பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பேசிப்பழகி பண மோசடி செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
தொடர்கதையாகும் மோசடி சம்பவம்
குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதற்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய நிகழ்வையும் நாம் கேட்டிருப்போம். அதேபோல் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்தது குறித்த செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.
பரிசுக்கு முன்பணம்
அதுமட்டுமின்றி சில சமயங்களில் ஒரு பிரபல நிறுவனத்தில் இருந்து உங்கள் மெயில் ஐடிக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என ஒரு மின்னஞ்சல் வரும். ஓரிரு நாளில் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்து உங்களது பரிசுத் தொகை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற காரணங்களை கூறி நம்மிடம் முன்பணம் கேட்பார்கள். இதுபோல் மோசடி செய்பவர்கள் குறித்தும் கேள்விப்பட்டிருப்போம்.
மும்பையை சேர்ந்த ஒய்வு பெற்ற ஆசிரியர்
இதன்படி மும்பையை சேர்ந்த ஒய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் கடந்த மே மாதம் முதல் ஸ்காட்லாந்தை சேர்ந்த லியோ ஜேகப்ஸ் என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பாகி உள்ளார். ஆசிரியையிடம் அந்த நபர் தான் பைலட்டாக பணிபுரிந்து வருவதாகவும் இந்தியாவில் நிலம் வாங்க ஆசை உள்ளதாகவும் அதற்கு சுமார் 4.7 கோடி ரூபாய் பணம் மற்றும் கடிகாரம், பூக்களை பரிசாக அனுப்பியுள்ளதாக ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் ஆசிரியை நம்பருக்கு பெண் ஒருவர் கால் செய்து சுங்கத்துறை அதிகாரி பேசுவதாகவும் தங்கள் பெயரில் பார்சல் வந்துள்ளது அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
வங்கிக் கணக்குக்கு செலுத்திய பணம்
அதை நம்பிய ஆசிரியை கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் சுமார் 58 லட்ச ரூபாய் பணத்தை அந்த பெண்ணின் வங்கிக் கணக்கு செலுத்தியுள்ளார். ஆசிரியை சந்தேகமடைய தொடங்கியதும் அந்த பெண் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து காணாமல் போகிவிட்டார்.
வெப்சீரிஸில் நடிக்க வாய்ப்பு
டெல்லியில் ஒரு பெண்ணுக்கு சமூகவலைதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி வெப்சீரிஸில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி வெப் சீரிஸ் நடிப்பதற்கு தனது சாதாரண புகைப்படங்கள் மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டுள்ளனர். நம்பி அந்த பெண்ணும் அனுப்பியுள்ளார
சமூகவலைதளங்களில் வைரலாக்கி விடுவதாக மிரட்டல்
அதன்பின் நிர்வாண புகைப்படங்களை அனுப்ப வேண்டும் எனவும் இல்லையென்றால் தாங்கள் அனுப்பிய புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வைரலாக்கி விடுவேன் என மிரட்டல் விடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி பரிசு
சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு பெண்ணுக்கு மர்மநபர் ஒருவர் கால் செய்து தனியார் தொலைக்காட்சியில் இருந்து பேசுவதாகவும் தங்களுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரூ.9.25 லட்சம் வரி செலுத்த வேண்டும்
அதேபோல் ரூ.1 கோடி பரிசுத் தொகை வேண்டும் என்றால் முன்பாக அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்றும் ரூ.1 கோடிக்கு வரியாக ரூ.9.25 லட்சத்தை தனது வங்கிக் கணக்கு போடும்படியும் கூறியுள்ளார். இதை நம்பி அந்த பணம் போட்டுள்ளார். பணம் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகியவுடன் அந்த மர்ம நபரின் தொலைபேசி எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது.
சிறப்பு பரிசு கார்
ராமநாதபுரம் ராமேஸ்வரம் பகுதியில் மளிகை நடத்தி வரும் ஒருவர், கடந்த 4 மாதங்களாக பல பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி வந்துள்ளார். இதையடுத்து பெண் ஒருவர் அவரது எண்ணுக்கு கால் செய்து, தாங்கள் ஏணைய விலையுயர்ந்த பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளீர்கள் எனவே அதற்காக சிறப்பு பரிசு தங்களக்கு வழங்குவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். அந்த சிறப்பு பரிசு கார் என்றும் அதை பெறுவதற்கு ரூ.6,000 முன்பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
காவல்நிலையத்தில் புகார்
சந்தேகமடைந்த அந்த நபர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையறியாத அந்த பெண் மீண்டும் அந்த நபருக்கு கால் செய்து சார், கார் வேணுமா பணம் போடுங்க என கூறியுள்ளார். மறுமுனையில் பேசியவர் தான் ஒரு காவலர் என தெரிவித்தவுடன் அந்த பெண் அழைப்பு துண்டித்துவிட்டார். இதுகுறித்து சைபர் க்ரைம் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
கோடிக் கணக்கான ரூபாய் பரிசு, லட்சக்கணக்கில் சம்பளம், கார் பரிசு, விமான நிலையத்தில் பார்சல் வந்திருக்கு என பல வழிகளில் மோசடி நபர்கள் ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்று சந்தேகம்படும்படியான அழைப்பு, மின்னஞ்சல் வந்தால் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும் அறிமுகமில்லாத யாரது வங்கிக் கணக்கிற்கும் பணம் செலுத்த வேண்டாம்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக