இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
புராணங்களிலும், காவியங்களிலும், ஆன்மீக நூல்களிலும் பல
வில்லன்கள் உலா வருகின்றனர். நிகழ்கால வில்லன்களுக்கு சவால் விடும் வகையில்
அவர்களுடைய வாழ்க்கை இருக்கிறது. புனைவாகவும், நிஜமாகவும் இருக்கும் அத்தகைய
இதிகாச, காவிய வில்லன்களில் ஒரு பத்து பேர் இந்த வாரம்.
குரோனஸ் (Cronus )
கிரேக்கக் கதைகள் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைக்காதவை.
கதாநாயகர்களும் வில்லன்களும் நிரம்பி வழியும் கிரேக்கப் புராணங்களில் மிக
முக்கியமான கடவுள் ஸீயஸ். இவருக்கு ஒரு அதி பயங்கர வில்லன் இருந்தான். அது வேறு
யாருமல்ல, அவருடைய அப்பா குரோனஸ் தான். குரோனஸ் சர்வ வல்லமை பொருந்திய கடவுளாய்
இருந்தான். அந்த பதவியே தந்தையிடமிருந்து அவன் தந்திரமாய்ப் பறித்தது தான். இதனால்
குரோனஸின் அம்மாவுக்கு மகன் மீது கடும் கோபம். “ஒர் நாள் உன் பையனே உன்னை
வீழ்த்துவான் பாரேன்” என சாபம் கொடுத்துவிடுகிறார்.
விடுவாரா குரோனஸ். தனக்குப் பிறந்த குழந்தைகளையெல்லாம்
விழுங்கி ஏப்பம் விட்டான். மனைவி ரேயாவுக்கு மிகுந்த கவலை. அதனால் கடைசியாய்
பிறந்த குழந்தையை மட்டும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்தாள். குழந்தை
பிறந்த செய்தி கேட்டு குழந்தையை விழுங்க வந்தவனிடம், துணியில் ஒரு கருங்கல்லைச்
சுற்றிக் கொடுக்க, அவனும் அதை விழுங்கி விடுகிறான். அப்படித் தப்பியவர் தான்
ஸீயஸ்.
ரேயாவால் தனியே ஒரு குகையில் வளர்க்கப்பட்ட ஸீயஸ் வளர்ந்து
பெரியவனாகி வந்த பின் கிளைமேக்ஸ். முதலில் தந்தையை வாந்தியெடுக்க வைத்து
வயிற்றிலிருந்த தனது சகோதரர்களையெல்லாம் வெளியே கொண்டு வந்து. தந்தைக்கு எதிராக பல
ஆண்டுகள் கடுமையாகப் போராடி வெல்வது மீதி !
ஸீயஸ் கிரேக்கக் கடவுள்களுக்கெல்லாம் மன்னன். வானம் இடி
எல்லாமே இவருடைய கட்டுப்பாட்டில் தான் என்பது கிரேக்க நம்பிக்கை. அப்படிப்பட்ட
ஸீயஸுக்கே வில்லனாய் வந்த குரோனஸ், கிரேக்க புராணங்களின் முக்கிய வில்லன்.
யூதாஸ் இஸ்காரியோத்து
காந்தியைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் கோட்சேயைத் தெரிவது போல,
இயேசுவைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் தெரிந்த பெயர் யூதாஸ் இஸ்காரியோத். இயேசுவுக்கு
நெருங்கிய நண்பர்களாய் இருந்தவர்கள் பன்னிரண்டு பேர். அவர்களில் ஒருவர் இந்த
யூதாஸ்.
இயேசு அன்றைய யூத சட்டங்களுக்கு எதிராகவும், மத வாதிகள், மறை
நூல் வல்லுநர்களுக்கு எதிராகவும் தீவிரமாய் முழங்கியவர். இவரைத் தலைவராக்க
வேண்டுமென்பது மக்களின் திட்டம். இந்தத் தலைவலியை இல்லாமலாக்க வேண்டும் என்பது
மதவாதிகளின் திட்டம். தந்திரமாய் இயேசுவைப் பிடிக்க அவர்கள் பிடித்தது யூதாஸை !
அவனுடைய பணத்தாசை அவர்களுக்கு துருப்புச் சீட்டாகிப் போனது.
படைவீரர்களை அனுப்புகிறோம். ஆளை மட்டும் நீ காட்டிக்
கொடுத்தால் போதும். இதோ முப்பது வெள்ளிக்காசு. இவ்வளவு தான் ஒப்பந்தம். “நான் யாரை
முத்தமிடுவேனோ அவர் தான் இயேசு. புடிச்சுக்கோங்க” என்றான் யூதாஸ். திட்டம்
நிறைவேறியது. இரவில் இயேசு ஜெபித்துக் கொண்டிருந்த இடத்துக்கு யூதாஸ் போனார்.
இயேசுவை முத்தமிட்டார்.
“நண்பா… முத்தமிட்டா என்னைக் காட்டிக் கொடுக்கிறாய்” என
இயேசு சொன்னதையும் காதில் வாங்காமல் நைசாக நழுவினான் யூதாஸ்.
இப்லிஸ் ( iblis)
இப்லிஸ் இஸ்லாமிய மதத்தின் வில்லன். குரானின் அடிப்படையில்
பார்த்தால், கடவுளின் பேச்சைக் கேட்காமல் சுவர்க்கத்திலிருந்து துரத்தப்பட்டவன்.
கடவுள் ஆதாமைப் படைத்தபின் எல்லா தேவதைகளையும் கூப்பிட்டு ஆதாமுக்கு முன்னால்
மண்டியிட்டு வணங்கச் சொன்னார். கடவுளின் பேச்சைத் தட்டாமல் எல்லோரும் ஆதாமைப்
பணிந்தனர், ஒருத்தரைத் தவிர. அவர் இப்லிஸ் !
நான் ஒரு தெய்வப் பிறவி. நெருப்பிலிருந்து பிறந்தவன். ஆதாம்
ஒரு மனிதப் பிறவி. கேவலம் களி மண்ணிலிருந்து பிறந்தவன். என்னை விடத் தகுதியில்
குறைந்த அவனுக்கு முன்னால் நான் மண்டியிடுவதா ? முடியாது என்பதே இப்லிஸ்
நிலைப்பாடு. அப்புறமென்ன கோபம் கொண்ட கடவுள் அவனை அங்கிருந்து துரத்தி
விட்டார்.
போகும் போது கடவுளிடம் ஒரு விஷயம் கேட்டான் இப்லிஸ். அதாவது
கடைசி காலம் வரை எனக்குத் தண்டனை தராமல் இருந்தால் நான் யார் எனக் காட்டுவேன்.
பூமியிலுள்ள ஆதாமின் சந்ததியினரை எல்லாம் தீய வழியில் கொண்டு செல்வேன் என்றான்.
கடவுள் ஒப்புக் கொண்டர். சைத்தான் என பெயரைப் பெற்ற இவன் தான் பின்னர் பாம்பாய்
வந்து ஏவாளை ஏமாற்றியதாம். மக்கள் தீய வழியில் செல்கிறார்களெனில் அதன் காரணம்
இப்லிஸ் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.
யங் வான் ( எமன் )
புத்தமதத்திலும் எமன் உண்டு. புத்தமதத்தின் சில பிரிவுகளில்
நான்கு எமன்கள் வரை உண்டு. எமனோட வேலை மக்களை நல்வழிப்படுத்த நோயையும், முதுமையையும்
, கஷ்டங்களையும் மக்களுக்குக் கொடுப்பது. அப்படியும் அவர்கள் வழிக்கு வராமல்
செத்துப் போய்விட்டால் கடைசியில் எமனிடம் தான் வந்தாக வேண்டும். அவர்களை அடுத்து
நரகத்தில் எறிவதா, சுவர்க்கத்துக்கு அனுப்புவதா அல்லது மீண்டும் பூமிக்கு
அனுப்புவதா என முடிவெடுப்பது இவர் தான்.
சீன மதத்தில் எமனோட பெயர் யன் வாங். யங் வாங்- கிற்கு சாவின்
கடவுள் எனும் பெயர் தான் சீனாவிலும். கொரியன் மொழியில் இவரை யோம்ரா என்கிறார்கள்
ஜப்பானியர்கள் யம்மா என அழைக்கின்றனர். எல்லாமே எமனுடைய வேறு வேறு வெர்ஷன்கள்
தான். ஆனால் சீனா வகையறாக்களில் எமனுக்கு கெட்டப் வேறு. சிவந்த முகம், பெரிய
உருவம், நீளமான தாடி என மிரட்டும் கெட்டப். என்னதான் கடவுளாக இருந்தாலும், நம்ம
உயிரை எடுப்பதனால் யங் வாங் கும் சீன மத “வில்லன்” லிஸ்டில் தான் வருகிறார்.
சாத்தான்கள் ( Demons )
அதிபயங்கர சக்தி, நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தில்
வருவது, எங்கே வேண்டுமானாலும் சர்வ சாதாரணமாய் தோன்றுது என சர்வ சக்தி வில்லன்
சாத்தான். சாத்தான்கள் என பொதுப்படையாகச் சொல்லப்படும் எல்லாமே வில்லன்
வகையறாக்கள் தான். ஒவ்வொரு மதமும் சாத்தானைப் பார்க்கும் பார்வையில் மட்டும்
ஏகப்பட்ட வித்தியாசம்.
கிறிஸ்தவ மதத்தில் சாத்தான்கள் வேறுயாருமல்ல,
சுவர்க்கத்திலிருந்து துரத்தப்பட்ட ஏஞ்சல்ஸ் தான் !. சுவர்க்கத்தில்
நிரம்பியிருந்த தூதர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு புகழ் ஆசை வந்தது. அதனால்
அவர்களையும், அவர்களுடைய தலைவன் லூசிபரையும் கடவுள் சுவர்க்கத்திலிருந்து கீழே
தள்ளிப் போட்டார். அவர்களெல்லாம் பூமியில் வந்து விழுந்தார்கள் என்பது கிறிஸ்தவக்
கதை. இந்து மத நம்பிக்கைப்படி ராட்சதர்கள், அசுரர்கள், வேதாளம், பிசாசுகள் என பல
பெயரில் உலவுபவர்களை இந்த டீமன்ஸ் கணக்கில் சேர்க்கலாம்.
ஸ்டிரிகோய் ( Strigoi )
நிறைவேறாத ஆசைகளுடன் செத்துப் போனால் ஆவியாய் அலைவார்கள்
எப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இதே சமாச்சாரம் தான் ரோம புராணங்களிலும்.
இங்கே நிம்மதியற்ற ஆத்மாக்களின் பெயர் ஸ்டிரிகோய். கல்லறைகளில் நிம்மதியாய்
உறங்க முடியாமல் எப்போது எழும்பி யாரைப் பிடிக்கலாம் என அலைந்து திரிபவை தான் இவை.
விட்ச் என சொல்வது இந்த ஸ்டிரிகோய் வகைகளின் பெண் வடிவம்.
மனிதர்கள், விலங்குகள் என கிடைத்த கேப்பில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன இந்த
ஸ்டிரிகோய்கள். சிவப்பு முடி, நீல நிறக் கண்கள், இரண்டு இதயம் என திடுக் திடுக்
வடிவத்தை இவற்றுக்குக் கொடுத்திருக்கிறது ரோம மித்தாலஜி.
இந்த ஸ்டிரிகோரிகளிடமிருந்து தப்புவதொன்றும் பெரிய
விஷயமில்லையாம். ஒரு பாட்டில் விஸ்கியை அவர்களுடைய கல்லறை அருகே புதைத்து விட
வேண்டும். அவை அதைக் குடித்து விட்டு மயங்கிவிடுமாம். அட ! அவன் தானா நீ !! நம்ம
ஊரில் பட்டை சாராயம் !
லூகாரூ ( Loogaroo )
லூகாரூ கரீபியன் மித்தாலஜியிலுள்ள ஒரு வில்லன். வில்லன் என்பது
தவறு இது ஒரு வில்லி. இதுவும் சாத்தானும் அக்ரீமெண்ட் போட்டுக் கொண்டு மனிதர்களைச்
சாவடிப்பது தான் வேலை. சாத்தான் இதற்கு நிறைய மந்திர சக்தியெல்லாம்
கொடுத்திருக்கிறது. பதிலுக்கு இது கொடுக்க வேண்டியது மனித இரத்தம். அப்படி
கொடுக்காவிட்டால் அவ்வளவு தான், லூகாரூவின் இரத்தத்தையே சாத்தான் குடித்துவிடும்.
அதனால் எப்படியாவது இரத்தம் வேண்டும் என வெறியுடன் இவை அலைந்து திரியுமாம்.
இராத்திரியில் ஒரு ஒளியையோ, நீல நிற ஒளிப் பந்தையோ, பார்த்தால் அது லூகாரூ
தான் என்கின்றனர் கரீபியன்ஸ்.
சரி இதன் பிடியிலிருந்து எப்படி தப்புவது. வெரி சிம்பிள்.
வீட்டு வாசலில் ஒரு மூட்டை நெல்லையோ, அரிசியையோ, அல்லது குறைந்த பட்சம் மணலையோ
வைக்க வேண்டுமாம். லூகாரூ வீட்டு முன்னால் மூட்டையைப் பார்த்தவுடன் பிரித்து
ஒவ்வொன்றாய் எண்ண ஆரம்பிக்குமாம். எண்ணி முடிக்கும் முன் சூரியன் வந்து விடுவான்.
அடடா ஏமாந்துட்டோமே என லூகாரூவும் ஓடி விடுமாம். அட முட்டாள் லூகாரூ !
தினமுமா ஏமாறுவே ?
அஸ்மோதேயுஸ் ( Asmodeus)
நரகம் இருக்கிறது என்பதை பெரும்பாலான மதங்கள் ஒத்துக்
கொள்கின்றன. அஸ்மோதேயுஸ் நரகத்திலுள்ள சாத்தான்களின் தலைவன். நரகத்தில் ஏழு
சாத்தான் மன்னர்கள் உண்டாம். ஒவ்வொருவருக்கும் பெருமை, பொறாமை, காமம் என ஒவ்வொரு
டிபார்ட்மெண்ட். அஸ்மோதேயுஸின் டிபார்ட்மெண்ட் காமம். இவனுடைய
ஆசையெல்லாம் மக்களுடைய காம ஆசையைத் தட்டி எழுப்புவது தான்.
பீச் ஓரங்களில் கைகளைக் கோர்த்து அலையும் காதலர்களிடம் இவனுடைய
வேலை வெகு எளிதாய் வொர்க் அவுட் ஆகி விடுகிறது. ஆசையைத் தூண்டி விட்டு மக்கள்
தப்பு செய்தால் இவனுக்கு வெற்றி. அவர்களெல்லாம் கடைசியில் இவனுடைய கட்டுப்பாட்டில்
உள்ள இரண்டாவது நரகத்துக்கு வந்து சேர்வார்களாம்.
இன்குபஸ் ( incubus)
இன்குபஸ் என்பது சுமேரியர்களுடைய வில்லன். இந்த வில்லன்
கொஞ்சம் விவகாரமானவன். தூங்கும் பெண்களின் மீது உறவு கொள்ள ஆசைப்பட்டு அலைவான்.
இந்த வில்லன் குழுவில் வில்லிகளும் உண்டு. அவற்றுக்கு சுகுபஸ் என்பது பெயர்.
வில்லிகள் ஆண்களை நாடுவார்கள். இன்குபஸோ, சுகுபஸோ ஒருத்தரைப் பிடித்து
விட்டால் அவருடைய உடல் இளைத்து, ஆரோக்கியம் போய், கடைசியில் மரித்து
விடுவார்களாம்.
சரி இன்குபஸ் வந்திருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது ?
இராத்திரி திடீரென கனவு கண்டு விழிப்பது, தூக்கத்தில் அசைவற்றுப் போவது
உட்பட “வாலிப வயோதிக அன்பர்களே” டாக்டர்கள் சொல்லும் எல்லாமே இதன்
அறிகுறிகள் தானாம்தா. சுமேரியர்களிடமுள்ள இந்த நம்பிக்கை ஜெர்மன், பிரேசில்,
அமேசான் காட்டுப் பகுதிகள், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் உண்டாம்.
வாம்பையர்
நீண்ட நீண்ட பற்கள். கூரிய நகங்கள். சட்டென சந்தர்ப்பம்
கிடைத்தால் கழுத்தைக் கடித்து இரத்தம் குடித்து கோரமாய் சிரிக்கும் உருவம் தான்
வாம்பையர். அரைத்த மாவையே அரைக்கும் ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கிடைத்த
வரப்பிரசாதமாகவும் ஆகிப் போனது இந்த வாம்பையர் பயங்கரங்கள்.
வாம்பையர் ஒரு அதிபயங்கர வில்லன் என்பதில் பல்வேறு நாடுகள்
ஒத்துப் போகின்றன. வாம்பையர்களுக்கு இரும்புப் பற்கள் உண்டு, அவை
குழந்தைகளைக் குறி வைத்து அலையும் என கதைகள் பல்வேறு விதமாய் உலவுகின்றன.
கரீபியன் தீவுகள், அமெரிக்கா , சிலி, கொலம்பியா, ஆசியா, என எல்லா
நாடுகளிலும் வாம்பையர் கதைகள் உலவுகின்றன. என்ன, தங்கள் பின்னணிக்குத் தக்கபடி
கற்பனை வடிவத்தை மட்டும் மாற்றிக் கொள்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக