Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 2 மார்ச், 2018

கலிங்கம் காண்போம் - பகுதி 31

கலிங்கம் காண்போம் - பகுதி 31

கொனாரக் கோவிலுக்குச் செல்லும் தெரு நல்ல அகலத்தோடு இருக்கிறது. எப்படியும் அறுபதடி அகலம் இருக்கலாம். ஆனால், அத்தெரு தன் இருமருங்கிலும் அரங்கநாதன் தெருவைப் போன்ற நெரிசலில் தத்தளிக்கிறது. இடைவெளியே இல்லாமல் பொருட்கடை போட்டுவிட்டார்கள். ஒவ்வொரு கடையிலும் அவ்வூர்க்கு வந்ததற்கான நினைவைத் தூண்டும் கைவினைப் பொருள்களை விற்கிறார்கள். கடைகள்தாம் இப்படி என்றால் கடைத்தெரு முழுக்கவும் நடமாடும் விற்பனையாளர்கள் நம்மைத் துரத்துகிறார்கள். இரு கைகளிலும் சுமக்க முடியாத சுமையாய்ப் பொருள்களை வைத்துக்கொண்டு, 'வடிவேலிடம் மதுரை மல்லிக்காரன் பூவிற்க முயல்வதைப்போல' வளைத்து வளைத்து வாங்கக் கோருகிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றை அரைக்கண்ணால் பார்த்துவிட்டால் தீர்ந்தோம் நாம். அதை விற்றே தீர்வது என்ற முனைப்பில் நாம் கோவிலை அடைந்து உள்ளே நுழையும்வரை விடுவதில்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அந்தச் சுற்றுப்புறத்தின் ஒரே பொருளீட்டு வாய்ப்பு கொனாரக் கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்தாம். அவர்கள் பார்த்து ஏதேனுமொன்றை வாங்கிக்கொண்டால்தான் அன்றைய பொழுதுக்கு வரும்படியாகும். நாம் பலவற்றையும் வாங்கிக்கொள்ள விரும்பினோம்தான். ஆனால், நாம் சுமக்க முடியாத முதுகுப் பைச்சுமையோடு அலைந்துகொண்டிருக்கிறோம். எதை வாங்கி வைத்தாலும் நொறுங்கிவிடும். அது மட்டுமின்றிப் பையில் இடமுமில்லை. நாம் என்னதான் பாரா முகமாக நகர்ந்தாலும் அவர்களுடைய கெஞ்சலும் வேண்டலும் நம்மை விட்டு நீங்குவதில்லை. தொடந்து உடன்வருகின்றனர்.
 
Exploring Odhisha, travel series - 31
நம் பைச்சுமைகளை எங்கேனும் இறக்கி வைத்துவிட்டுச் சென்றால்தான் கோவிலை ஓடியாடிப் பார்க்க முடியும். கோவிலுக்குள் தூக்க முடியாத சுமையோடு சுற்றித் திரிவது நம் காட்சியின்பத்தைக் கெடுத்துவிடக்கூடும். அதனால் பைச்சுமைகளை வைப்பதற்கென்று பெட்டியறை ஏதேனும் தென்படுகிறதா என்று துழாவினோம். கொனாரக் கோவில் தெருவில் பொருட்கடைகள் இருக்கின்றனவேயன்றி, அவற்றைத் தவிர வேறு எந்தக் கடைகளும் இல்லை. சுற்றுலா வந்தோர் தம் உடைமைகளை அவர்களே வைத்துக்கொள்ள வேண்டும். வண்டிகளில் வந்தவர்கள் தங்கள் சுமைகளை வந்த வண்டிகளிலே விட்டு வந்தனர். நாம் வண்டியில் செல்லவில்லையே... வெறுங்கையும் வீச்சுமாகச் சென்றிருக்கிறோமே !
Exploring Odhisha, travel series - 31
ஏதேனும் ஒரு கடையில் இப்பைகளைப் பார்த்துக்கொள்ளும்படி வைத்துவிட்டுச் செல்லலாம் என்ற எண்ணம் தோன்றியது. கோவில் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த கடையொன்றை அணுகிக்கேட்டோம். அங்கிருந்தவர்கள் பலர்க்கு ஒடிய மொழியைத் தவிர வேறெதுவுமே தெரியவில்லை. ஆங்கிலம் பேசி யார்க்கும் விளக்க முடியாது என்பது தெளிவாயிற்று. "ப்ளீஸ் கீப் திஸ் பேக்ஸ்... வீ வில் பே...," என்றால் அவனுக்கு என்ன தெரியும்? "அப்படி எதையும் நாங்கள் வாங்கி வைப்பதில்லை... அது இங்கே வழக்கமில்லை...," என்று துரத்திவிட்டார்கள். ஒரு கடை இரண்டு கடை என்றால் தேவில்லை. ஏறத்தாழ பத்துப் பதினைந்து கடைகளில் கேட்டுப் பார்த்தும் இதே எதிர்வினைதான். காசு எவ்வளவு கேட்டாலும் தருவதற்கு அணியமாக இருப்பதைத் தெரிவித்தாலும் எந்தக் கடைக்காரரும் இசையவில்லை. இப்படிப் பணம் ஈட்டும் வழி இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. அவ்வாறு எதையும் செய்ய இயலாது என்பதே அவர்களுடைய கொள்கையாக இருக்கிறது. "நாம் இங்கே கடை வைத்திருக்கிறோம், பொருள்களை விற்பதன்வழியே பொருளீட்டுவது எம் கடன்...," என்பதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்து போய், "உங்கள் கடையிலிருந்து எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்கிறோம்... அதற்கு ஈடாக இந்தப் பைகளைச் சற்று நேரம் பார்த்திருங்கள்... இங்கே வைத்துவிட்டுச் செல்கிறோம்...," என்று கடைசி அம்பை எய்து பார்த்தேன். நம்மூர் எனில் இதுபோன்ற கோவில் முகப்பிலுள்ள தேங்காய் பழக்கடைகளில் பைகளையோ செருப்புகளையோ விட்டுச் செல்லலாம். அக்கடையில் தேங்காய் பழத்தட்டு வாங்க வேண்டும் என்பதுதான் ஒரே கட்டாயம். இங்கே அப்படியொரு வாய்ப்பே இல்லை. நாம் அல்லாடுவதைப் பார்த்துவிட்டு ஒரு கடைக்காரர் நம்மை அழைத்தார்.
- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக