கார், பைக்குகளில் CBU யூனிட் மற்றும் CKD யூனிட் என்றால் என்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
கார் அல்லது பைக் பற்றிய செய்திகளை படிக்கும்போது CBU மற்றும் CKD போன்ற வார்த்தைகளை நீங்கள் பார்த்திருக்க கூடும். அப்படி என்றால் என்ன? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். CBU மற்றும் CKD என்றால் என்ன? என்பது குறித்தும், அவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் குறித்தும் இந்த செய்தியில் நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம்.
Completely Built Units என்பதன் சுருக்கம்தான் CBU. அதே சமயம் Completely Knocked Down Units என்பதன் சுருக்கம்தான் CKD. பொதுவாக CKD யூனிட்களை விட CBU யூனிட்களின் விலை மிகவும் அதிகமாக இருக்கும். அதற்கு என்ன காரணம்? என்பது உள்பட அனைத்து தகவல்களையும் இந்த செய்தியில் விரிவாக பார்க்க போகிறோம்.
ஒரு காரோ அல்லது பைக்கோ விற்பனைக்கு முழுமையாக தயார் செய்யப்பட்ட நிலையில், ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவது CBU யூனிட் எனப்படுகிறது. உதாரணத்திற்கு ஜெர்மனியில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட சொகுசு கார் ஒன்று, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது என வைத்து கொள்வோம்.
அந்த காரின் உற்பத்தி பணிகள் ஜெர்மனியிலேயே முழுமையாக முடிவடைந்திருக்கும். இந்தியாவில் இருந்து முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்கு டெலிவரி கொடுப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். இதுதான் CBU யூனிட். இறக்குமதி செய்யப்படும் நாட்டில் CBU யூனிட்களுக்கு கலால் வரி போன்றவை அதிகமாக விதிக்கப்படும்.
இதனால்தான் CKD யூனிட்களை விட CBU யூனிட்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அதே சமயம் CKD யூனிட்கள் என்பது, வெளிநாடுகளில் இருந்து பாகங்கள் அதிகாரப்பூர்வமாக தருவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும் நாட்டில் அசெம்பிள் செய்யப்படுவதை குறிக்கிறது. உதாரணத்திற்கு ஒரு கார் நிறுவனம் ஜெர்மனியில் இருந்து பாகங்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்கிறது என வைத்து கொள்வோம்.
ஜெர்மனியிலேயே காரை அசெம்பிள் செய்வதற்கு பதிலாக, பாகங்களை மட்டுமே அந்த நிறுவனம் இந்தியா கொண்டு வரும். அதன்பின் இந்தியாவில் அந்த பாகங்களை முழுமையான காராக அசெம்பிள் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும். இந்த வழியில் விற்பனை செய்யப்படும் கார்கள் CKD யூனிட்கள் எனப்படுகின்றன.
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுவதால், CKD யூனிட்கள் ஒரு சில குறிப்பிட்ட வரிகளை தவிர்த்து விட முடியும். எனவே CBU யூனிட்களை விட CKD யூனிட்களின் விலை மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான சூப்பர் கார்கள் மற்றும் சூப்பர் பைக்குகள் CBU யூனிட்கள்தான். இதன் காரணமாகதான் அவை விலை உயர்ந்தவையாக உள்ளன.
CKD யூனிட்களை பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாகங்கள், விற்பனை செய்யப்படும் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள உற்பத்தி ஆலைக்கு முதலில் அனுப்பி வைக்கப்படும். இந்த பாகங்களை கொண்டு அந்த உற்பத்தி ஆலையில் முழுமையான ஒரு வாகனத்தை உருவாக்குவார்கள். அதன்பின்பு வாடிக்கையாளர்களுக்கு வாகனம் விற்பனை செய்யப்படும்.
வெளிநாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம், மற்றொரு நாட்டில் CKD வழியில் வாகனங்களை விற்பனை செய்வது என முடிவு செய்தால், அங்கு பாகங்களை அசெம்பிள் செய்ய உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டும். இதற்கு முதலீடு தேவைப்படும். ஆனால் வாகனம் விற்பனை செய்யப்படும் நாட்டில், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
உதாரணத்திற்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இந்தியாவில் CKD வழியில் வாகனத்தை விற்பனை செய்தால், இங்குதான் அசெம்பிள் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு உள்கட்டமைப்பு மற்றும் மனித வளம் ஆகியவை தேவைப்படும் என்பதால், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் வரிகளை தவிர்த்து விட்டு பார்த்தால், CBU யூனிட்களால் இந்தியாவிற்கு பெரிய வருமானமோ, வேலைவாய்ப்புகளோ கிடைக்காது..
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக