Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 6 பிப்ரவரி, 2021

பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம்... இன்னும் இரண்டே வாரங்கள்தான்... வெளியாகிறது அதிரடி அறிவிப்பு

 பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம்... இன்னும் இரண்டே வாரங்கள்தான்... வெளியாகிறது அதிரடி அறிவிப்பு

பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தின் கீழ், சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பழைய வாகன அழிப்பு கொள்கையின் கீழ் (Vehicle Scrapping Policy), என்னென்ன சலுகைகள் மற்றும் எவ்வளவு ஊக்க தொகை வழங்கப்படும்? என்பதை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்த விபரங்கள் வெளியிடப்படலாம் எனவும், அரசின் உயர் அதிகாரி ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பழைய வாகன அழிப்பு கொள்கை அறிவிக்கப்பட்டது. இதனை இறுதி செய்யும் பணிகளில் போக்குவரத்து துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. இதன் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் செயலாளர் கிரிதர் அரமனே தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் நேற்று (பிப்ரவரி 5) பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது, கிரிதர் அரமனே இதனை கூறினார். பழைய வாகன அழிப்பு கொள்கையின் கீழான சலுகைகளை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியிருந்தாலும், என்னென்ன சலுகைகள்? என்பதை பற்றிய விபரங்கள் எதையும் கிரிதர் அரமனே வெளியிடவில்லை.

இதுதவிர தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு எஃப்சி (FC - Fitness Certification) பெறுவதற்கான கட்டணம் ஆகியவற்றை உயர்த்துவதற்கும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பழைய வாகனங்கள் சாலையில் இயக்கப்படுவதை தவிர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

பழைய வாகனங்கள் சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்படுவதால், அவற்றின் பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதுதவிர சாலை பாதுகாப்பு என்ற மற்றொரு நோக்கமும், பழைய வாகன அழிப்பு கொள்கையில் இருப்பதாக கிரிதர் அரமனே கூறியுள்ளார்.

அதாவது பழைய வாகனங்களில் ஏர்பேக்குகள் மற்றும் சீட் பெல்ட்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இருக்காது என்பதால், கிரிதர் அரமனே இவ்வாறு கூறியுள்ளார். ஆனால் தற்போது விற்பனை செய்யப்படும் புதிய வாகனங்களில் ஏர்பேக், சீட் பெல்ட்கள் போன்ற பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் இடம்பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய வாகன அழிப்பு கொள்கையின் மூலம் சுற்றுச்சூழல் மேம்படும் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதுடன், புதிய வாகனங்களின் விற்பனையும் உயரும். எனவே ஆட்டோமொபைல் துறையினருக்கு, பழைய வாகன அழிப்பு கொள்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது பல்வேறு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பழைய வாகன அழிப்பு கொள்கையுடன், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக