கோடி கோடியாக செல்வம் இருந்தாலும் பிள்ளைச் செல்வம் வேண்டும்
என்றுதான் பலரும் விரும்புகின்றனர். உணவு முறை, பணி அழுத்தம், மன அழுத்தம் போன்றவை
குழந்தை பாக்கியம் கிடைப்பதை தடை செய்கிறது. ஜோதிட ரீதியாகவும் குழந்தை பாக்கியம்
கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. இன்றைக்கு மருத்துவத் துறை எவ்வளவோ முன்னேறி
விட்டாலும், இன்றும் ஏராளமானோர் குழந்தையின்மை குறைபாட்டுடன் இருக்கின்றனர்.
லட்சம் லட்சமாக செலவு செய்து குழந்தை பெற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே கருத்தரிப்பு மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன.
நம்பிக்கையோடு சில பரிகாரங்களை செய்தால் இயற்கையாகவோ செயற்கையாகவோ புத்திர
பாக்கியம் கிடைக்கும்.
புத்திர பாக்கியம் தடை ஏற்பட ராகு
கேது போன்ற பாம்பு கிரகங்கள் காரணமாகின்றன. ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம்
புத்திர ஸ்தானத்தில் குரு சஞ்சரித்து தோஷத்தை ஏற்படுத்துகிறது. புத்திரபாக்கியத்தை
தருபவர் குரு. அவரே புத்திர ஸ்தானத்தில் சஞ்சரித்தால் அதுவே தோஷத்தை தருகிறது.
மகப்பேறு உண்டாகாமல் இருப்பதற்கு முன்
வினையே காரணம் என்று கருடபுராணம் தெரிவிக்கிறது. குழந்தைக்காக ஏங்கி தவிப்பவர்கள்
சந்தான கோபால யாகம் செய்யலாம். சில கோவில்களில் இந்த யாகங்களை செய்கின்றனர்.
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பவுர்ணமி தினங்களில் இந்த யாகம் செய்கின்றனர்.
குழந்தைக்காக தானம்
ராமாயணத்தில் பாலகாண்டம் 18வது
ஸ்வர்க்கத்தை 45 நாட்கள் பாராயணம் செய்தல் வேண்டும். அவ்வாறு பாராயணம் செய்ய
இயலாதவர்கள் பிறரைப் படிக்கச் சொல்லிக் கேட்கலாம். ஏழைகளுக்கு தேன் தானம் செய்தால்
புத்திர பாக்கியம் உண்டாகும்.
சந்தான கிருஷ்ணர்
கிருத்திகை விரதம் இடைவிடாது
இருந்தால் புத்திரதோஷ நிவர்த்தி ஏற்பட்டு, புத்திர பாக்கியம் உண்டாகும். சஷ்டி,
கிருத்திகை, செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து முருகனை பக்தியுடன் பூஜை செய்ய
புத்திர பாக்கியம் உண்டாகும். பூஜை அறையில் ராமர் படம் இருப்பது சிறப்பானது.
சந்தான கிருஷ்ணருக்கு பாயாசம் செய்து நிவேதனப் பொருளாக வைத்துக் குழந்தைகளுக்கு
கொடுத்து வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும். தன்வந்திரி பீடத்தில் சந்தான கோபால
யாகம் செய்யலாம்.
மகாசிவராத்திரி விரதம்
புத்திர தோஷம் விரைவில் அகல குலதெய்வ
வழிபாடு மிகவும் அவசியமாகும். சிவராத்திரி நாளில் சிவனுக்கு வில்வ இலையால்
அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் வரும். அமாவாசை அன்று தர்ப்பணம்
செய்யாதவர்களுக்கு சந்ததிகள் உண்டாகாது. புத்திர தோஷம் ஏற்படும்.
நாகர்கள் தரும் புத்திரபாக்கியம்
நாக பஞ்சமி விரதத்தால் புத்திர
பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக்
கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். விரதம்
கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ அல்லது பிற
உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துக்குள் வைத்துப் பூஜை செய்ய
வேண்டும். வெள்ளியில் செய்த நாகத்தை தானமாக கொடுக்கலாம்.
காசியில் வழிபாடு
ஹரித்துவார் சென்று கங்கையில் நீராடி
ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் புத்திர பாக்கியம் கைகூடும். காசிக்கு சென்று
கங்கையில் நீராடி, உங்கள் கைகளினாலேயே கங்கை நீரைத் கொண்டு, காசி விஸ்வநாதருக்கு
வில்வம் சேர்த்து கங்கா தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம்
கிட்டும்.
நவகிரகங்கள்
சிவ ஆலயங்களில் தங்கள் மனைவியருடன்
அமைந்துள்ள நவக்கிரக மூர்த்திகளை வழிபட்டால் திருமணம் கைகூடி உரிய காலத்தில்
புத்திர பாக்கியம் கிடைக்கும். திருவாரூர் அருகே ராஜகோபால பெருமாளை வணங்கலாம்.
இங்குள்ள பெருமாள் குழந்தை வடிவில் உள்ளதால் இவரை வழிப்பட்டால் புத்திர பாக்கியம்
கிடைக்கும்.
பிள்ளை வரம் கிடைக்கும்
குழந்தை இல்லாதவர்கள் திருச்சி அருகே
சமயபுரத்தில் அருள்பாலிக்கும் மாரியம்மனை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். மதுரை
ராமநாதபுரம் சாலையில் உள்ள மடப்புரம் காளிக்கோயிலில் குழந்தை இல்லாத பெண்கள்
தங்கள் சேலையைக் கிழித்து தொட்டில் கட்டினால் விரைவில் புத்திர பாக்கியம்
கிடைக்கும். இருக்கன்குடி மாரியம்மனும் பிள்ளை வரம் தரும் அன்னையாக திகழ்கிறாள்.
கருவளர்க்கும் அம்மன்
ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில்
நீராடி ராமநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்து குழந்தை பாக்கியம் வேண்டும் என்று
கேட்டு வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கும்பகோணத்தில் இருந்து
திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரியை வணங்கி,
பிரசாதமாக தரப்படும் மஞ்சளை பெண்கள் தினமும் பூசி குளித்து வந்தால் மகப்பேறு
உண்டாகும். கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் இருக்கும் நவநீத
கணபதிக்கு வெண்ணை சார்த்தி வணங்கினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
அரசமரம் வேப்பமரம்
குழந்தை இல்லாத குறையை நீக்க அரச
மரமும், வேம்பும் சேர்ந்துள்ள ஆலயத்திற்கு காலை 7 மணிக்குள் சென்று 108 முறை 48
நாட்கள் சுற்றி வர குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த 48 நாளும் நல்லெண்ணை திரி
போட்டு விளக்கு ஏற்றி வரவும். அரசும் வேம்பும் ஒன்றாக வளரும் இடத்தில் ஓர்
உயிரியல் மின்சக்தி நிலவுகிறது. இதை வலம் வரும்போது நம் உடலில் உள்ள சில
சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. குழந்தை இல்லாத பெண்களின் சூலகம் தூண்டப்பட்டு
சுரப்பு நீர் சமப்படுத்தப்படுகிறது. இதனால் புத்ர பாக்கியம் உண்டாகும். காலை
மூன்று மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுவார்கள்.
இந்த நேரத்தில் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு உடலில் அணிந்திருக்கும் துணி
காயும் முன் அரச மரத்தைச் சுற்றத் தொடங்க வேண்டும். ஆண்கள் வலது பக்க மாகவும்
பெண்கள் இடது பக்கமாகவும் சுற்றி வர வேண்டும். இவ்வாறு 21 முறை சுற்றவும். இதனால் பிள்ளைப்
பேறுக் கிடைப்பது மட்டுமல்லாது பிற கர்ப்ப கோளாறுகள் நீங்கும். இதனால் தான் அரச
மரத்தின் கீழ் இருபாம்புகள் பிணைந்து கிடப்பது போன்ற கற்சிலைகள் இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக