உலகெங்கும்
ஏலியன்கள் பற்றிய பேச்சு மக்களிடையே சிலிர்ப்பாகவும், வியப்பாகவும் இருந்து
வருகிறது. விஞ்ஞானிகள் ஏலியன் தேடுதல் வேட்டையை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
ஹாலிவுட் இயக்குனர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய கல்லாப்பெட்டியை நிரப்பும் ஒரு
ஆபத்பாந்தவனாக எப்போதுமே ஏலியன்கள் இருக்கின்றனர். ஏலியன்கள் பற்றிய தகவல்களில்
சுவையான பத்து செய்திகளை இங்கே பார்க்கலாம்.
1. லேக் பாய்க்கல் : கடல் ஏலியன்ஸ்
( Lake Baikal—Scene Of An Underwate Aliens )
சைபீரியாவிலுள்ள பாய்க்கல் எனும் ஏரி
மிகப்பிரசித்தம். மிகப்பெரிய ஏரியான இது உலகிலேயே மிகவும் ஆழமானது. இந்த ஏரியில்
தண்ணீருக்கு அடியில் ஏலியன் உண்டு என்பது தான் இந்த ஏரியின் பரபரப்புக்குக்
காரணம்.
இந்த ஏரியின் மேல் மிகப்பெரிய பறக்கும் தட்டைப்
பார்த்தேன் என்று ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கானவர்கள் இது வரை
சொல்லியிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒல்லியான சின்னச் சின்ன ஏலியன் உருவங்கள்
இந்த பறக்கும் தட்டிலிருந்து குதித்து தண்ணீருக்குள் பாய்ந்ததைப் பார்த்தவர்களும்
உண்டு.
இந்த தண்ணீருக்கு அடியிலிருந்து சரேலெனக்
கிளம்பிய ஒரு பறக்கும் தட்டு மின்னலென வானில் பாய்ந்து போனதாக பதட்டத்துடன்
குறிப்பிட்டார், வால்டிமர் அஸாசா எனும் சோவியத் விமானப் படை அதிகாரி ஒருவர்.
அத்துடன் தீரவில்லை கதை.
இங்கே டைவ் அடித்த வீரர்கள் சிலர் கடலுக்கு அடியில்
நவீன மூச்சுக் கருவிகளுடன் சில ஏலியன்கள் சுற்றியதைப் பார்த்து கதிகலங்கிப்
போயினர். அந்த ஏலியன்களைப் பிடிக்க பின்னர் முயன்றபோது அவர்கள் கதிர்வீச்சு போன்ற
ஆயுதத்தால் சில வீரர்களை அழித்ததும் நடந்தது.
2. ஏலியன் உறவு
பிரேசில் நாட்டில் ஆன்டோனியோ விலாஸ் எனும் ஒரு
விவசாயி இருந்தார். தொடர்ச்சியாக சில நாட்கள் வானில் ஒரு பிரகாசமான வெள்ளை ஒளியைப்
பார்த்தார். இது நடந்தது 1950ம் ஆண்டு, அப்போது அவருக்கு வயது 23. ஒருநாள் அதிகாலை
ஒருமணி அளவில் அவர் அவருடைய பைக்கில் வந்து கொண்டிருந்தபோது ஏலியன்களின் வாகனம்
முன்னால் வந்து நின்றது.
தப்பி ஓட நினைத்தவரின் முயற்சிகள்
பலிக்கவில்லை. அவரைத் தூக்கிக் கொண்டு முன்னால் நின்ற பறக்கும் தட்டில்
போட்டார்கள். அங்கே பல ஏலியன்கள் கூடி இவரை வலுக்கட்டாயமாய் அமர்த்தி இரத்த
சாம்பிள்களை எடுத்தார்கள்.
பிறகு அவர் ஒரு அறையில் அடைக்கப்பட்டார். அங்கே
அரை மயக்க நிலையில் அவர் அவர் கிடந்தபோது ஒரு ஏலியன் பெண்மணி அவருடன் உறவு
கொண்டார். அந்த பறக்கும் தட்டிலிருந்த ஒரு சின்ன கருவியை அவர் திருட்டுத் தனமாக
எடுத்துக் கொண்டு வர விரும்பினார். ஆனால் அவரை அவர்கள் தூக்கி வெளியே எறிந்தனர்.
நம்பவே முடியாத இந்த கதை ஏலியன் வரலாற்றுப்
பதிவுகளில் கவனமாய்க் குறித்து வைக்கப்பட்டுள்ளது.
3. கண்காணிக்கு ஏலியன் கோட்டை
கான்ஸ்பரஸி தியரி என ஆங்கிலத்தில்
அழைக்கப்படும் குறிப்புகள் மிகவும் பிரபலம். அதில் ஒன்று இது. நமது பூமிக்கு மேலே
ஒரு மிகப்பெரிய அசுரத்தனமான ஏலியன் விண்கலம் ஒன்று உண்டு. அது பூமியை கண நேரமும்
கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.
சுமார் 13 ஆயிரம் ஆண்டுகளாக இந்த விண்கலம்
அங்கேயே இருக்கிறது. பூமியோடு தொடர்பு கொள்வதும், தொடர்பை விலக்கிக் கொள்வதுமாய்
இருக்கிறது. இது நினைத்தால் கண நேரத்தில் பூமியோடு போரிட்டு அழிக்க முடியும். என்பது
தான் அந்த தியரி.
1899ம் ஆண்டு நிக்கோலா டெஸ்லா எனும் வானியல்
அறிஞர் தான் இதை முதலில் கண்டறிந்து சொன்னவர். 1950 களிலும் 60களிலும் இது குறித்த
பேச்சு பரபரப்பாய் இருந்தது. சில புகைப்படங்களும் வெளியாகின. அடுத்த உலகப் போர்
ஏலியன்களோடு இருக்கலாம் என டெக்லஸ் மெக் ஆர்த்தர் எனும் அமெரிக்க தளபதி
குறிப்பிட்டது இதன் பின்னணியில் தான்.
4. ஏலியன் மனிதர்கள்.
ஏலியன்கள் கதைகளில் எப்போதும் புதிராக இருப்பவை
ஏலியன்களால் கடத்தப்படும் மனிதர்களைப் பற்றிய கதைகள். திடீரென ஒருநாள் காணாமல்
போய், அதன்பின் சிலநாட்களுக்குப் பின் திடீரென பிரசன்னமாகும் மக்களின் கதைகள்
எக்கச்சக்கம் உண்டு.
இவர்கள் பெரும்பாலும் வசியம் செய்யப்பட்டு
ஏலியன்களின் இடத்துக்குக் கொண்டு போகப்பட்டு மனிதன் பாதி, ஏலியன் மீதி எனும்
ஹைபிரிட் வகை மனிதர்களாகத் திரும்பி அனுப்பப்படுவதாக கதைகள் பல உண்டு.
அவர்களில் எடி பேஜ் என்பவருடைய கதை வியப்பானது.
வியட்னாமில் டூர் போயிருந்தபோது 11 நாட்கள் காணாமல் போனார். பின்னர் மீண்டும் அவர்
தரிசனமானபோது தான் ஒரு ஏலியன் கலந்த கலவை. இது அமெரிக்காவின் சீக்ரெட் மிஷன் என
திடுக்கிட வைத்தார்.
இதெல்லாம் கட்டுக்கதை என பலர் சொன்னாலும் சில
விஷயங்கள் நம்பலாமோ என எண்ணத்தோன்றுகின்றன. இவருடைய இரத்த வகை இதுவரை இல்லாத புது
வகை என்கிறது மருத்துவ அறிக்கை.
உடலில் விலா எலும்புகளின் எண்ணிக்கை அதிகமாக
இருக்கிறது, உடல் உள் உறுப்புகளில் மாற்றம் உண்டு. உடல் எலும்புகளில் உலோகங்கள்
இருக்கின்றன. மூளை வித்தியாசமாக இருக்கிறது என இவர் குறித்த மர்ம செய்திகளும்
அறிக்கைகளும் பிரமிக்க வைக்கின்றன
5. அறிவியல் பார்வை
ஏலியன்கள் எப்படி இருப்பார்கள் என்பதை அறிவியல்
பல்வேறு ஆய்வுகளின் மூலம் கணித்து வைத்திருக்கிறது. அதில் முக்கியமான விஷயம்
அவர்களுடைய உருவம். அவர்கள் மனிதர்களைப் போல இருக்க சாத்தியமில்லை என்பது ஒரு
செய்தி.
எலியன்கள் நிச்சயம் உடல் வலிமை உடையவர்களாக
இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் நோஞ்சான்களாக, தங்களுடைய தொழில்நுட்பக் கருவிகளை
இயக்கக் கூடிய அளவு மட்டுமே வலிமை உடையவர்களாக இருப்பார்கள் என்பது இன்னொரு
செய்தி.
அவர்களுடைய பேச்சு நம்மைப் போல இருக்காது.
அவர்கள் அதிர்வுகளால் பேசுபவர்களாகவும், உடலிலுள்ள சென்சார்களினால் அதைப் புரிந்து
கொள்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வேகமாக இயங்குபவர்களாகவும், அதீத
அறிவுள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது இன்னொரு செய்தி.
இப்படி அறிவியல் ஏலியன்களைக் குறித்து
செய்திகளை வெளியிட்டு ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுகிறது.
6. கிரகங்களும் ஏலியன்களும்
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இம்மானுவேல்
ஸ்வீடன்போர்க் எனும் தத்துவஞானி மிகப்பிரபலம். நரகத்தைக் குறித்து இவர் கண்ட
மூன்று காட்சிகள் இன்றும் பிரபலமாய் இருக்கின்றன. பற்றி எரியும் நாடு போலவும்,
அச்சுறுத்தும் உருவங்கள் உலவும் இருட்டுக் கானகமாகவும், தங்களைச் சுற்றியிருக்கும்
தனிப்பட்ட நரகமாகவும் இவர் காட்சிகளைக் கண்டார்.
இவை தவிர இவர் பிற கிரகங்களில் என்னென்ன
இருக்கின்றன என்பதைக் குறித்தும் பல காட்சிகளைக் கண்டு அதை எழுதினார். நிலவில்
குழந்தைகளைப் போன்ற மனிதர்கள் உண்டு. அவர்கள் உரத்த குரலில் பேசுவார்கள் என்றும்,
செவ்வாயிலுள்ள ஏலியன்கள் டெலிபதி மூலம் பேசுவார்கள் என்றும், சனி கிரகத்தில்
உள்ளவர்கள் கடவுளை வழிபடுபவர்கள் என்றும், ஜுபிடரில் உள்ளவர்கள் தனித்தனி குடும்பங்களில்
வாழ்பவர்கள் என்றும் இவர் எழுதி வைத்திருக்கிறார்.
இவையெல்லாம் கதைகள் என தோன்றினாலும் அதைக்
குறித்த நுண்ணிய விளக்கங்களும், அவருடைய கதைகளும் ஏலியன் குறித்த கனவுகளுக்கு தீனி
போடுகின்றன.
7. ஏலியன் தொடர்பு
இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில்
இருக்கலாம் என நம்பப்படும் ஏலியன்களோடு தொடர்பு கொள்ள வேண்டுமென மனுக்குலம்
தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கிறது.
இங்கிருந்து ஒரு குரலோ, ஒளியோ, கருவியோ இன்னொரு
இடத்துக்குச் செல்ல நூற்றுக்கணக்கான, அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகலாம்.
ஆகவே இப்போது விஞ்ஞானம் டெலிபதி மூலம் தொடர்பு கொள்ளும் முயற்சிகளைச் செய்கிறது.
ஸ்டீவன் கிரீர் என்பவர் அப்படி தொடர்பு கொள்வதில் வெற்றி பெற்றிருப்பதாகச்
சொல்கிறார்.
காஸ்மிக் அலைகளின் மூலமாக அதிக மெகாஹெட்ஸ் உள்ள
குரல்களை வானுக்கு அனுப்பி ஏலியன்களின் பதில் எதிர்பார்ப்பது இன்னொரு வகை.
தொடர்ந்து அத்தகைய பல்வேறு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படி அனுப்பிய
ஒலிகளில் பீத்தோவானின் சிம்பொனியும் அடக்கம்.
8 உலோக ஏலியன்
வெனிசுலா நாடு. 1954ம் ஆண்டு குஸ்டாவோ கோன்சலஸ்
மற்றும் போன்ஸ் இருவரும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு வளைவில்
திரும்பிய போது முன்னால் ஒரு வெளிச்சம் ! நடு ரோட்டில் அப்படி என்ன வெளிச்சம் என
வெளியே வந்து பார்த்தார்கள்.
ஒரு பறக்கும் தட்டு. அதிலிருந்து இரண்டு பேர்
வெளியே வந்து கொண்டிருந்தார்கள். சின்ன உருவமான இருவரில் ஒருவர் கோன்சலஸ் மீது
தாவினான். மெல்லிய உருவம் ஆனால் மிகவும் வலிமையாய் இருந்தது அந்த ஏலியன்.
ஏலியன் அவரைத் தூக்கி பதினைந்தடி உயரத்துக்கு
எறிந்தது. சட்டென கத்தியை எடுத்து ஏலியனை வெட்டினார் அவர். ஆனால் ஒரு இரும்பில்
பட்டது போல ஒரு சத்தம் வந்தது அவ்வளவு தான்.
சொன்னால் நம்புவார்களோ இல்லையோ எனும் பயத்துடன்
போலீஸ் ஸ்டேசன் சென்றார்கள். உள்ளே நடுங்கிக் கொண்டு நின்றிருந்தார் ஒரு
போலீஸ்காரர். இவர்கள் பேசும் முன் அவர் ஆரம்பித்தார்.
‘ந..நடந்தது எல்லாத்தையும் நான் பாத்துட்டு
தான் இருந்தேன்”
9. குட்டி ஏலியன்கள்
1970 ஆகஸ்ட் 19ம் தியதி. மலேஷியாவின் காட்டுப்
பகுதி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தார்கள் சில சிறுவர்கள். திடீரென அவர்களுக்கு
முன்னால் ஒரு மீட்டர் தொலைவில் ஒரு குட்டி பறக்கும் தட்டு வந்து இறங்கியது.
அதிலிருந்து ஐந்து பேர் இறங்கினார்கள்.
அவர்களின் உயரம் வெறும் மூன்று இஞ்ச் தான். குட்டி பொம்மைகள் போல இருந்த அவர்களில்
ஒருவர் மஞ்சள் நிற ஆடையும், நான்கு பேர் நீல நிற உடையும் அணிந்திருந்தனர்.
அந்த சிறுவர்களில் ஒருவனான விக்னேஷ்வரன்
ஏலியன்களை நெருங்க முயற்சி செய்த போது லேசர் தாக்குதலுக்கு உள்ளானார். இன்றும்
மர்மம் நிறைந்த விஷயமாக இந்த நிகழ்வு இருக்கிறது.
10 பல்லி மனிதன்
அல் உபைட் ஈராக்கின் அகழ்வாராய்ச்சி
ஆய்வாளர்களுக்கு பொன் விளையும் பூமி. கிமு 5900 க்கும் கிமு 4000 க்கும் இடைப்பட்ட
காலத்தின் முன் சுமேரிய கால நாகரீகங்கள் அங்கே புதைந்து கிடக்கின்றன.
அங்கே கிடைத்த பல விஷயங்கள் வியப்பூட்டினாலும்,
ஒரு விஷயம் குழப்பத்தைக் கொடுக்கிறது. அது பல்லி உருவ மனித உருவம். அது என்ன எனும்
கேள்விக்கு விடையில்லை.
அது ஏலியன் உருவம் என்பது முக்கியமான அனுமானங்களில்
ஒன்று. அதற்கு வலு சேர்ப்பது போல இருந்தது இத்தாலியிலுள்ள பியர் சான்பிரிடா
என்பவர் 1978ம் ஆண்டு சொன்ன நிகழ்வு. அவர் பத்தடி உயரமுள்ள பெரிய பல்லி
மனிதர்களைக் கண்டிருக்கிறார். அவர்கள் கையிலிருந்த வெப்பக் கதிரினால் இவரைத்
தாக்கியிருக்கிறார்கள்.
பின்பு அந்தப் பகுதியில் சுமார் ஐம்பது இஞ்ச்
வரை பெரிய காலடி அடையாளங்கள் தென்பட்டு இவருடைய கூற்றை வலுவாக்கியது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக