Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 மார்ச், 2020

சூர்ப்பனகையின் கோபம்!


பெண்மணியே! நீயோ விஸ்ரவசுவின் மகள். அவர் ஒரு அந்தணர். நானோ தசரதரின் ராஜகுமாரன். அந்தணரின் மகளை இராஜகுமாரர்கள் மணந்து கொள்ளக் கூடாது. அது மட்டுமின்றி உன் தாய், தந்தை, இராவணன் முதலிய உன் சகோதரர்களின் அனுமதியின்றி உன்னை மணந்து கொள்வது தவறான செயல் ஆகும். நான் திருமணம் ஆனவன். நீ என்னை விரும்புவது முறையற்ற செயல் ஆகும் என்றார், இராமர். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது சீதை வந்து கொண்டு இருந்தாள். சீதையின் அழகை பார்த்து சூர்ப்பனகையே ஒரு நிமிடம் மயங்கி போனாள். சீதை ராமனை நோக்கி வருவதை சூர்ப்பனகை கவனித்தாள்.

 சூர்ப்பனகை இராமனிடம், பெருமானே! தங்களை நோக்கி வருபவள் ஒரு அரக்கி. நீங்கள் அவளை நம்ப வேண்டாம். இவள் மாய வேலை செய்வதில் மிகவும் வல்லவள் என்றாள். இராமர், சூர்ப்பனகை நல்லவள் அல்ல தீயவள் என்பதை உறுதி செய்து கொண்டார். அவளிடம் விளையாட ஆரம்பித்தார். இராமர் சூர்ப்பனகையிடம், நானோ திருமணம் ஆனவன். என்னை நோக்கி வருபவள் என் மனைவி சீதை. திருமணம் ஆன ஒரு ஆண்மகனை மறுபடியும் திருமணம் செய்ய சொல்வது உனக்கு தீமையை உண்டாக்கும். உனக்கு நான் ஒரு வழியை காட்டுகிறேன். இதோ என் தம்பி இலட்சுமணர் இருக்கிறான். அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். நீ வேண்டுமானால் அவனை திருமணம் செய்து கொள் என்றார்.

 சூர்ப்பனகையும் இராமனின் சொல்படி அவனை விட்டுவிட்டு இலட்சுமணனிடம் பேச ஆரம்பித்தாள். வீரனே! உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வா! நாம் இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருப்போம் என்றாள். இலட்சுமணரும் அண்ணனுடன் சேர்ந்து கொண்டு, நீ என்ன பைத்தியமா? நானோ அண்ணனுக்கு அடிமையாக இருக்கிறேன். நீ என்னை திருமணம் செய்து கொண்டால் அடிமைக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும். நீ நன்றாக சிந்தித்துப்பார். இதற்கு பதில் என் அண்ணன் இராமனை இரண்டாவது தாரமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். சீதைக்காக நீ பயப்பட தேவையில்லை. என் அண்ணனையே திருமணம் செய்து கொள் என்றார். சூர்ப்பனைகையும் இலட்சுமணனனின் பேச்சை சரி என நினைத்து மறுபடியும் இராமனிடம் சென்று சீதையை பார்த்தாள். இவளால் தான் நீங்கள் என்னை திருமணம் செய்ய மறுக்கிறீர்கள். இவளை நான் ஒழித்து விடுகிறேன். பிறகு தாங்கள் என்னை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி கொண்டு சீதையின் மீது பாய்ந்தாள்.

 சீதை பயந்து இராமனின் பின் ஒளிந்து கொண்டாள். இதற்கு மேல் விளையாடினால் ஆபத்தாகிவிடும் என நினைத்து இலட்சுமணனிடம், இலட்சுமணா! இவளுக்கு நீ நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்றார், இராமர். இராமர் சீதையை பர்ணசாலைக்கு அழைத்துச் சென்றார். இலட்சுமணர், அரக்கியிடன் சண்டையிட்டு அவளின் காதையும், மூக்கையும் அறுத்து துரத்தி அனுப்பினார். இரத்தம் வழிந்தோடியது. அவள் வலியால் அலறினாள். பிறகு சூர்ப்பனகை அங்கிருந்து மாயமாக மறைந்து சென்றாள்.

 சூர்ப்பனகை நேராக, அரக்கர்கள் சூழ அமர்ந்திருக்கும் ராட்சஷ தலைவனான கரன் முன் நின்றாள். கரன், சூர்ப்பனகையின் நிலையை பார்த்து என்ன ஆயிற்று? என விசாரித்தான். என் நிலைமைக்கு தவக்கோலத்தில் வனத்திற்கு வந்திருக்கும் இராமனும், இலட்சுமணுனும் தான் காரணம் என்றாள். கரன், எனக்கு ஒன்றும் புரியவில்லை சற்று தெளிவாக சொல் என்றான். சூர்ப்பனகை, தசரதரின் இரண்டு குமாரர்கள் தவக்கோலம் பூண்டு இங்கே வந்து இருக்கிறார்கள். அவர்களுடன் ஒரு பெண்ணும் இருக்கிறாள். அப்பெண்ணின் காரணமாக அவர்கள் என்னை இக்கதிக்கு ஆளாக்கி விட்டார்கள். நீ உடனே சென்று அவர்களை வதம் செய்துவிட்டு வா என்றாள்.

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக