Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 19 அக்டோபர், 2019

மனித ஞானம் இவ்வளவுதானா?


 Image result for மனித ஞானம் இவ்வளவுதானா?
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் நல்ல அறிவாளிகளாக இருந்தனர். அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிகுந்த புத்திசாலியாக விளங்கினான். மிகுந்த ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டான்.

இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களைக் காட்டிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான். ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும், கவனமும் செலுத்தினார். சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக பார்க்க ஆரம்பித்து விட்டான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட அவன் மதிக்காமல் இருந்தான்.

பலருக்கும் மத்தியில் மூத்த மாணவர்களிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்தான். அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்வான். இந்த விஷயம் ஆசிரியரின் காதுகளுக்கு சென்றது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார்.

நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையே கூட எதிர்த்துப் பேசக்கூடும். அதற்காக அவர் வேறொரு வழியை யோசித்தார். மறுநாள் அவனை அழைத்து இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இருநூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு.

நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப்படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் என்று கூறினார். கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்தி விட்டன. இதோ உடனே செய்து முடிக்கிறேன் ஐயா என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டிற்கு விரைந்தான்.

ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான். ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார். அவனும் ஆசிரியர் சொன்னபடியே அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் என அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரிக்கு கோபம் வந்துவிட்டது. ஏன்டா ! இன்னிக்கு நீ பொழுது போக்க நான் தான் கிடைச்சேனா? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளறியே! நீ படிச்சவன்தானா? என்றார்.

அதைக் கேட்டதும் அந்த மாணவனுக்கு கோபம் வந்துவிட்டது. அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் என்றான். அதற்கு ஆசாரி அடேய் அறிவு கெட்டவனே. என்னதான் படிச்சிருந்தாலும், விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணம்தான்.

எனக்கு வேண்டியது அதோட உயரமும், அகலமும்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா என்றார். இதைக்கேட்டதும் அவனுக்கு பளீரென்று அடி விழுந்தது போல் இருந்தது. மனித ஞானம் இவ்வளவுதானா? இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன்? என்று நினைத்துக் கொண்டே ஆசிரியரின் முன்னால் கூனிக் குறுகியபடியே போய் நின்றான். ஆசிரியர் சிரித்துக் கொண்டே என்னப்பா! சவப்பெட்டி அடிச்சாச்சா என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன், என்னோட தலைக்கனத்துக்கு பதிலடிகிடைச்சுது என்றான்.

என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரம் தான். இதை உணர்ந்து மனத்தாழ்மையாய் நடப்பதே உண்மையான ஞானம். வீண்பெருமையும், அகந்தையும் உடையவர்கள் முக்கியமற்றுப் போகிறார்கள். ஆனால் அடக்கமாக இருக்கிறவர்கள் ஞானம் பெறுகிறார்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக