Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 21 அக்டோபர், 2020

பாம்பின் பரிதாப நிலை

ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு. கண்களைத் திறந்து பார்த்தார். உனக்கு என்ன வேண்டும்? சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன். அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் தயவு செய்து எனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டது.

 

முனிவர், நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால், உனக்கு அடுத்த பிறவியில் உயர்ந்த பிறவி கிட்டும் என்று உபதேசித்து ஆசி கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த பாம்பு அவரை வணங்கி சென்றது. காட்டில் திரிந்த பாம்பு ஊருக்குள் வந்தது. நாம் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என முனிவரிடம் கூறிவிட்டோமே. நமக்கும் யாரும் தொந்தரவு தரமாட்டார்கள் என எண்ணிக் கொண்டது.

 

அதனால் அந்தப் பாம்பு ஊரில் உள்ள ஒரு மைதானத்தில் உலவியபடி இரை தேடியது. அப்போது அங்கு விளையாட வந்த சில சிறுவர்கள் அங்கு உலவும் பாம்பைப் பார்த்து அலறினார்கள். அந்த பாம்பு யாரையும் தொந்தரவு செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது. ஆனால் சிறுவர்கள் விடுவார்களா? பாம்பின் அருகே இருந்த கற்களை எடுத்து வீசத் தொடங்கினர். அப்போது பாம்பு தன் தலையைத் தூக்காது மெல்ல ஊர்ந்து கிடைத்த பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. பாம்பு இரவானதும் அந்த இடத்தை விட்டு விட்டு காட்டை நோக்கி சென்றது. அதனால் ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயத்துடன் சென்று முனிவர் முன் நின்றது.

 

அதிகாலையில் ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர், என்னவாயிற்று? ஏன் இப்படி காயப்பட்டு வந்திருக்கிறாய்? என்று அன்போடு வினவினார். சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று ஊருக்கு வெளியே இருந்த மைதானத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாட வந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள் என்று கூறிக் கண்ணீர் விட்டது. 

 

உன்னைக் கடிக்காதே என்று தானே சொன்னேன். நீ உன் பிறவி குணத்தைக் காட்டவேண்டியது தானே? பாம்புக்குப் புரியவில்லை. அது என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என்று கேட்டது. ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள் நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றுதான் சொன்னேன்.

 

உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள், சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே, அந்தப் பதிலை ஏற்றுக் கொண்ட முனிவர் பாம்புக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

 

சில நாட்கள் கழித்து அந்தப் பாம்பு காட்டின் எல்லையில் ஒரு பாறை அருகே படுத்திருந்தது. அப்போது சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் அங்கு வந்தனர். பாம்பு படுத்திருப்பதைப் பார்த்தனர். ஒவெனக் கூவியவாறு ஓடினர். மீண்டும் அருகே வந்தபோது பாம்பு புஸ் என சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகினர். பாம்பு நலமுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது. அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமைய வேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்தது அந்தப் பாம்பு. அதே போல் தனக்கு தீமை ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு.

 

நீதி :

தன்னிடம் உள்ள வலிமை வைத்து மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!