சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான புனிதத்தைக் கொண்ட கோவிலாக மருந்தீஸ்வரர் திருக்கோவில் கருதப்படுகிறது. ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர், இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமானின் தரிசனம் பெற்றதால், இத்தலம் அமைந்த ஊருக்கு “திருவான்மீகம்” என்று பெயர் வந்தது. காலப்போக்கில், அது “திருவான்மியூர்” என அழைக்கப்படத் தொடங்கியது.
இக்கோவிலின் மூலவர் தியாகராஜர் என்றும், அம்பாள் திரிபுரசுந்தரி என்றும் போற்றப்படுகின்றனர். மேலும், அகத்திய முனிவருக்கு சிவபெருமான் மருத்துவ மூலிகைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றின் மூலம் மருந்து தயாரிக்கும் முறைகளையும் அருளியதால், இறைவன் இங்கு “மருந்தீஸ்வரர்” என்ற திருப்பெயர் பெற்றார்.
தல புராணம்
வசிஷ்ட முனிவர் இத்தலத்தில் சிவபெருமானை பூஜிக்க, இந்திரன் தனது தேவலோக பசுவான காமதேனுவை வசிஷ்டருக்கு கொடுத்தார். ஒரு சமயம், காமதேனு பால் தராததால், வசிஷ்டர் அதனை சபித்தார். சக்தி இழந்த காமதேனு பூலோக பசுவாக மாறியது. சாபம் நீங்குவதற்காக, காமதேனு தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபட்டு தனது சக்தியை மீண்டும் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இத்தல இறைவனுக்கு “பால்வண்ணநாதர்” என்றும் பெயர் உண்டு.
அப்பைய தீட்சிதருக்கு அருளாக சிவபெருமான் மேற்கு திசை நோக்கி இருக்கிறார். மேலும், வால்மீகியை பார்த்து மிரண்ட காமதேனு சிவலிங்கத்தின் மீது குதித்து ஓடியதால், அதன் கால் குளம்பின் அடையாளம் சிவலிங்கத்தில் காணப்படுகிறது.
தல சிறப்புகள்
இவ்வாலயத்தில் கோபூஜை முக்கியமான பூஜைகளில் ஒன்றாகும். கோவிலின் கர்பகிரகத்தின் மேலிருக்கும் விமானம் “சதுர்வஸ்தம்” முறையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு மருந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்து, பிரசாதமாக தரப்படும் விபூதியை உட்கொள்வதால் தீராத வியாதிகள் குணமாகும் என நம்பப்படுகிறது.
கோவிலின் ஸ்தல விருட்சமாக இருக்கும் “வன்னி மரத்தை” சுற்றி வழிபடுவதால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என கூறப்படுகின்றது. வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இறைவனுக்கும் அம்பாளுக்கும் புதுவஸ்திரம் சாற்றி தங்கள் நன்றி செலுத்துகின்றனர்.
கோவில் அமைவிடம்
சென்னை நகரின் புறநகர்ப்பகுதியாக இருக்கும் திருவான்மியூரில் இந்த கோவில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு நகர பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்கள் மூலம் எளிதில் செல்லலாம்.
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், தல வரலாறும், ஆன்மிக சாந்தியையும் எதிர்கொள்ள விரும்புவோருக்கு ஒரு பேரின்ப தலமாக திகழ்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக