இறைவர் திருப்பெயர் : உத்திர வைத்தியலிங்கேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : தையல்நாயகி.
தல மரம் : -
தீர்த்தம் : அகத்தியர் தீர்த்தம்
வழிபட்டோர் :அகத்தியர்
தல வரலாறு:
சென்னை - திருப்போரூரில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு சிறந்த செவ்வாய் பரிகார
தலம்!! மகப்பேறு வரம் கேட்டு வருபவர்களுக்கு மனம் மகிழ மகப்பேறு கிட்டும் இடம்!!!
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலைப்போலவே இங்குள்ள ஆலயத்தின் தீர்த்தக் குளத்தில்
நீராடி, வைத்தியலிங்கேஸ்வரரையும் தையல்நாயகியையும் வணங்கித் தொழுதால், தீராத
நோயும் தீரும் என்பது ஐதீகம்!
கருவுற்ற பெண்கள் இங்குள்ள தையல்நாயகிக்கு மூன்று வெள்ளிக்கிழமைகள் நெய் தீபமேற்றி
வழிபட்டால் சுகப்பிரசவம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த
திருக்காட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு தையல்நாயகி உடனுறை உத்திர வைத்திய
லிங்கேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த செவ்வாய் பரிகார தலம். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு இணையானது. சகல விதமான உடற் பிணிகளையும் நீக்கும்
அற்புதமான அகத்தியர் தீர்த்தம் அமைந்த திருத்தலம். மகப்பேறு வரம் கேட்டு
வருபவர்களுக்கு அவர்கள் மனம் மகிழ மகப்பேறு கிட்டும் இடம். அனைத்து
சௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் அற்புதமான ஆலயம். அங்காரக தோஷ நிவர்த்தி தலம்.
இந்த ஆலயத்தில் குடி கொண்டுள்ள இறைவனின் திருமேனியை பங்குனி உத்திர திருநாளுக்கு
மூன்று தினங்கள் முன்பாக காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் சூரியன் தன்
பொற்கிரணங்களால் தரிசித்து வணங்கி செல்கிறார். அது சமயம் இறைவன் பிரகாசமான
ஒளிப்பிழம்பாக காட்சியளிக்கிறார்.
தொண்டை மண்டலத்தின் அந்த வனப்பகுதியில், தவம் புரிவதற்காக வந்த அகத்தியர், அந்த
இடத்தில் சிறிதளவும் தண்ணீர் இல்லாமல் இருந்ததை அறிந்தார். நித்தியப்படி
பூஜைகளுக்காகவும் இந்த வழியே வருவோரின் தாகம் தணிப்பதற்காகவும் தண்ணீர் வேண்டி,
சிவனாரைத் தொழுது முறையிட்டார்.அவரின் கோரிக்கையை ஏற்ற சிவனார், அந்தத்
திருவிடத்தில் தீர்த்தக் குளத்தை உருவாக்கியதுடன் அப்படி உருவாக்கிய அகத்தியர்
தீர்த்தத்திலிருந்து நீர் கொண்டு வந்து என் திருமேனிக்கு அபிஷேகம் செய்து அந்த
நீரை இவ்வூர் மக்களின் பிணி தீர்க்கும் மருந்தாக கொடு என்று சொல்லி மறைந்தார்.
திருமணக் கோலத்திலும் அகத்தியருக்கு காட்சி தந்தருளினார். இப்படி, திருக்காட்சி
அருளியதாலும் வனமாகத் திகழ்ந்ததாலும் அந்தப் பகுதி காட்டூர் என்றானதாகச் சொல்கிறது
ஸ்தல புராணம். ஈசனார் உத்தரவின்படி அகத்தியர் அபிஷேக நீரை மக்களுக்கு பருக
கொடுத்தார். மக்களை வாட்டிய கொடிய பிணி மறைந்து மக்கள் மகிழ்ச்சியால் திளைத்தனர்.
அன்றிலிருந்து இன்று வரை இந்த திருக்காட்டூர் வாழ் கிராமத்து மக்களுக்கு காலரா
போன்ற தொற்று நோய்கள் வருவதில்லை. அருகிலுள்ள வட்டார கிராமங்களை பாதிக்கும் நோய்
திருக்காட்டூர் கிராம எல்லைக்கு வருவதில்லை!
ஒருகாலத்தில், மகரிஷிகளும் அந்தணர்களும் இங்கு வந்து தங்கி, வேதங்கள் ஒலிக்க,
ஜபதபங்களில் ஈடுபட்டு, இறைவனின் பேரருளைப் பெற்றதால், இந்தத் தலத்துக்கு மறையூர்
எனும் திருநாமமும் உண்டு. பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ள ஆலயம், சிதம்பர
சுவாமிகள் உள்ளிட்ட பலரும் வணங்கிய கோயில் எனப் பல பெருமைகள் கொண்டது, இந்தத்
திருத்தலம்.
இந்த ஆலயத்தின் தீர்த்தக் குளத்தில் நீராடி, வைத்தியலிங்கேஸ்வரரையும்
தையல்நாயகியையும் வணங்கித் தொழுதால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்!
