மிகப்பெரிய விருந்து, வீட்டில் விசேஷம், திருமணம், பண்டிகை, தொழில் ரீதியான சந்திப்புகள் என்று எந்த விசேஷமாக இருந்தாலும் சிறப்பு உணவுகள் கட்டாயமாக இடம்பெறும். சிறப்பு உணவுகள் என்னும் பொழுது இனிப்புகள் இல்லாமல் இருக்காது. பாரம்பரிய இனிப்பு வகைகள் முதல் நவீன டெசர்ட்கள் வரை அந்தந்த விசேஷத்துக்கு ஏற்ப இனிப்புகள் பரிமாறப்படும். பாரம்பரிய முறைப்படி வாழையிலையில் விருந்து அல்லது திருமணத்தில் முதலில் இனிப்பு தான் பரிமாறப்படும்.
இனிப்பு வகைகள் இல்லை என்றால் சர்க்கரை அல்லது கொஞ்சம் வெல்லத்தை வைப்பார்கள். முதலில் இனிப்பை சாப்பிட்டு நம் உணவைத் துவங்க வேண்டும் என்று கூறுவார்கள். அதேபோல தற்போது உணவு சாப்பிட்டு முடித்த பின்பு இனிப்புகளை சாப்பிடும் பழக்கமும் இருக்கிறது. சாப்பிடுவதற்கு முன்பு இனிப்புகளை சாப்பிடலாமா அல்லது உணவு சாப்பிட்ட பின்பும் இனிப்பு சாப்பிடுவது நல்லதா? இதைப் பற்றி ஆயுர்வேதம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.
ஆயுர்வேத முறைப்படி ஒரு வேளைக்கான உணவில் ஆறு சுவைகளும் இருக்க வேண்டும்.
இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் துவர்ப்பு என்ற வரிசையில் ஆறு சுவையுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அதாவது ஒரு நபர் முதலில் இனிப்பு சாப்பிட துவங்கி இறுதியாக துவர்ப்பு உணவை சாப்பிட வேண்டும். ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கு ஆறு சுவையுள்ள உணவுகள் தேவை. அறுசுவை உணவு என்பது ஆறு விதமான சுவைகளைக் கொண்ட உணவுகள், விருந்து அல்ல.
அன்றாடம் அறுசுவை உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதை தான் ஆயுர்வேதம் கூறுகிறது. ஒரே சுவையுள்ள உணவை அதிகமாக சாப்பிடுவது அல்லது ஒரு சில சுவைகளை சாப்பிடாமலேயே இருப்பது உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும்.
ஆயுசக்தியின் துணை நிறுவனரான ஆயுர்வேத நிபுணர் மருத்துவர் ஸ்மிதா நரம், உணவுக்கு முன்பு இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்று விளக்கியுள்ளார். மற்ற சுவைகளை விட இனிப்பு சுவை நாக்கில் உள்ள சுவை அரும்புகளைத் தூண்டி விடுகிறது. இதன் மூலம் உமிழ்நீர் சுரந்து உணவை செரிமானம் செய்வதற்கு உடல் தயாராகும். அதுமட்டுமில்லாமல் உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பை சாப்பிடுவது வயிற்றில் ஆசிட் உடன் ரியாக்ட் ஆகி அசிடிட்டி, வயிறு உப்புசம் அல்லது வாயு தொந்தரவு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அது மட்டும் இல்லாமல் நம் ஒவ்வொருவரின் உடலும் பஞ்ச பூதங்களின் கலவையால் ஆகியிருக்கின்றன. அதே போல இனிப்புகளில் நிலம் மற்றும் நீரின் தன்மைகள் அதிகமாக இருக்கின்றன. எனவே இந்த இரண்டு தன்மை கொண்ட உணவுகள் செரிமானமாவதற்கு கூடுதலாக நேரம் ஆகும். உணவு சாப்பிடுவதற்கு முன்பு அதாவது வயிறு காலியாக இருக்கும் பொழுது உடல் நீங்கள் என்ன உணவு சாப்பிட்டாலும் அதை செரிமானம் செய்வதற்கு தயாராக இருக்கும்.
எனவே ஹெவியாக இருக்கும் இனிப்புகளை முதலில் சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை எளிதாக்கும். வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு இனிப்பு சாப்பிடும் பொழுது செரிமானம் தடைபட்டு உடலின் வளர்ச்சிதை மாற்றம் குறையும். அதுமட்டும் இல்லாமல் உணவுக்கு முன்பு இனிப்பு சாப்பிடுவது செரிமானத்துக்கு தேவையான ஹார்மோன்களையும் உற்பத்தி செய்யும் சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதற்கு பதிலாக சோம்பு அல்லது மோர் ஆகியவற்றை சாப்பிடலாம். அல்லது வெற்றிலை பாக்கு பயன்படுத்தலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக