Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 26 டிசம்பர், 2020

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தி கேந்திரமாக மாறும் ஓசூர்!

 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தி கேந்திரமாக மாறும் ஓசூர்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் இந்தியாவின் முக்கிய கேந்திரமாக ஓசூர் நகரம் மாறி வருகிறது. பல முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் ஓசூரை நோக்கி படையெடுக்க துவங்கி இருக்கிறது.


தமிழகத்தின் மிக முக்கிய தொழில்நகரங்களில் ஓசூர் மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. சென்னைக்கு அடுத்து தமிழகத்தில் வாகன உற்பத்தி கேந்திரமாக ஓசூர் நகரம் இருந்து வருகிறது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் கனரக வாகன உற்பத்தி ஆலை மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இருசக்கர வாகன உற்பத்தி ஆலைகள் மிக நீண்ட காலமாக ஓசூரில் செயல்பட்டு வருகின்றன.


இதன்மூலமாக, வாகன நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் அங்கு வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

 

இந்த சூழலில், நாட்டிலேயே மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியில் ஓசூர் நகரம் முக்கிய கேந்திரமாக மாறி வருகிறது. இங்கு ஏற்கனவே டிவிஎஸ் நிறுவனத்தின் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் முன்னிலை வகிக்கும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனமும் ஓசூரில் தனது உற்பத்தி ஆலையை அமைத்து வருகிறது. பெங்களூரில் சிறிய அளவில் செயல்பட்டு வந்த ஏத்தர் ஆலையில் உற்பத்தி சில தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்த நிலையில், ஓசூரில் அமைக்கப்படும் புதிய ஆலையில்தான் இனி ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உள்நாட்டு சந்தை மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் முடிவு செய்துள்ளது. 4 லட்சம் சதுர அடி பரப்பில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது.

இந்த சூழலில், வாடகை கார் சந்தையில் முன்னணி வகிக்கும் ஓலா நிறுவனமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கி இருக்கிறது. மேலும், உலகிலேயே மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையையும் அமைக்க முடிவு செய்தது.

இதற்காக பல்வேறு மாநிலங்களிலும் புதிய ஆலைக்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டது. வெளிநாடுகளில் அமைப்பது குறித்தும் பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், இறுதியாக தமிழகத்தின் ஓசூர் நகரில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை அமைக்கப்பட உள்ளது. ரூ.2,400 கோடி முதலீட்டில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது.

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தனது எலெக்ட்ரிக் வாகன நிறுவனத்தில் முதல்கட்டமாக 2,000 பேரையும், எதிர்காலத்தில் 10,000 பேர் வரை பயணியமர்த்த ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை இந்தியாவில் மிக வலுவான நிலையை நோக்கி செல்வதுடன், உலகின் பல்வேறு நாடுகளிலும் சுற்றுச்சூழல் பிரச்னையால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் போக்கு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை மிகப் பெரிய அளவில் விரிவடையும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில், ஓசூரில், டிவிஎஸ், ஏத்தர் எனெர்ஜி மற்றும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது, அந்நகரின் தொழில்துறை வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும்.

அதிக வேலைவாய்ப்பு மற்றும் அந்நகரின் வர்த்தக நிறுவனங்களுக்கு இது மேலும் வலு சேர்க்கும். ஓலா மற்றும் ஏத்தர் நிறுவனங்கள் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவதால், அருகிலுள்ள மிகப்பெரிய தொழில் நகரமாக ஓசூர் இருப்பதுடன், தொழிற்துறைக்கு சாதகமான தமிழக அரசின் திட்டங்களும் இந்த பெரும் நிறுவனங்களை கவர்ந்துள்ளது.

டிவிஎஸ், ஏத்தர் எனெர்ஜி மற்றும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனங்களின் வருகையையடுத்து, மேலும் சில நிறுவனங்கள் தைரியமாக ஓசூரில் மின்சார வாகன ஆலைகளை அமைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இதனால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் நாட்டின் முக்கிய கேந்திரமாக ஓசூர் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக