ஒரு ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒருநாள் தன்னுடைய வீட்டிற்கு அவரது குருவை அழைத்து வந்தார். பணக்காரரின் வீடு மிகவும் பெரியது. இருவரும் அவருடைய வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் குருவே, இந்த வடக்குப் பக்கத்தில் இருந்து தூரத்தில் ஒரு பனைமரம் தெரிகிறதே, அதுவரை என்னுடைய நிலம் உள்ளது. அதேபோல் இதோ இந்த தெற்குப் பக்கத்தில் ஒரு மாமரம் தெரிகிறதே அதுவரையிலும் என் இடம் தான். இதோ மேற்குப் பக்கத்தில் ஒரு கொடிக்கம்பம் தெரிகிறதே அதுவரையிலும் என்னுடைய இடம்தான். வீட்டுக்கு எதிரில் உள்ள கிழக்குப் பக்கத்தில் தெரிவது முழுவதும் என்னுடையதுதான் என்று தன் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களைக் காட்டினார்.
இவ்வளவு சொத்துக்கள் எல்லாவற்றையும் நான் என் கடின உழைப்பால் சம்பாதித்தவைகள். எனக்கு இவ்வளவு வசதிகள் இருந்தும் எனக்கு மன நிம்மதி இல்லாமல் இருக்கிறது என்று குருவிடம் கூறினார்.
குரு அவரை அமைதியாகப் பார்த்துவிட்டு, அவரிடம் எல்லா இடங்களிலேயும் சொத்து சேகரித்து வைத்திருக்கிறாய். உன் உள்ளத்தில் சொத்து சேர்த்து வைத்திருக்கிறாயா? என்று கேட்டார். குரு கேட்டது, பணக்காரருக்கு புரியவில்லை.
உடனே அந்தக் குரு அவரிடம், அன்பு, பாசம், நட்பு போன்ற நல்ல சொத்துக்களை உன் உள்ளத்தில் சேர்க்க வேண்டும். அதுதான் மன நிம்மதியை உங்களுக்கு தரும் என்றார். அப்போதுதான் அந்த பணக்காரருக்கு புரிந்தது.
தத்துவம் :
அழியாமல் என்றும் நிலைத்து இருப்பது அன்பு, பாசம், நட்பு போன்ற நல்ல சொத்துக்கள்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக