Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 12 மே, 2018

கலிங்கம் காண்போம் - பகுதி 49 - பரவசமூட்டும் பயணத்தொடர்

கலிங்கம் காண்போம் - பகுதி 49 - பரவசமூட்டும் பயணத்தொடர்

சூரியன் ஏறத் தொடங்குவதற்கு முன்பாக அறையிலிருந்து வெளியேறிவிட்டோம். வெளிச்சாலைக்கு வந்து சிறுநடை போட்டதும் ஓர் உணவகம் வந்தது. அங்கேயே காலையுணவை முடித்துக்கொண்டோம். காலையுணவு வேளை என்பதால் அவ்வுணவகம் பரபரப்பாக இயங்கியது. ஒரு மசால் தோசை என்பது வயிற்றுக்குக் கூடுதல்தான். மலைகளிலும் குகைகளிலும் ஏறியிறங்க வேண்டியிருக்கும் என்பதால் வயிற்று நிறைவையும் பார்க்க வேண்டும். உண்டு முடித்து வெளியே வந்து ஒரு தானிழுனியைத் தேடினோம். புவனேசுவரத்திலிருந்து உதயகிரிக்குச் செல்வதுதான் இன்றைய பயணத்திட்டம். உதயகிரி – கந்தகிரி என்று அழைக்கப்படுகின்ற இரண்டு குன்றங்களுக்குச் செல்ல வேண்டும்.

நம் நாட்டில் மிகுதியாகக் காணப்படும் ஊர்ப்பெயர்களில் உதயகிரியும் ஒன்று. உதயகிரி என்று ஆட்பெயர் வைப்பதும் உண்டு. என் பள்ளிக் காலத்தின் உற்ற நண்பர் ஒருவர் பெயர் உதயகிரி. நான் இருபதுகளில் தொடக்க அகவையிலேயே திருமணம் செய்தவன் என்பதால் என் திருமணத்திற்கு வந்த பள்ளி நண்பர்கள் தனியராகவே இருந்தனர். அவர்களில் உதயகிரிதான் எனக்கும் முன்பாகவே திருமணம் செய்துகொண்டவர். என் திருமணத்திற்கு இணையரோடு வந்து வாழ்த்தியவர். அதனால் உதயகிரி என்ற பெயரைக்கேட்டதும் என் திருமணத்திற்கு வந்த நண்பரே முதற்கண் நினைவுக்கு வருவார்.

exploring odissa kalingam
ஒடிசா மாநிலத்தில் புவனேசுவரத்திற்கு அருகில் இருக்கும் உதயகிரியை வெறும் உதயகிரிக் குகைகள் என்று கூறலாகாது. உதயகிரி – கந்தகிரிக் குகைகள் என்று சேர்த்துக் கூறவேண்டும். உதயகிரியும் கந்தகிரியும் அடுத்தடுத்த குன்றுகள். நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள உதயகிரி என்ற பெயரில் வழங்கப்படும் ஊர்களோடு குழப்பிக்கொள்ள வாய்ப்புள்ளமையால் உதயகிரி – கந்தகிரி என்று சேர்த்துச் சொல்வது குழப்பத்தைப் போக்கும்.
உதயகிரி என்னும் பெயர் சூரியத் தோன்றலைப் பொருளாகக் கொண்டது. அதனால் ஆயிரம் உதயகிரிகள் இருக்கும். ஆனால், எங்குமே அஸ்தமனகிரி இராது. இத்தனைக்கும் நம் நாட்டின் மேற்குத்திக்கில் பெருமலைகள்தாம் உள்ளன. ஆனால், சுடர்மறைமலைகள் இல்லை.
வரலாற்றுத் தன்மையும் தொன்மையும் மிக்க உதயகிரிகள் நாடெங்கும் உள்ளன. ஆந்திரத்தில் நெல்லூர் மாவட்டத்தில் உதயகிரி என்னும் ஊர் உள்ளது. அங்கே புகழ்பெற்ற கோட்டை ஒன்றும் இருக்கிறது. கேரளத்தில் கண்ணனூர் மாவட்டத்தில் மலைப்பயிர் வேளாண்மைக்குப் பெயர்பெற்ற உதயகிரி என்ற சிற்றூர் இருக்கிறது. அவ்வளவு ஏன், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவனந்தபுரம் - நாகர்கோவில் சாலையில் தக்கலைக்கு அருகில் மார்த்தாண்டவர்மனால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டைக்கும் உதயகிரிக் கோட்டை என்று பெயர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் விதிசாவுக்கு அருகில் ஐந்தாம் நூற்றாண்டுக் குகைகளைக் கொண்ட பகுதியும் உதயகிரி என்றே அழைப்படுகிறது. இலங்கையிலும் ஓர் உதயகிரி உண்டு. இதே ஒடியத்தில் கந்தமால் மாவட்டத்தில் உதயகிரி என்ற சிறுநகரம் இருக்கிறது. இவை அனைத்தும் வரலாற்றோடு ஏதேனும் ஒருவகையில் தொடர்புடைய ஊர்கள்.

exploring odissa kalingam
இவை மட்டுமின்றி இன்னும் பலப்பல உதயகிரிகள் உள்ளன. அவற்றோடு ஒடியாவில் நாம் காணச் செல்லும் உதயகிரியைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கட்டாக்குக்கு அருகில் உள்ள உதயகிரி என்றுதான் இதைக் குறிப்பிடுவார்கள். அப்போது அவர்களுடைய ஆட்சித் தலைநகரம் கட்டாக் என்பதை நாமறிவோம். அதனால்தான் உதயகிரிக் குன்றின் இரட்டைமலைத்தன்மையை ஏற்று உதயகிரி – கந்தகிரி என்று குறிப்பிட வேண்டும்.

exploring odissa kalingam
புவனேசுவரத்திலிருந்து எட்டுக் கிலோமீட்டர்கள் தொலைவில்தான் நாம் காணவிருக்கின்ற உதயகிரி - கந்தகிரிக் குன்றுகள் இருக்கின்றன. தானிழுனியொன்றை அமர்த்திக்கொண்டோம். நகரின் அகன்ற சாலையில் காலையின் முதற்போக்குவரத்து தொடங்கியிருந்தது. உதயகிரியை நோக்கிச் செல்லும் வழியில் புவனேசுவரத்தின் கல்விக்கூடங்களும் அரசுப் பணியகங்களும் அடுத்தடுத்து வந்தன. ஒவ்வொரு வளாகமும் உயர்ந்து வளர்ந்த சோலை மரங்களுக்கிடையே நிழலில் ஆடுகின்றன. சாலையில் கால்நடைகளின் நடமாட்டமும் உண்டு. மெல்லக் குலுங்கியபடி ஏற்றமான தடத்தில் ஏறிய வண்டி மரங்களடர்ந்த ஓரிடத்தில் நின்றது. உதயகிரி வந்துவிட்டோம்.
-தொடரும்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக