வேலூர் மாவட்டம், திருப்பாற்கடல் என்ற கிராமத்தில் காஞ்சிபுரம் அத்தி வரதரை போலவே, மிகவும் அபூர்வமான அத்தி மரத்தினால் ஆன அத்தி ரங்கநாத பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார்..
வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் திருப்பாற்கடல் என்ற ஊர் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 107-வது திவ்யதேசமாக அழைக்கப்படுவது திருப்பாற்கடல். (திருமால் பள்ளிகொண்டிருக்கும் திருப்பாற்கடலை, 107-வது திவ்ய தேசமாக சொல்பவர்களும் உண்டு).
இந்த கிராமத்தில் காஞ்சிபுரம் அத்தி வரதரை போலவே, மிகவும் அபூர்வமான அத்தி மரத்தினால் ஆன அத்தி ரங்கநாத பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார். ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட நிலையில் காட்சி தரும் இந்த பெருமாள் வீற்றிருக்கும் ஆலயமானது, சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும்.
கோவில் வரலாறு:
திருப்பாற்கடலின் ஆதிசேஷன் மேல் சயனித்து கொண்டிருக்கும் திருமாலின், நாபிக் கமலத்தில் இருந்து தோன்றியவர் பிரம்மதேவன். பரம்பொருளின் நாபிக் கமலத்தில் இருந்து பிறந்ததால் பிரம்மனுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரமே அவரை, திருமாலை தரிசிக்க முடியாத நிலைக்குத் தள்ளியது. இதனால் வருந்திய அவர், பூலோகம் வந்து காஞ்சிபுரத்தில் யாகம் செய்ய நினைத்தார்.
சரஸ்வதியை தன்னுடன் வந்து யாகத்தில் கலந்து கொள்ளும்படி அழைத்தார். ஆனால் பிரம்மனுடன் இருந்த பிணக்கு காரணமாக, யாகத்திற்கு வர சரஸ்வதி மறுத்து விட்டார். எனவே தன்னுடைய மற்ற மனைவியரான சாவித்திரி, காயத்ரி ஆகியோரோடு காஞ்சிபுரம் வந்து யாகத்தை தொடங்கினார், பிரம்மதேவன்.
இதனால் கடுங்கோபம் கொண்ட சரஸ்வதி, பிரம்மனின் யாகத்தை அழிக்கும் நோக்கில், வேகவதி நதியாக உருவெடுத்து யாகம் நடைபெற்ற இடத்தை நோக்கி ஓடிவந்தார். அப்போது பிரம்மதேவன், திருமாலை நோக்கி பிரார்த்திக்க, இறைவன் ஆதிசேஷன் மீது சயனித்த கோலத்தில் வெள்ளம் வரும் பாதையின் குறுக்கே படுத்து நதியை தடுத்தார்.
யாகமும் பூர்த்தியடைந்தது. பிரம்மாவின் பிரார்த்தனைக்கு இணங்கி பக்தர்களுக்கு நிரந்தரமாக சேவை சாதிக்க இறைவன் ஒப்புக்கொண்டார். ஷீராப்தி (திருப்பாற்கடல்)யில் உள்ள திருக்கோலத்துடனேயே இந்த தலத்திலும் இறைவன் காட்சி தருவதால், இறைவனுக்கு ‘ஷீரப்திநாதன்’ என்று பெயர்.
ஊரின் பெயரும் திருக்கரைபுரம் என்றானது. அதுவே மருவி தற்போது ‘திருப்பாற்கடல்’ என்று அழைக்கப்படுகிறது.
வேகநதி என்ற பாலாற்றின் நடுவில் சயனித்து கொண்டு இருப்பதால், இத்தல இறைவனுக்கு ‘ரங்கநாதர்’ என்ற பெயர் வந்தது. இந்த பெருமாளை தரிசனம் செய்தால் சித்ரகுப்தன் எழுதி வைத்த நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
இத்தல மூலவரான அத்தி ரங்கநாதர், ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட நிலையில் காட்சி தருகிறார். 24 கால் மண்டபத்தை கடந்து உள்ளே சென்றதும் இடப்புறம் தாயார் சன்னிதி வருகிறது. அங்கு ரங்கநாயகி தாயார் அற்புதமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.
பன்னிரு கரங்கள் கொண்டு விளங்கும் இந்த அன்னையின் முன் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரையும், மற்ற கரங்கள் தாமரை மலர்களைத் தாங்கியும் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாயகி தாயாருக்கு ‘பெரிய பிராட்டி’ என்ற பெயர் உண்டு.
அதாவது ‘எல்லாத் தாயார்களுக்கும் பெரியவர் அல்லது மூத்தவர்’ என்று பொருள். திருப்பாற்கடல் ரங்கநாயகி தாயாரும், ஸ்ரீரங்கம் தாயார் போல ‘பெரிய பிராட்டி’யாகவே காட்சி தருகிறார்.
பொதுவாக தாய்மார்களுக்கு பெற்ற மகன்களை விட, மகள்கள் இடத்தில்தான் பாசம் போகும் என்பார்கள். அதேபோல தான் இந்த தாயாருக்கு பெண்கள் இடத்தில் அதிக பாசம் உண்டு.
திருமணமாகாத பெண்கள், இந்த ரங்கநாயகி தாயாரை தேன் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால், அன்னை மனம் குளிர்ந்து திருமணம் செய்து வைப்பாள் என்பது ஐதீகம்.
இதேபோல குழந்தை இல்லாதவர்கள், தாயாருக்கு பாலால் திருமஞ்சனம் செய்து சன்னிதி படியை நெய்யால் மொழுகி, சர்க்கரையால் கோலமிட்டால் குழந்தை பேறு என்னும் சந்தான பாக்கியத்தைத் தருகிறாள்.
ரங்கநாயகி தாயாரின் அனுமதி பெற்று அத்தி ரங்கநாதர் சன்னிதியை அடைந்தால், அங்கு மூலவர் ஆனந்த சயன கோலத்தில் சேவை சாதிக்கிறார். சுமார் 9 அடி நீளமும், 3 அடி உயரமும் உள்ள ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நிலையில் இந்த பெருமாள் அருள்பாலிக்கிறார்.
அவரது திருமுடி அருகே ஸ்ரீதேவியும், திருவடி அருகே பூதேவியும் இருக்க, பெருமாளின் நாபியில் எழும் தாமரைத் தண்டின் மீது பிரம்மதேவன் அமர்ந்திருக்கிறார். இவை அனைத்துமே அத்தி மரத்தால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.
வைகுண்ட ஏகாதசியன்று அத்தி ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்தால், சொர்க்கத்திற்கு செல்லலாம் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு திருமஞ்சனம் கிடையாது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தைலக்காப்பு நடைபெறும். இந்த நாட்களில் பெருமாளின் முக தரிசனம் பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும்.
புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகளிலும் பூவங்கி சேவை நடைபெறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பெருமாளுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இக்கோவிலின் தல விருட்சமாக வன்னி மரமும், பின்ன மரமும் இருந்து வருகிறது. திருமணம் ஆகாத பெண்கள், வன்னிமரத்தை 5 முறை வலம் வந்தால் தீய காற்றுகள் அண்டாது என்பது நம்பிக்கை.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக