Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 12 ஜனவரி, 2022

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சோலைமலை மதுரை

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ,சோலைமலை,மதுரை - அமரகோசம்

இந்த கோயில் எங்கு உள்ளது?

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை மாவட்டம் சோலைமலை (பழமுதிர்ச்சோலை)யில் உள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ தூரத்தில் அழகர் கோவில் உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள சோலைமலை முருகன் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் பேருந்து வசதி செய்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது படைவீடாகும்.

ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது.

முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார்.

வேறென்ன சிறப்பு?

சாதாரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.

இங்குள்ள நூபுர கங்கை தீர்த்தம் சுவையானது. இத்தீர்த்தத்தில் நீராடி காவல் தெய்வமான ராக்காயி அம்மனை தரிசிக்கலாம்.

மலையடிவாரத்தில் கள்ளழகர் திருக்கோயிலும், மலைமீது சோலைமலை முருகன் கோயிலும் அமைந்துள்ளன.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, ஆவணி பூரத்தில் வருஷாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்றவை கொண்டாடப்படுகின்றன.

இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனை செய்யப்படுகிறது?

தன்னை வழிபட்டவருக்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக சுப்பிரமணிய சுவாமி அருள்கிறார்.

திருமணத்தடை உள்ளவர்களும், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

பிரார்த்தனை நிறைவேறியதும் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக