திங்கள், 24 பிப்ரவரி, 2020

குகனின் வேண்டுகோள்!

 தாய் கைகெயின் வரத்தின்படி இராமர் வனவாசம் செல்லவும், பரதர் அயோத்தியை ஆளவும் கட்டளை அருளினார். அதன்படி இராமர் இக்கானகத்தில் வாழ்கிறார் என்றார், இலட்சுமணர். இதனைக் கேட்ட குகன் வெந்த புண்ணில் வேலை பாய்ந்தது போல் மிகவும் வருந்தினார். அன்றிரவு ஆசிரமத்தில் குகன் காவல் புரிந்தான். அவன் இலட்சுமணர் ஒரு மாற்றாந்தாயாகிய மகன் தானே? அவனை எப்படி நம்புவது என்று எண்ணி குகன் இலட்சுமணனுக்கும் சேர்த்து காவல் புரிந்தான்.

 இலட்சுமணரும் கண் இமைக்காமல் காவல் புரிந்தார். பொழுது விடிந்தது. இராமர், சீதை, இலட்சுமணர் நீராடி தங்களின் காலை கடன்களை முடித்தனர். இராமர் குகனைப் பார்த்து, ஓடம் கொண்டு வா! நாங்கள் கங்கையை கடந்து வனவாசம் செல்ல வேண்டும் என்றார். இதைக் கேட்ட குகன் அதிர்ச்சி அடைந்தான். தங்களுக்கு தொண்டு செய்ய நானும் மற்றும் வேடர்களும் உள்ளோம். கங்கை மிகவும் புனிதமான இடமாகும். இங்கு நறுமண மலர்களும், காய் கனிகள் என அனைத்தும் இருக்கின்றன. தங்களுக்காக நான் எதையும் செய்வேன். தங்களுக்காக தொண்டு செய்ய காத்து கொண்டு இருக்கிறேன். தாங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என மனமுருக வேண்டிக் கொண்டான்.

 இராமர் குகனை கட்டி தழுவிக் கொண்டார். குகனே! நீ இனிமேல் எனக்கு தம்பி. இன்று முதல் தசரதருக்கு ஐந்து புதல்வர்கள். இலட்சுமணர், பரதன், சத்ருக்கன் உனக்கு தம்பிமார்கள். பரதனிடம் அயோத்தியை ஆளும் அரசியல் பொறுப்பை ஒப்படைத்து வந்துள்ளேன். நீ அயோத்தி சென்று பரதனுக்கு துணையாக இரு. 14 ஆண்டுகள் 14 நாட்கள் போல் சென்று விடும். பிறகு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வோம். என் சொல்லை மீற வேண்டாம். இப்பொழுது எங்களுக்காக ஓடம் கொண்டு வா என்றார். குகன் கண்ணீர் தழும்ப ஓடத்தை கொண்டு வந்தான். இராமர், சீதை, இலட்சுமணர் மூவரும் ஓடத்தில் ஏறினார்கள். குகன் இராம நாமத்தை பாடிக் கொண்டு ஓடத்தை செலுத்தினான். அவர்கள் அக்கரையை சேர்ந்தார்கள். இராமன் குகனை பார்த்து, நீ கவலைப்படாமல் செல். மீண்டும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாய் இருப்போம் என்று கூறி குகனை திருப்பி அனுப்பினார்.

இராமர் அங்கிருந்து புறப்பட்டு சித்ரகூடத்தில் உள்ள பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். அங்கு பரத்வாஜ முனிவரை கண்டு வணங்கி, அவரின் சொற்படி சித்ர கூடத்திற்கு அருகில் உள்ள மந்தாகினி நதிக்கரையில் ஓர் ஆசிரமத்தை அமைத்து தங்கினார்கள். சிறிது நாட்கள் அங்கு தங்கினார்கள். பிறகு அவர்கள் பயணத்தை தொடர்ந்தார்கள். அவர்கள் பயணத்தின் போது வழியில் யமுனை நதியை கண்டார்கள். அவர்கள் யமுனை நதியில் நீராடி, காய்கனிகளை உண்டு பசியாறினார்கள். இலட்சுமணர் மூங்கில்களை வெட்டி தெப்பம் அமைத்து, மூவரும் தெப்பத்தில் ஏறி அக்கரையை அடைந்தார்கள். அங்கு பர்ணசாலை ஒன்றை அமைத்தார், இலட்சுமணர். இலட்சுமணரின் பர்ணசாலை அமைக்கும் திறனை கண்டு வியந்து இராமர் இலட்சுமணரை வாழ்த்தினார்.

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்