தீர்த்தக்குளத்தின் நீரை எடுத்துப் பருகினாலே, வியாதிகள் பறந்தோடிவிடும்
என்கின்றனர் பக்தர்கள். திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்களும் பிள்ளைப்
பாக்கியம் இல்லையே எனக் கண்ணீர் விடுபவர்களும் வியாபாரத்தில் அடுத்தடுத்த
நஷ்டத்தால் அல்லல்படுபவர்களும் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனுக்கு அபிஷேகங்கள்
செய்து வழிபட்டால், தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்; பிள்ளைச் செல்வம்
கிடைக்கப் பெறுவர்; நலிவுற்ற வியாபாரம் செழித்து விளங்கும் என்பது ஐதீகம்!
கருவுற்ற பெண்கள், இங்கு வந்து தையல்நாயகியை மூன்று வெள்ளிக்கிழமைகள் நெய்
தீபமேற்றி வழிபட்டால், சுகப்பிரசவம் உண்டாகும். கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்கப்
பெறுவர் என்பது நம்பிக்கை. சிதம்பரம் அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்ல
இயலாதவர்கள், இங்கு வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாகச் சொல்வர்.
இத்தலம் முற்றிலும் சிதிலமடைந்திருந்த
நிலையில் பக்தர்கள் நன்கொடைகள் வசூலித்து புனருத்தாரணம் செய்துள்ளனர். திருப்பணி
நடந்துவந்த நிலையில் பூமிக்கடியில் புதைந்திருந்த அம்பாளின் திருமேனி
கிடைக்கப்பெற்றது சிறப்பாகும். பாசம், அங்குசத்துடன் அபயவரத திருக்கரங்களோடு
அமையப்பெற்றுள்ளார் இந்த அம்பிகை.
ஐந்து நிலைகளுடன்கூடிய ராஜகோபுரம் இவ்வாலயத்திற்கு கம்பீரத்தை அளிக்கிறது.
பிரகாரத்தில் கணபதி, பால முருகன், சண்டேஸ்வரர், அதிகார நந்தி அமைந்துள்ளனர்.
கருவறையில் சுமார் இரண்டடி உயரத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் அருள்மிகு
வைத்தியநாதர். அம்பாள் தெற்கு நோக்கி தனி சந்நிதியில் எழுந்தருளி
அருள்பாலிக்கின்றார். செவ்வாய் பகவான் அவருடைய வாகனமான ஆட்டுக்கிடாவுடன் தனியாக
எழுந்தருளியுள்ளது சிறப்பு!
நீண்ட நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், திங்கள், ஞாயிறு, வெள்ளி,
செவ்வாய்க்கிழமைகளில் சிவதரிசனம் செய்து ஆலயத்தில் மூலிகைத் தீர்த்தத்தைப் பெற்று
அருந்தினால் நலம் பெறுவர் என்பது நம்பிக்கை. இவ்வாலய வழிபாட்டினால் பிள்ளைகள் நல்ல
கல்வியறிவைப் பெறுவர்.இத்தலம் செவ்வாய்த் தோஷப் பரிகாரத் தலமாக விளங்குகிறது.
மேலும் திருமணத் தடை, மாங்கல்ய பாக்கியம் நீடிக்கவும் பிரார்த்திக்கின்றனர். கடன்
தொல்லை நீங்கவும் இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது. வைகாசி விசாக திருநாளன்று
திருப்போரூர் முருகப்பெருமான் சீர் வகைகளைக் கொண்டு வந்து இத்தலத்து இறைவனிடம் ஆசி
பெற்று செல்லும் நிகழ்வு பல காலமாக வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது.
திருக்குள வரலாறு:
நான்கு புறமும் முறையான கரைகளும் நல்ல அகல நீளமும் உள்ளது இந்தத் திருக்குளம். கடந்த 100 ஆண்டுகளாக இதில் நீர் வற்றி பார்த்ததே இல்லை என்று இவ்வூர் வாழ் முதியோர்கள் சொல்லுகின்றனர். அகத்தியரால் உருவாக்கப்பட்ட குளம் ஒரு காலத்தில் இவ்வூர் மக்களின் தொற்று நோய்களை களைந்து அவர்களை மகிழ்வோடு வாழ வைத்த குளம் இது. இக்குளத்து நீரை இறைவனுக்கு அபிஷேகம் செய்து அதைப் பருக எத்தகைய பிணியும் பறந்தோடிவிடும் என்பது அகத்தியர் வாக்கு. எனவே இக்குளம் அவர் பெயராலேயே அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
பைரவர் மலை:
பைரவர் மலை 300 அடி உயரம் இருக்கலாம். இக்கோவிலும் பராமரிப்பு இன்றிதான் இருக்கிறது. மலையின் மீதமர்ந்திருக்கும் பைரவரை தரிசித்த பின்புதான் உத்திர வைத்திய லிங்கேஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இங்கு நிலவி வரும் ஐதீகம் என்று இவ்வூர் மக்கள் சொல்கின்றனர்.
சிறப்புக்கள் :
செவ்வாய்த் தோஷப் பரிகாரத் தலமாக விளங்குகிறது .
திருமணத் தடை, மாங்கல்ய பாக்கியம் நீடிக்கவும் பிரார்த்திக்கின்றனர். கடன் தொல்லை
நீங்கவும் இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது.
போன்:
98845 30146
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
இத்திருத்தலம் – காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்துள்ள "காட்டூர்'
என்ற சிறு கிராமத்தில்் அமைந்துள்ளது.
சிவன் சுயம்புவாக இங்கு தோன்றியுள்ளார். 1200 வருடங்கள் பழமையானது. இங்கு தவம் புரிவதற்காக வந்த அகத்தியர், தீர்த்தக் குளத்தை உருவாக்கினார் .
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக