Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

பொதுபுத்தி மீண்டும்!..........


கூட்டம் அதிகமான நம்ம மெரினாபீச் மாதிரியான இடத்தில் நின்றுகொள்ளுங்கள், யாரையும் சட்டைசெய்யாமால் அண்ணாந்து பார்த்தபடியே இருங்கள், உங்களை கடந்து செல்பவர்களில் நான்கு சதவிகிதத்தினர் அண்ணாந்து மேலே பார்ப்பார்கள் என்பது பொதுவிதி(புத்தி), இப்பொழுது உங்களுடன் இன்னொரு நண்பரையும் சேர்த்து கொள்ளுங்கள், ஆட்கள் கூட உங்களுடன் அண்ணாந்து பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கூடும் என்பதை நீங்களே உணர்வீர்கள்!

இது ஒரு சாதாரண செயல் மாதிரி தானே தெரிகிறது, ஆனால் நாம் அனைவரும் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க பயந்து இதை தான் செய்து கொண்டிருக்கிறோம், ஏற்கனவே யாரோ ஒருவர் செய்தது என்றால் அதில் குறைவான ரிஸ்க் தான் இருக்கும் என்பது மனிதனின் பொதுபுத்தி கருத்து, ஏனப்பா கோயிலுக்கு போற!? எங்க அப்பாவும் போனார், நானும் போறேன் என்ற பதிலை இளைஞர்களிடம் இன்றும் காணமுடியும், ஒரு செயலை ஏன் செய்கிறோம் என தெரியாமலேயே செய்து கொண்டிருக்கிறார்கள், நீங்கள் கோவிலுக்கு போனால் உங்களை நல்லவன் என்று சொல்வார்கள் என உங்களுக்கு தெரியாது, ஆனால் அப்படி தான் சொல்லி கொடுத்து வளர்க்கப்பட்டீர்கள்!

பகுத்தறிவு என்பது அதிகப்படியாக வளர்ந்த அறிவு கிடையாது!.
  இந்த உலகில் பகுத்தறிவு அற்ற மனிதர்களும் கிடையாது, ஒரு செயலை செய்வதற்கு முன்னால் அதை ஏன் நான் செய்யனும் என்று கேள்வி கேட்பது தான் பகுத்தறிவு, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, அதனால் செய்கிறேன் என்றால் அத்தோடு முடிஞ்சி போச்சு, அதைவிட்டு அந்த புத்தகத்தில் போட்டிருக்கு, அந்த தாத்தா அப்படி தான் செய்ய சொன்னார் என்றால் நாம் முன்னோர்களிடமும், புத்தகங்களிடமும் மூளையை அடகு வைத்து அத்துடன் ஐக்கியமாகி விட்டோம் என்று தான் அர்த்தம்!

கடவுள் இருக்கு, இல்லை என்ற வாதங்கள் பலநூறு வருடங்களாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன! என்றோ நிறுபிக்கப்பட்டிருந்தால் இன்று என்னை போன்று பலர் எங்கே கடவுள் என கேட்டு கொண்டிருக்கமாட்டோம், நாங்கள் பகுத்தறிவு என்ற பெயரில் எதை சொன்னாலும் நம்புவதில்லை,
 ”பகுத்தறிவின் பால பாடமே கேள்வி கேள்” என்ற பிறகு அதை பெரியாரே சொல்லியிருந்தாலும் அதிலுள்ள உண்மையின் சாத்தியகூறுகளை ஆராய்கிறோம், பர்தா பற்றி பேசினால், இவன் எல்லாத்தையும் டூ பீஸில் போக சொல்றான் ரேஞ்சுக்கு மொட்டராசா குட்டையில விழுந்த கணக்கா பேசுவதில்லை!

அது ஏனப்பா கடவுள் பெண்களுக்கு மட்டும் இவ்வளவு சட்டதிட்டங்களை வைத்து ஆண்களை அவுத்துவிட்டான் என்று தானே கேட்கிறோம்,
 இன்றும் பல விலங்குகளில் ஆணினம் தான் டாமினேட் செய்கிறது, அது அதன் உடல் வலிமையால், ஆனால் மனித இனம் இந்த அளவு உயர்ந்தது பகுத்தறிவால், அதை ஏன் நான் செய்து பார்க்ககூடாது என்ற கேள்வியால் தான் நெருப்பிலிருந்து ராக்கெட் வரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது, அறிவு என்று வந்து விட்டால் ஆணுக்கு சமமாக பெண்ணாலும் சிந்திக்கமுடியும், அதற்கு அவளுக்கு நல்ல கல்வியும் சுதந்திரமும் கொடுக்க வேண்டும்!
அதை விட்டுட்டு நீ வெளியே போனா சாமி கண்னை குத்தும் ரேஞ்சுக்கு மிரட்டி வைத்து கொண்டிருந்தால் வீடும் உருப்படாது, நாடும் உருப்படாது!





நன்றாக படித்து வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு அப்பிராணி நண்பர் சொல்கிறார், ஒரு ஆம்பளை கெட்டால் அந்த குடும்பம் மட்டும் கெடுமாம், அதே பொம்பளை கெட்டால் அந்த ஊரே கெடுமாம்! எங்கிருந்து இதெல்லாம் கத்துகிறாங்கன்னு தான் தெரியல!, எந்த பெண்ணும் கெட்டதால ஊரு கெட்டதா எந்த ஆதாரமும் இல்லை, ஆனா நீரோவிலிருந்து ராஜபக்‌ஷே வரை கெட்ட ஆண்களால நாடே குட்டிசுவரா போன பல ஆதாரங்கள் இருக்கு, பின் எதை வைத்து இப்படியெல்லாம் பழமொழி சொல்றாங்க!

இந்த மாதிரி பானாவுக்கு பானா போட்டு, மானாவுக்கு மானா போட்டு நாமளும் ஆயிரம் பழமொழி சொல்லலாம், திண்னையை தேய்க்கும் பெருசுகள் மாதிரி இந்தகால இளைஞர்களும் அதை நம்பி பேசி கொண்டிருப்பது எதிர்காலத்தின் மேல் நம்பிக்கையை குறைய வைக்கிறது!, உங்களை போலவே எங்களுக்கும் வெற்றிகளும், தோல்விகளும் உண்டு, நாங்கள் எங்கள் தோல்விகளுக்கு என்ன காரணம் என ஆராய்கிறோம், நீங்கள் எல்லாம் கடவுள் செயல் என அடுத்த வேலைக்கு செல்கிறீர்கள், நாங்கள் தோல்விகளால் எங்களுக்கு பின் வரும் சமூகத்திற்கு வெற்றிபடியை கட்டி தருகிறோம், நீங்கள் படியை கட்டி கட்டி உடைத்து கொண்டிருக்கிறீர்கள்!


உங்கள் வெற்றி, தோல்விக்கு நீங்களும் உங்களை சார்ந்த சூழ்நிலையும் தான் காரணம் என நன்றாக தெரிந்துமே சந்திரனும் , வியாழனும் காரணம் என பின்வரும் சந்ததியினருக்கு நீங்கள் கட்டிய படிகளை காட்டாமல் உடைத்தெறிகிறீர்கள்,
  இந்த உலகில் கம்பியூட்டரலிருந்து கடுதாசி வரைக்கும் நேரடியாக அப்பொருளாக கண்டுபிடிக்கப்படவில்லை, ஒவ்வொரு பொருளும் விலங்குகளின் பரிணாம வளர்ச்சியை  போன்று நீண்ட வரலாற்றை கொண்டது தான், சார்லஸ் பாப்பேஜ் இன்றிருக்கும் கம்பியுட்டருக்கு சொந்தம் கொண்டாட முடியாது, ஆனால் Difference Machine சிஸ்டத்தின் (முதலில் பஞ்ச்கார்டு என்று எழுதியிருந்தேன், தவறை திருந்திய பேநாமூடி அவர்களுக்கு நன்றி) மூலம் முதல் கம்பியூட்டரை கண்டுபிடித்தது அவர் தான்!, பெரும்பான்மை என்னும் பொதுபுத்தியில் இருந்திருந்தால் எந்த வளர்ச்சியும் இந்த உலகம் அடைத்திருக்காது!


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை           உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக