ராஜஸ்தான் மாநிலம், கேஷாராய்பட்டன், பூந்தி எனும் ஊரில் அருள்மிகு கேசவராய்ஜி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சென்னையில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் ரயில்கள் கோட்டா என்ற ஊரில் நிற்கும். கோட்டாவில் இருந்து சுமார் 15 கி.மீ. சென்றால் கேஷாராய்பட்டன் சம்பல் நதிக்கரை வரும். அங்கிருந்து படகில் அக்கரையில் உள்ள கோயிலை அடையலாம்.
இந்த கோயிலின் சிறப்பு என்ன?
கேஷாராய்பட்டன் என்பதிலுள்ள பட்டன் என்பதற்கு நதிக்கரை ஓரம் என்று பொருள். இந்தப் பெயருக்கேற்ப அருள்மிகு கேசவராய்ஜி திருக்கோயில் சம்பல் நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோயிலின் அமைப்பு காசி போல் உள்ளது.
இந்தக் கோயில் மிகப்பெரிய மேடையின் மேல் கட்டப்பட்டுள்ளது. சதுர வடிவிலான கருவறையின் மேல் கட்டப்பட்ட ராஜகோபுரம், கூம்பு வடிவில் உள்ளது.
தேவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், மலர்கள், மிருகங்கள், அரசர்களின் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தின் உச்சியில் கலசம் உள்ளது. வாயிற் கதவுகள் ஏதோ மாளிகைக்குள் நுழைவது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றன.
கோயிலின் உட்புறத்தில் நமஸ்கார மண்டபத்தை ஜக்மோகன் என்று அழைக்கின்றனர். இது ராஜதர்பார் போல் ஜொலிக்கிறது. உப்பரிகைகளில் இங்கும் சிற்பிகளின் கைத்திறன் பளிச்சிடுகிறது.
இங்குதான் கேசவர் கொலு வீற்றிருக்கிறார். இவரை கேசவ்ராய்ஜி என்கின்றனர். இவர் வெள்ளைக் கல்லால் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளதுபடி காட்சியளிக்கிறார். (கருமையான ஒரு விக்ரகம் கோயிலின் வேறு இடத்தில் உள்ளது).
வேறென்ன சிறப்பு?
இடது கையில் சக்கரம். வலது கையில் சங்கு. பட்டு, பீதாம்பரத்துடன் அழகாய் காட்சி தருகிறார். மார்பில் ஹாரம் பளபளக்கிறது. பூஜைகள் புஷ்டிமர்க்ய சம்பிரதாயத்தில் செய்யப்படுகிறது.
மாலை வேளையில் இக்கோவிலிற்கு சென்றால், கோயிலின் சுற்றுச்சூழல் மிகவும் ரம்மியமாக இருக்கும்.
இந்த கோயிலில் என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன?
இங்கு நவம்பரில் கார்த்திக் பூர்ணிமா விசேஷமாக நடக்கும். கார்த்திகை மாதம் பௌர்ணமியை ஒட்டி 15 நாட்கள் இந்த விழா நடக்கிறது. இந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள், சம்பல் நதியில் நீராடி கேசவரை வழிபடுவார்கள்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
நினைத்த காரியங்கள் நிறைவேற இங்குள்ள கேசவனை பிரார்த்தனை செய்கிறார்கள்.
என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் சுவாமிக்கு அர்ச்சனை செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக