிலும் ஒரு மாய வலையை உருவாக்கினான். அவ்வலையில் அகப்பட்டிருக்கும் வரையில் மாயாவதியை எவராலும், எந்த சக்தியாலும், எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும் கண்டறிய இயலாத வகையில், அவ்வலை ஒரு பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்டு கொண்டிருந்தது.

மயக்கம் தெளிந்த மாயாவதி தன்னை விட்டு சென்று விடுவாளோ? என எண்ணிய சம்பரன், அவளின் நினைவுத்திறன் முழுவதையும் அழித்து, தான் வளர்ப்பது போல அவளது நினைவுத்திறனை மாற்றி அமைத்து அவளை தன்னோடு வளர்த்து வந்தான்.

பிள்ளைப்பருவம் முடிந்து கன்னிப்பருவம் அடைந்ததும் இந்த பேரழகியை தானே திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஆனால், அதை வெளிக்காட்டாமல் அவளை அனுதினமும் அன்புடன் வளர்த்து வந்தான்.

மாயாவதியின் மீது கொண்ட அன்பினாலும், அவள் தனக்கே உரியவளாக போகின்றாள் என்ற எண்ணத்தினாலும் தனக்குத் தெரிந்த மாய வித்தைகளை கற்றுக் கொடுத்தான் சம்பரன். கன்னிப் பருவம் அடைந்ததும் அவளை தனது பத்தினியாக மாற்ற அவன் முடிவெடுத்தான். பின்பு ஒருநாள் அளவுக்கு அதிகமான மது அருந்தியதால் அவனது மாய சக்தியானது குறைந்துவிட்டது. இதன் விளைவாக மாயாவதியை சுற்றி சம்பரன் அமைத்திருந்த மாய வலையும் தன் பலத்தை இழக்கத் தொடங்கியது. பின்பு மாயாவதிக்கு தனது பழைய நினைவுகள் யாவும் நினைவுக்கு வர தொடங்கின. தான் யார்? என்றும், தன் தந்தையார் யார்? என்றும் அறிய தொடங்கினாள்.

சம்பரன் கற்றுக்கொடுத்த மாய சக்திகளை கொண்டு தான் இங்கு வந்த விதத்தை அறிந்து கொண்டது மட்டுமில்லாமல் தன்னை வளர்க்கும் சம்பரனின் எண்ணத்தையும் புரிந்து கொண்டாள் மாயாவதி. காலங்கள் யாவும் விரைந்தோட தொடங்கின. பிள்ளைப் பருவம் முடிந்து கன்னிப் பருவம் எய்தாள் மாயாவதி. பின் சம்பரன் தனது எண்ணத்தை செயல்படுத்தத் தொடங்கினான். அதாவது மாயாவதியை மணக்க விரும்பினான். சம்பரன் தனது மாய சக்திகளைக் கொண்டு மாயாவதி தன்னால் வளர்க்கப்பட்டவள் என்ற எண்ணத்தை அவள் நினைவில் இருந்து எடுக்க முற்பட்டான். சம்பரன் அறியாத பல விஷயங்களையும் அறிந்த மாயாவதி இதை உணரும் தருவாயில், அவனை விட்டு விலகும் நிலையில் சம்பரன் தனது மாய சக்தியால் அவள் அறிந்த அனைத்து தகவல்களையும் அழித்து மாயாவதியை தனது பத்தினியாக மாற்றிக் கொண்டான்.

ஆனால், மாயாவதி தன்னைப்பற்றி அறிந்ததும், தன்னை வளர்த்த அசுரன் கற்றுக்கொடுத்த மாய சக்திகளைக் கொண்டு தன் மனதிலும், நினைவிலும் இருந்த எண்ணங்களை ஒருமுகப்படுத்தி அதைத் தன்னுடன் இருக்குமாறு எவராலும் அழிக்க இயலாத வகையில் பல நுட்பமான சக்திகளைக் கொண்டு அதை பாதுகாத்து வந்தாள். தன் மாய சக்தியானது அவளது நினைவுத்திறனை அழித்தது போல் சம்பரன் உணர்ந்தான். ஆனால், உண்மையில் அவளது நினைவுத்திறனானது அழிக்கப்படாமல் அவளுடனேயே பாதுகாப்புடன் இருந்தது. அவன் செய்த மாய சக்திகளை தன்னை பாதுகாக்கும் பொருட்டு பயன்படுத்திக் கொண்டாள் மாயாவதி. அதாவது தன்னை பெயரளவில் மட்டும் அவனது பத்தினியாக மாற்றிக் கொண்டாள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக