ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த மார்ச் மாதத்தில் முதல் முறையாக 5 மில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. ஆனால், கிராமப்புறங்களில் யூபிஐ பேமெண்ட் வசதியை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. அங்கு 3 முதல் 7 சதவீத மக்கள் மட்டுமே யூபிஐ பேமெண்ட் வசதியை பயன்படுத்துகின்றனர்.
நாட்டில் சுமார் 40 சதவீத கிராம மக்களுக்கு யூபிஐ மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் வசதிகள் குறித்து தெரியவில்லை அல்லது அவற்றை எப்படி பயன்படுத்துவது என தெரியவில்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிஜிட்டல் பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்தினால், தங்கள் பணம் திருடப்படும் என்று பலர் அச்சம் கொள்கின்றனர்.
கிராமப்புறங்களில் வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் சார்ந்த விஷயங்கள் குறித்து ஒன்பிரிட்ஜ் என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் இந்த விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யாத 40 சதவீத மக்களில் 20 சதவீதம் பேர், ரொக்கப் பணத்தை கொடுத்து பரிவர்த்தனை செய்வதையே விரும்புவதாக தெரிவித்தனர். மேலும் 10 சதவீத மக்கள், தங்கள் அக்கவுண்ட்களில் போதிய பணம் இல்லை அல்லது அக்கவுண்ட் செயல்பாட்டில் இல்லை என்பதே யூபிஐ வசதியை பயன்படுத்தாமல் இருப்பதற்கு காரணம் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து ஒன்பிரிட்ஜ் அமைப்பின் நிறுவனரும், முதன்மை செயல் அதிகாரியுமான மதன் பதாகி கூறுகையில், “அனைவரையும் நிதி சார்ந்த மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பிற்குள் கொண்டு வருவதே எங்கள் நோக்கம் ஆகும். இதைச் செய்தால் தான், மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பலன் அடைய முடியும். கர்நாடக மாநில கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு மையம் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து எங்கள் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.
சராசரி பரிவர்த்தனை அளவு
கிராமப்புற வாடிக்கையாளர்கள் மத்தியில், 30 நாட்கள் கால அளவிலான பரிவர்த்தனைகள் குறித்து ஆயிரக்கணக்கான பரிவர்த்தனைகளை ஒன்பிரிட்ஜ் அமைப்பு ஆய்வு செய்தது. இதில், சராசரியாக ரூ.1,450 என்ற தொகைக்கு பரிவர்த்தனை நடைபெற்றிருப்பது தெரியவந்தது.
கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு அல்லது சேவைகளைப் பெறுவதற்கு சுமார் 40 சதவீத பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, ஹோட்டல்கள், மளிகை கடைகள் மற்றும் ஹார்ட்வேர் கடைகள் போன்றவற்றில் யூபிஐ பரிவர்த்தனைகள் அதிகமாக உள்ளன. சுமார் 11 சதவீத பரிவர்த்தனைகள் என்பது தனிநபர்களுக்கு இடையிலான கடன் வழங்குதல் அல்லது திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றுக்காக நடைபெற்றுள்ளது.
பரிவர்த்தனைகளை அதிகரிக்க இலக்கு
நாட்டில் 77 மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒன்பிரிட்ஜ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. உள்ளூர் பகுதிகளில் உள்ள 10,000 வியாபாரிகளை ஒருங்கிணைப்பதன் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நெட்வொர்க் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், அதன் மூலமாக அடுத்த 12 மாதங்களில் யூபிஐ பரிவர்த்தனைகளை 20 முதல் 25 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக