புதன், 4 மார்ச், 2020

சிவபுராணம்..! பகுதி 122


ம்பெருமான் கிருஷ்ணரிடம் கூறியதை அறிந்த பாணாசுரன், தன் பக்தர்களின் மீது சிவபெருமான் கொண்ட அன்பை உணர்ந்து கண்களில் நீர் வழிந்தோட எம்பெருமானை பலவாறாக துதித்துப் போற்றினான். அவ்வேளையில் நந்திதேவர் பாணாசுரனின் அருகில் சென்று நீர் கொண்ட பக்தியின் காரணமாக எம்பெருமான் உனக்களித்த வரத்தினால் மட்டுமே இன்று நீர் உயிருடன் இருக்கின்றாய் என்று கூறினார்.

மேலும், உன் வாழ்க்கையில் இனி நடக்கும் அனைத்து செயல்களிலும் இருந்து விடுபட சர்வலோக பிதாவான சிவபெருமானிடம் சரண் அடைவீராக என்று கூறினார். நந்திதேவரின் கூற்றுக்கேற்ப பாணாசுரனும் தன் மனம் மற்றும் சிந்தனைகள் என யாவற்றிலும் எம்பெருமானின் சிந்தனைகளை நிறுத்தி, தனது இரு கரங்களை இழந்த நிலையிலும் தனது உடல் முழுக்க செங்குருதியானது நிலையில்லாமல் வெளிப்பட்டு இருப்பினும் சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாய மலையை முழு பக்தியுடனும், மனதில் ஆணவம், கர்வம், உலக ஆசைகள் என யாவற்றையும் மறந்து சிவபெருமானை நோக்கி பயணிக்கத் தொடங்கினார்.

கைலாய மலையை அடைந்த பாணாசுரன் எம்பெருமானை பலவிதமான தோத்திரங்களாலும், பாடல்களாலும், அதற்கு ஏற்ப அபிநயங்களுடன் நிருத்தியம் செய்தான். தன் பக்தர்களின் இடத்தில் அதிக அன்பும், கருணையும் கொண்ட சிவபெருமான், பாணாசுரன் பாடிய பாடல்கள் மட்டும் தோத்திரங்களில் மனம் மகிழ்ந்து அவனுக்கு காட்சியளித்தார். பின்னர் சிவபெருமான், பாணாசுரனை நோக்கி உன் பாடல்களாலும், உன் பக்தியாலும் யாம் மனம் மகிழ்ந்தோம்... என்றும், வேண்டும் வரத்தைக் கேட்பாயாக... என்றும் கூறினார்.

பாணாசுரன் தனது சிந்தனைகளால் எம்பெருமானை வணங்கி பிரபுவே!! என் மனதில் குடிகொண்டிருந்த ஆணவத்தையும், அசுர குணத்தையும் அழித்து அனைவரிடத்திலும் அன்புடன் பழகும் தன்மை உடையவனாக, மனதில் எந்தவிதமான கோப வெறுப்புகள் இன்றி அனைவரிடத்திலும் தோழமை கொண்ட எண்ணத்துடன் பழக வேண்டும் என்றும், என் மனதில் என்றும் தங்களின் சிந்தனைகள் நிறைந்திருக்க வேண்டும் என்றும் வேண்டினார். பின்பு தனக்குப்பின்னால் என் மருமகனான அநிருத்தனுக்கும் என் மகளான உஷைக்கும் பிறக்கப் போகின்றவனே அரசனாக வேண்டும் என்று சிவபெருமானிடம் தனது வரங்களை வேண்டி நின்றான்.

எம்பெருமானும் பாணாசுரன் வேண்டிய வரத்தினை தந்தருளினார். பின்பு பாணாசுரனை தனது சிவகணங்களில் ஒருவனாக ஆக்கினார். எம்பெருமானின் கணங்களில் இணைந்த அடுத்த கணப்பொழுதே வெட்டுப்பட்ட பாணாசுரனின் கரமானது மீண்டும் புதிதாக தோன்றின. தனது இரு கரங்களையும் கூப்பி, சர்வ லோகத்திற்கும் அதிபதியாகவும், அனைத்து ஜீவராசிகளிலும் இருந்து அனைத்து உயிர்களுக்கும் பிதாவான சிவபெருமானை உள்ளம் உருக துதித்தான்.

கிருஷ்ணரின் பேரனான அநிருத்தன் வரலாற்றை போன்றே அநிருத்தனின் தந்தையான பிரத்தியும்னனின் வாழ்க்கையும் வித்தியாசமாக அமையப் பெற்றவையாகும். பிரத்தியும்னன் என்பவன் மன்மதனின் மறுஜென்மம்.

சிவன், பார்வதி தேவி இணையும்பொழுது சிவபெருமானின் தியானத்தை கலைக்க அவரை நோக்கி அம்பு எய்த மன்மதன், எம்பெருமானின் நெற்றிக் கண் திறந்து முழுவதுமாக எரிக்கப்பட்டார். எனவே, ரதிதேவி சிவபெருமானிடம் தன்னுடைய பதியானவர் இல்லாததால் தான் அடைந்த இன்னல்களை எடுத்துக்கூறி தனக்கு இதிலிருந்து விமோசனம் அளிக்க வேண்டி நின்றாள்.

எனவே, சிவபெருமான் காமதேவன் செய்த செயல்களை யாவும் மறந்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் புலனாகும்படி காமதேவனை தோற்றுவித்தார். உடலின்றி இருப்பினும் ஸ்ரீகிருஷ்ணர் துவாரகையில் ருக்மணியுடன் சேர்ந்து புதல்வர்களை தோற்றுவிப்பார். அந்நிகழ்வின்போது பிரத்தியும்னன் என்ற பெயரில் உடலற்ற காமதேவன் உடல் பெறுவான் என்ற வரம் அளித்தார்.

சிவபெருமான் அளித்த வரத்தின் அடிப்படையில் ரதிதேவியின் கணவனான மன்மதன், கிருஷ்ணரின் புதல்வனாக துவாரகையில் பிரத்தியும்னன் என்ற பெயரில் அவதரித்து பிறந்து வளர்ந்து வந்தார். பிரத்தியும்னன் கிருஷ்ணரை போன்றே அழகில் சிறந்தவராகவும், காண்போரைக் கவரும் விதமாகவும் வளர்ந்து வந்தார். பிரத்தியும்னனின் பிறப்பு ஒரு அசுரனை வதம் செய்வதற்காகவே என்று எம்பெருமான் வரம் அளித்திருந்தார்.

சம்பரன் என்னும் அசுரன் தனது அழிவிற்கு காரணமாக இருக்கும் குழந்தை, இந்த உலகில் பிறந்து விட்டதை உணர்ந்தான். அக்குழந்தையை எவ்விதத்திலாவது நாம் அழித்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தான். எனவே, தனது மந்திர சக்திகளைக் கொண்டு தன்னை அழிக்கக்கூடிய வல்லமை கொண்ட அக்குழந்தையை கண்டான். அக்குழந்தை கிருஷ்ணருக்கு மகனாகப் பிறந்த பிரத்தியும்னன் என்பதை அறிந்து கொண்டான்.

ரதிதேவியும் சிவபெருமானின் அருளால் மயனுக்கு மகளாக பிறந்து மாயாவதி என்னும் பெயரில் அழைக்கப்பட்டு அன்போடு வளர்க்கப்பட்டு வந்தாள். அவளின் பெயருக்கு தகுந்தாற்போல் அனைவரையும் கவரும் விதமாக எழில் மிகுந்த தோற்றத்தையும், அழகிய விழிகளையும் கொண்டிருந்தாள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்