How to Select a good stock - explained in Tamil |
பங்கு வாங்குவதில் முதல் படி: நல்ல எதிர்காலம் உள்ள தொழில் துறையை அடையாளம் காண்க
பங்குகளை வாங்கும் போது, ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கை வாங்குவதாக நினைக்காமல்,நிறுவனத்தையே வாங்குவதாக எண்ண வேண்டும். உங்களிடம் ஒரு 2 கோடி இருப்பதாக வைத்துக்கொள்வோம்.இந்த பணத்தை வைத்து ஒரு சிறு நிறுவனத்தை வாங்க நினைப்பீர்கள் அல்லது ஒரு தொழில் தொடங்க நினைப்பீர்கள் என்றால், என்ன செய்வீர்கள்? பல்வேறு தொழில்களை ஆராய்ந்து, எதிர்காலத்தில் வளரும் வாய்ப்புகள் அதிகம் உள்ள, உங்கள் முதலீட்டிற்கு தக்கவாறு லாபம் தரக்கூடிய ஒரு தொழில் துறையை தேர்ந்தெடுத்து, அந்த துறையில் சிறப்பாக இருக்ககூடிய ஒரு நிறுவனத்தை வாங்குவீர்கள் அல்லது உங்களுடைய நிறுவனத்தை தொடங்குவீர்கள்.உங்களுடைய முடிவிற்கான முக்கியமான காரணி, வருங்காலத்தில் வளர்ச்சி. அதே போல, பங்குகளை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, நல்ல எதிர்காலம் உள்ள ஒரு தொழில்துறையை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். உதாரணமாக,இப்போது இந்தியாவில் நல்ல வளர்ச்சி இருக்கும் தொழில்துறைகள்: மருந்து தொழில்துறை, மின்சார உற்பத்தி, விவசாயம் மற்றும் கட்டுமான தொழில்துறைகள்.
மருந்து துறை: நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்கள் தொகை உயரும்போது, உடல் நலம் பேணல் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிறது. இந்த விழிப்புணர்வு காரணமாக, வருடாந்திர உடல் பரிசோதனைகளும்,அதில் கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்கான மருந்து எடுத்துக்கொள்ளும் பழக்கமும் தற்போது மிகவும் அதிகரித்திக்கொண்டுள்ளது.இது எதிர்காலத்தில் இன்னும் ஜாஸ்தியாகத்தான் வாய்ப்புகள் உள்ளன. எனவே மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக,வருடா வருடம் அதனுடைய வியாபாரத்தை அதிகாமக்கி லாபம் வளர்த்து வருகின்றன.இது மேலும் தொடர்வதற்கான சாத்தியகூறுகள் நிறையவே உள்ளன.
மின்சார உற்பத்தி: மருத்துவ துறை போல,வளர்ச்சி வாய்ப்புக்கள் மிகுதியாக உள்ள துறை மின்சார உற்பத்தி. அதிலும் Renewable Energy என்றழைக்கப்படும் மரபு சாரா மின் உற்பத்தி துறைகளான காற்றாலை மின் உற்பத்தி (wind power generation) , சூரிய ஒளி மின் உற்பத்தி (solar power generation ) போன்ற துறைகளின் வளர்ச்சி விகிதம் வருங்காலத்தில் அதிகமாக வாய்ப்புக்கள் அதிகம். நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது மின்சாரம். விவசாயம் உள்ளிட்ட எந்த உற்பத்தி தொழிலுக்கும் மின்சாரம் ஒரு முக்கியமான தேவை. இந்த மின்சார உற்பத்தியில் தற்போது வரை பின்பற்றப்படுவது அனல் மின் உற்பத்தி (நிலக்கரியை எரித்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது), நீர் மின் உற்பத்தி நிலையங்கள் (அணைக்கட்டுகள ஏற்படுத்தி, தேக்கி வைக்கப்பட்ட நீர் வீழ்ச்சியின் மூலம் மின் உற்பத்தி செய்வது), அணு மின் நிலையங்கள் (அணுவை பிளந்து, அதில் கிடைக்கும் சக்தியின் மூலம் மின் உற்பத்தி செய்வது). இவற்றில்,அனல் மின் நிலையங்களினால்,சுற்றுப்புற மாசுபாடு மிக அதிகம். அதே போல, அனல் மின் நிலையங்களில் பயன் படுத்தப் படும் நிலக்கரியின் கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. நீர் மின் உற்பத்திக்கு தேவையான, புதிய அணைக்கட்டுகளுக்கு அரசியல் எதிர்ப்புக்கள் அதிகம் (உ.ம். மேகதாது). அணு மின் நிலையங்களுக்கும் எதிர்ப்புக்கள் அதிகம் (உ.ம். கூடங்குளம்). இந்த காரணங்களினால், இது வரை அதிகமாக பயன்பாட்டிற்கு வராத, சுற்றுப்புற சூழலிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத மரபு சாரா (Renewable Energy) மின் உற்பத்தி துறைக்கான வளர்ச்சி விகிதம் கடந்த வருடங்களை விட எதிர்காலத்தில் மிக சிறப்பாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.
விவசாயம் சார்ந்த பொருட்கள், உணவு உற்பத்தி துறை: அடுத்ததாக,மிக மிக அதிகமான வளர்ச்சி விகிதம் இருக்கப்போகும் துறை விவசாயம் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் துறை. நம் நாட்டின் மக்கள் தொகை பெருகும் அளவிற்கு,விவசாயம் செய்ய தகுதியான நிலத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. நாட்டில் பெருகிகொண்டிருக்கும் மக்களுக்கு,குருகிக்கொண்டிருக்கும் விவசாய நிலங்களை வைத்து சோறு போடவேண்டும் என்றால்,இருக்கும் நிலங்களை வைத்து உற்பத்தியை பெருக்கவேண்டியது அவசியமாகிறது. இதனால்,விவசாய உற்பத்தியை பெருக்கும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை தயாரிக்கும் நிறுவனங்கள், சொட்டு நீர் பாசன கருவிகள் செய்யும் நிறுவனங்கள், tractor போன்ற வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் எதிர்காலத்தில் விற்பனையை பெருக்கி , லாபத்தை அதிகரிக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.
கட்டுமான துறை: இந்தியா வளர வளர, கட்டுமான துறையின் வளர்ச்சியும் அதிகமாகிக்கொண்டே இருக்கும். சாலைகள், துறைமுகங்கள்,விமான நிலையங்கள், ரயில் பாதைகள்,புதிய நீர்தேக்கிகள் அல்லது வாய்க்கால்கள், மருத்துவ மனை கட்டிடங்கள், அலுவலக கட்டிடங்கள், மெட்ரோ ரயில் நிலைய கட்டிடங்கள், பெரிய வீட்டு வளாகங்கள்,வணிக வளாகங்கள் போன்றவற்றின் வளர்ச்சிக்கான தேவையும், வாய்ப்புகளும் இன்னும் வளர்ந்து வரும் நாடான நம் நாட்டில் நிறையவே உள்ளன. இதனால், இந்த துறையில் உள்ள நிறுவனங்களின் வியாபார வளர்ச்சியும்,லாபமும் வருங்கலாதில் உயரவே வாய்ப்புகள் அதிகம்.
மேற்குறிப்பிட்ட துறைகள் போல, வளரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ள துறைகளை கண்டறிந்து, அவற்றில் ஒரு சிறந்த, வளரக்கூடிய துறையில் உள்ள நிறுவனத்தின் பங்கினை வாங்க வேண்டும். ஒரு தொழில் துறையினை அடையாளம் கண்ட பின், அந்த துறையில் ஒரு நிறுவனத்தை எப்படி தெரிவு செய்வது என்பதை,அடுத்து பதிவில் பார்ப்போம்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக