
இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவையைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக யூபிஐ பணப் பரிமாற்ற சேவையை அளிக்கும் நிறுவனங்கள் மத்தியில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் பெரும் போட்டி நிலவுகிறது.
இந்தியாவில் போன்பே, கூகுள் பே, பேடிஎம், ஆகிய நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி உருவாகியிருந்த நிலையில் சமீபத்தில் வாட்ஸ்அப் பே அறிமுகம் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தப் பாதிப்புகளையும் தாண்டி கூகுள் போன்ற பெரும் நிறுவனங்களைச் சமாளித்து டிசம்பர் மாதம் நாட்டின் முன்னணி யூபிஐ செயலியாக உருவெடுத்துள்ளது போன்பே. தேசிய பேமெண்ட் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்கள் படி இந்தியாவில் டிசம்பர் மாதம் கூகுள் பே யூபிஐ செயலியில் மக்கள் 854.49 மில்லியன் பரிமாற்றங்கள் மூலம் 1.76 லட்சம் கோடி ரூபாயைப் பரிமாற்றம் செய்துள்ளனர்.
இதே டிசம்பர் மாதத்தில் போன்பே செயலியில் சுமார் 902.03 மில்லியன் பணப் பரிமாற்றங்கள் மூலம் சுமார் 1.82 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணத்தைப் பரிமாற்றம் செய்து நாட்டின் மிகப்பெரிய யூபிஐ செயலியாக முன்னேறியுள்ளது.
மேலும் போன்பே மற்றும் கூகுள்பே ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே நாட்டின் மொத்த யூபிஐ பணப் பரிமாற்ற வர்த்தகத்தில் 78 சதவீதத்தைக் கைப்பற்றியுள்ளது. இதன் அளவு நவம்பர் மாதத்தில் 86 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
3வது இடத்தில் பேடிஎம் செயலி 256.36 மில்லியன் பணப்பரிமாற்றத்தின் மூலம் 31,291.83 கோடி ரூபாய் அளவிலான பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளது. இதேபோல் இந்தியாவில் புதிதாக அறிமுகமாகியுள்ள வாட்ஸ்அப் பே டிசம்பர் மாதத்தில் சுமார் 8,10,000 பரிமாற்றங்கள் மூலம் 29.72 கோடி ரூபாய் அளவிலான பணப் பரிமாற்றத்தைச் செய்துள்ளது.
5வது மற்றும் 6வது இடத்தில் அமேசான் பே மற்றும் அரசின் BHIM செயலி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக