Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

1.நுழைவாயில்

Image result for இராமாயணம்


"கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்

ஆருஹ்ய கவிதா ஸாகம் வந்தே வால்மீகி கோகிலம்"

ராமாயணத்தைத் துவங்குமுன் இந்த இதிகாசத்தை இயற்றிய வால்மீகியை மேற்கண்ட தியான சுலோகத்தைச் சொல்லி வணங்கி 
விட்டுத் துவங்குவது மரபு.

இந்த சுலோகத்தின் பொருள்:
கவிதை என்ற மரக்கிளையின் மீது அமர்ந்து கொண்டு 'ராம' 'ராம' என்று இனிமையாகக் கூவிக் கொண்டிருக்கும் வால்மீகியை வணங்குகிறேன்.


ராமாயணக் கதை நம் நாட்டில் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆயினும், வால்மீகியின் இந்தக் காலத்தை வென்ற அற்புதமான காவியத்தை ஓரளவுக்காவது விரிவாக அறிந்து கொள்ள விழைபவர்களுக்கு உதவும் வகையில் சுந்தர காண்டத்தின் தமிழ் வடிவத்தை எழுத முயன்றிருக்கிறேன். இது மொழிபெயர்ப்பு அல்ல. சுருக்கமும் அல்ல. ஓரளவுக்கு விரிவாகவும், அதே சமயம் சில வர்ணனைகளை
யும், விவரங்களையும் சுருக்கியும் எழுத முயற்சி செய்திருக்கிறேன்.

ஏன் சுந்தர காண்டத்தை மட்டும் எழுத வேண்டும், ராமாயணம் முழுவதையுமே எழுதலாமே என்ற கேள்வி சிலர் மனதில் எழக்கூடும். 


என் போன்ற ஒரு சாதாரண மனிதனுக்கு, சுந்தர காண்டத்தை முழுமையாக எழுதி முடிப்பதே ஒரு பெரு முயற்சியாக இருக்கும். அனுமன் அருளால் இந்தப் பணியை என்னால் முடிக்க முடிந்தால், அதற்குப் பிறகு மற்ற காண்டங்களை எழுதுவது பற்றிச் சிந்திக்கலாம்.

ராமாயணத்தை முதன்முதலில் சம்ஸ்கிருத மொழியில் எழுதியவர் வால்மீகி. இவர் ஒரு கொள்ளைக்காரராக இருந்தவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். பிறகு நாரதரின் அருளினால் இவர் மனம் திருந்தி அற வழியில் நடக்கத் துவங்கினார்.


ஒருமுறை ஒரு மரத்தில் ஒரு ஆண் பறவையும் பெண் பறவையும் ஒன்றுபட்டுக் களித்திருந்தன. அப்போது ஒரு வேடன் அம்பை எய்தி ஆண் பறவையைக் கொன்று விட்டான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த வால்மீகி, பெண் பறவையின் பிரிவுத் துயரைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் வேடனைச் சபித்து ஒரு பாடலைப் பாடினார்.


அவரையும் அறியாமல் அவர் உள்ளத்திலிருந்து வாய்மொழியாக வெளிவந்த 
ந்தக் கவிதை ஒரு அழகான சந்தத்தில் அமைந்திருந்தது. 

இதுவே சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட முதல் கவிதை என்று கூறப்படுகிறது (கவிதை வடிவில் அமைந்துள்ள வேதங்களும், உபநிஷத்துக்களும் இங்கே கணக்கில் கொள்ளப்படவில்லை- வேதங்களும் உபநிஷத்துக்களும் அநாதியானவை  ஆரம்பம் என்ற ஒன்று இல்லாதவை, காலக்கணக்குக்குள் வராதவை என்று கருதப்படுவதால்).


இதனால்தான் வால்மீகி ஆதிகவி (முதல் கவி) என்று அழைக்கப்படுகிறார்.


தம்மால் இப்படி ஒரு கவிதை எழுத முடியும் என்பது வால்மீகிக்கே ஆச்சரியமாக இருந்தது. பிறகு அவர் பிரும்மாவின் அருளைப் பெற்று ராமாயணத்தை இதே சந்தத்தில் எழுதினார் (சந்தம் என்பது ஒரு செய்யுளில் வரும் வரிகளின் நீளத்தைக் குறிக்கும் சொல். ஆங்கிலத்தில் இதை meter என்பார்கள்.)


வால்மீகி தன் வரலாற்றைத் தானே ராமாயணத்தின் கடைசிக் காண்டமான உத்தர காண்டத்தில் எழுதியிருக்கிறார்.  வால்மீகி ராமபிரானின் காலத்தில் வாழ்ந்தவர். 

ராவணனிடமிருந்து சீதையை மீட்டு அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டு மன்னராக ராமர் கோலோச்சிய காலத்தில், சீதையின்மீது வீசப்பட்ட  அவதூறின்  காரணமாக சீதையைக் காட்டுக்கு அனுப்புகிறார் ராமர்.

காட்டில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில்தான் சீதை தஞ்சம் புகுகிறார். அங்கே சீதைக்கு லவன், குசன் என்ற இரட்டையர்கள் பிறக்கிறார்கள். இவர்கள் வால்மீகியிடம் பாடம் கற்று ராமர்தான் தங்கள் தந்தை என்று அறியாமலே ராமாயணத்தைப் பாடிப் பரப்புகிறார்கள். எனவே ராமாயணக் கதையில் வால்மீகியும் ஒரு பாத்திரம்தான்!

ராமாயணம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.


1) பால காண்டம்:  ராம, லக்ஷ்மண, பரத சத்ருக்னர்களின் பிறப்பு, ராம, லக்ஷ்மணர் விஸ்வாமித்திர முனிவருடன் காட்டுக்குச் சென்று அங்கே தாடகை என்ற அரக்கியைக் கொன்று முனிவர்கள் தடையின்றி வேள்வி செய்ய வழி வகுத்தல், விஸ்வாமித்திரருடன் மிதிலை சென்று வில்லை முறித்து சீதையை மணம் புரிதல் ஆகிய சம்பவங்கள் இந்தக் காண்டத்தில் இடம் பெறுகின்றன.


2) அயோத்யா காண்டம்: சீதையை மணமுடித்து ராமர் அயோத்திக்குத் திரும்புதல், ராமருக்குப் பட்டம் சூட்ட தசரதன் முனையும்போது அவரது மூன்றாவது மனைவி கைகேயி, தசரதன் தனக்கு முன்பு அளித்திருந்த வாக்குறுதியைப் பயன்படுத்தி, தன் மகன் பரதன் அரசாள வேண்டும், ராமன் 14 வருடங்கள் காட்டுக்குப் போக வேண்டும் என்ற இரு வரங்களக் கேட்டுப் பெறுதல், ராமர், லக்ஷ்மணர், சீதை மூவரும் காட்டுக்குக் கிளம்புதல் ஆகிய சம்பவங்கள் இதில் அடங்கும்.


3) ஆரண்ய காண்டம்: ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகிய மூவரும் காட்டுக்குச் செல்லுதல், ராமனின் பிரிவினால் தசரதன் உயிர் துறத்தல், தாய்மாமன் வீட்டுக்குச் சென்றிருந்த பரதன் அயோத்தி வந்து தாயைக் கடிந்து கொண்டு, ராமரைத் தேடிக் கானகம் செல்லுதல், கானகத்தில் ராமர் வேட்டுவக் குலத் தலைவன் குகனைச் சந்தித்து அவனுடன் நட்புப் பேணுதல், தன்னைத் தேடிக் காட்டுக்கு வந்த பரதன் மூலம் தந்தை இறந்த`செய்தி கேட்டு ராமன் வருந்துதல், பரதனையே அரசாளப் பணித்து அவன் கேட்டுக்கொண்டபடி தன் காலணிகளை அவனிடம் கொடுத்தல், ராமர் லக்ஷ்மணர் சீதை ஆகியோரின் கானக வாழ்க்கை, அரக்கர்களை அழித்தல், முனிவர்களைச் சந்தித்தல், ராவணன் வஞ்சகமாகச் சீதையைக் கவர்ந்து செல்லுதல் ஆகிய செய்திகள் ஆரண்ய காண்டத்தில் அடங்கும்.


4) கிஷ்கிந்தா காண்டம்: சீதையைத் தேடி ராம, லக்ஷ்மணர்கள் காட்டில் திரியும்போது வானர அரசன் சுக்ரீவனின் மந்திரியாகிய ஹனுமானைச் சந்தித்தல், அனுமன் மூலம் சுக்ரீவன் அறிமுகம் ஆதல், சீதையைத் தேட உதவுவதாக சுக்ரீவன் வாக்களித்தல், சுக்ரீவன் கேட்டுக்கொண்டபடி அவன் மீது பகை கொண்டிருந்த அவனது மூத்த சகோதரன் வாலியை ராமர் வதம் செய்தல், சீதையைத் தேடி வானரர்கள் பல திசைகளுக்கும் பயணம் செய்தல் ஆகிய சம்பவங்களை உள்ளடக்கியது கிஷ்கிந்தா காண்டம். கிஷ்கிந்தை என்பது சுக்ரீவன் ஆண்ட நாட்டின் பெயர். அதனால் இந்தக் காண்டத்துக்கு இந்தப் பெயர்.


5) சுந்தர காண்டம்: னுமான் சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லுதல், அங்கே அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமர் வந்து அவரை மீட்பார் என்று ஆறுதல் கூறித் திரும்புதல், ராவணனின் படை வீரர்களால் சிறை பிடிக்கப்பட்டு ராவணன் அவைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ராமரின் தூதர் என்று தெரிந்ததும் வாலில் தீ வைக்கப்பட்ட ஹனுமான், அந்தத் தீயினால் இலங்கைக்கே தீ வைத்து விட்டு ராமரிடம் திரும்புதல், சீதையைக் கண்ட விவரங்களை ராமரிடம் எடுத்துரைத்தல் ஆகிய செய்திகளைச் சொல்வது சுந்தர காண்டம்.


6. யுத்த காண்டம்: வானரப் படைகளுடன் ராமர் இலங்கைக்குச் சென்று ராவணனைப் போரில் வென்று சீதையை மீட்டு, அயோத்தி சென்று அரசராகப் பட்டாபிஷேகம் செய்து கொள்வதை விவரிப்பது யுத்த காண்டம்.


7. உத்தர காண்டம்: ராமரின் அரசாட்சி, சீதை மீது அவச்சொல் எழுந்ததைத்  தொடர்ந்து சீதையைக் காட்டுக்கு அனுப்புதல், காட்டில் வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கி சீதை லவ குசர் என்ற இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தல், வால்மீகியிடம் ராமாயணம் கற்று லவ குசர்கள் ராமாயணக் கதையை எங்கும் பரப்புதல், அஸ்வமேகம் செய்த ராமருடன் லவகுசர்கள் போரிடுதல், சீதை வெளிப்பட்டு ராமரிடம் அவருடைய புதல்வர்களை ஒப்படைத்து விட்டு பூமிக்குள் மறைதல், ராமரும் ஆட்சியைப் புதல்வர்களிடம் ஒப்படைத்து விட்டு சரயு நதியில் இறங்கித் தம் அவதாரத்தை முடித்துக் கொள்ளுதல் ஆகிய செய்திகள் இதில் சொல்லப் படுகின்றன.


பொதுவாக ராமாயணம் படிப்பவர்கள் அல்லது ராமாயணக் கதையை உபன்யாசம் செய்பவர்கள் ராமர் பட்டாபிஷேகத்தோடு கதையை மங்களமாக முடித்துக் கொள்வது மரபு.


ராமாயணத்தில் சுந்தர காண்டத்துக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்தால் (பாராயணம் செய்வது என்றால் மனம் ஒன்றிப் படிப்பது என்று பொருள்.) நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம் நாட்டில் பாரம்பரியமாக நிலவி வரும் ஒரு நம்பிக்கை. சுந்தர காண்டத்தைப் படிப்பது ராமாயணம் முழுவதையும் படிப்பதற்குச் சமம்.


வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்வதால் மனத் தெளிவும், அமைதியும் ஏற்படும். வால்மீகி சம்ஸ்கிருதத்தில் எழுதிய சுலோகங்களைப் படிப்பதுதான் பாராயண முறை. சம்ஸ்கிருத எழுத்துக்களைப் படிக்க இயலாதவர்கள் சுலோகங்களின் தமிழ் எழுத்து வடிவங்களைப் படிக்கலாம்.


சுந்தர காண்டத்தின் குறிப்பிட்ட சில ஸர்க்கங்களை(அத்தியாயங்களை)க் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் படிக்கலாம் என்று நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள். சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பது என்பது பெரும்பாலோர்க்குச் சிரமமாக இருக்கும் என்பதால் எல்லோருமே சில பகுதிகளையாவது படிக்க வேண்டும் என்பதற்காகக் கூட இந்த ஏற்பாடு செய்யப் பட்டிருக்கலாம்.


குறிப்பாக, இருபத்து ஒன்பதாவது ஸர்க்கம் மனச் சோர்வுடன் இருந்த சீதைக்கு சில நல்ல சகுனங்கள் தென்படுவதை விவரிக்கிறது. இதில் இருப்பது எட்டு சுலோகங்கள்தான். தினமும் இதைப் பாராயணம் செய்வது அனைவர்க்கும் இயலக்கூடியதுதான்.


குறிப்பிடப்பட வேண்டிய இன்னோரு ஸர்க்கம் 13ஆவது ஸர்க்கம். இந்த ஸர்க்கத்தில் சீதையைக் கண்டு பிடிக்க முடியாமல் அனுமன் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ளலாமா என்று சிந்திக்கிறார். பிறகு அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்த்து, ராமரை தியானித்து உற்சாக மனநிலையைப் பெறுகிறார். இதில் மொத்தம் 73 சுலோகங்கள் உள்ளன. தினம் பத்து சுலோகங்கள் வீதம் படித்தால் ஒரு வாரத்தில் இந்த ஸர்க்கத்தைப் படித்து முடிக்கலாம். இது போல் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து படிக்கலாம்.


இந்த இரண்டு ஸர்க்கங்களையும் குறிப்பிட்டுச் சொன்னவர் காலம் சென்ற முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியர் அவர்கள். அவருடைய உபன்யாசத்தில் இதைக் கேட்டு விட்டு மேற்குறிப்பிட்ட முறையில் இந்த இரண்டு ஸர்க்கங்களையும் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நான் தொடர்ந்து படித்து வருகிறேன். இதை நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம் இதைப் படிப்பவர்கள் நாமும் இப்படிச் செய்யலாமே என்ற உந்துதல் பெற்று இந்த ஸர்க்கங்களைப் படிக்க முனைவார்கள் என்பதுதான்.


இந்தக் காண்டத்துக்கு சுந்தர காண்டம் என்று பெயர் வைத்ததற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சுந்தரம் என்றால் அழகு. எனவே இது ஒரு அழகான (சிறப்பான) காண்டம் என்று பொருள் கொள்ளலாம். சுந்தரன் என்றால் காதலரிடையே தூது செல்பவன், அரச தூதன் என்ற பொருட்களும் உண்டு. ஹனுமான் இந்த இரண்டு பொறுப்
புக்களையுமே ஏற்றுச் செயல் பட்டிருப்பதால் இது சுந்தர காண்டம் என்று பெயரிடப் பட்டது என்றும் கொள்ளலாம். சுந்தரம் என்றால் குரங்கு என்று ஒரு பொருள் உண்டு. அதைத் தவிர ஹனுமானுக்கே அவன் தாயார் அஞ்சனை வைத்த பெயர் சுந்தரன். இதையும் ஒரு காரணமாகக் கொள்ளலாம்.

சுந்தர காண்டம் முழுவதும் வியாபித்திருப்பவர் ஆஞ்சனேயர்தான்.

"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலிம்

பாஷ்ப வாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்."


எங்கெல்லாம் ராமனின் கதை பாடப்படுகிறதோ (சொல்லப்படுகிறதோ) அங்கெல்லாம் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கிய நிலையில் கண்களில் நீர் வழிய (ராமனின் கதையைக் கேட்டபடி) நின்றிருப்பாராம் ஆஞ்சனேயர்!


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக