ஹிமாச்சல பிரதேச மாநிலம், காங்ரா மாவட்டத்தில் உள்ள ஜ்வாலாமுகி என்னும் ஊரில் அருள்மிகு ஜ்வாலாமுகி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
காங்ராவில் இருந்து சுமார் 34 கி.மீ தொலைவில் ஜ்வாலாமுகி என்னும் ஊரில் இத்திருக்கோயில் உள்ளது. ஜ்வாலாமுகியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் மற்றும் நவசக்தி பீடங்களில் ஒன்றாகவும் இக்கோயில் கருதப்படுகிறது.
அன்னை ஆதிபராசக்தியானவள் பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் கோவில்கொண்டு அருள்பாலித்து வருவது நாமறிந்ததே. அவற்றில் சதிதேவியின் உடற்பகுதிகள் வீழ்ந்த 51 இடங்கள் சக்திபீடங்களாக புகழ்பெற்று விளங்குகின்றன.
அவற்றில், அன்னையின் நாக்கு பகுதி விழுந்த இத்தலம் ஒன்பதாவது சக்தி பீடமாக கருதப்படுகிறது.
வேறென்ன சிறப்பு?
ஒவ்வொரு தலங்களிலும் தன்னை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்திக் கொள்ளும் அன்னை இங்கு தீச்சுடராகத் தன்னை வெளிப்படுத்துகிறாள்.
இங்குள்ள மிகப் பழமையான பாறை இடுக்குகளிலிருந்து நீலநிற தீ ஜுவாலைகள் இயற்கையாகவே வெளிப்படுகின்றன. ஒன்பது இடங்களில் வெளிப்படும் இந்த ஜுவாலைகளையே தேவியின் வடிவமாக வழிபடுகின்றனர்.
பிரதான தெய்வமாக காளிதேவி வழிபடப்படுகிறாள். சரஸ்வதி, லட்சுமி, அன்னபூரணி உள்ளிட்ட எட்டு பெயர்களில் மற்ற ஜுவாலைகள் வணங்கப்படுகின்றன.
இந்த ஜுவாலைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் என்ணெயில்லை, திரியில்லை. ஆனால் இத்தீச்சுடர் இந்த பாறை இடுக்குகளிலிருந்து வெளிவரும் ஒருவித வாயுவின் மூலம் எரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரும் நவராத்திரி விழா இக்கோயிலில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இக்கோயிலில் தினமும் ஐந்து முறை ஆரத்தி எடுத்து சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
பில்லி, சூன்யம், ஏவல் போன்ற செய்வினைகள் விலகவும், மனதில் வேதனைகள் குறையவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள் பாலும், நீரும் சமர்ப்பித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக