Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 18 நவம்பர், 2017

Top 10 தொலைக்காட்சித் தொடர்கள்


உலக அளவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளெல்லாம் எப்படி இருக்கின்றன ? நம்ம ஊர் டிவி போல அழுகாச்சி தொடர்களாலும், இளமை ஆட்டங்களாலும் நிரம்பியிருக்கிறதா ? இல்லை ஏதேனும் புதுமை இருக்கிறதா ? சர்வதேச சானல்களை புரட்டி எடுத்ததில் சுவாரஸ்யமாய்க் கிடைத்த பத்து நிகழ்ச்சிகள் இவை.

எ ஹாண்டிங்  


த காஞ்ஜுரிங் போல சினிமா விஷயமல்ல இது. உண்மையிலேயே பேய்களைப் பார்த்தவர்களின் பதறடிக்கும் வாக்குமூலம். ” இரத்தத்தை உறைய வைக்கும், மயிற்கூச்செரிய வைக்கும்”  என்றெல்லாம் அடைமொழி கொடுக்கலாம் இந்த சீரியலுக்கு. பேய்களின் அட்டகாசம், பேய் ஓட்டுவது, பேயை வரவழைப்பது, காட்சி தெரிவது என திடுக் திடுக் நிமிடங்களைப் பதிவு செய்வது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். கற்பனை கலக்காத அக்மார்க் உண்மைகளுக்கு மட்டுமே இதில் அனுமதி என்கின்றனர் நிகழ்ச்சியை நடத்துபவர்கள்.

பேய்களை நேரில் பார்த்தவர்கள் அந்த நிகழ்ச்சியை விளக்கும் போது அவர்களுடைய கண்களின் மின்னும் பேய் பயமே நிகழ்ச்சியின் ஹைலைட். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, தைவான் என உலகின் பல இடங்களிலும் பறந்து பறந்து நிகழ்ச்சி தயாராக்குவது இன்னொரு ஸ்பெஷல். நிஜமாய் பேய்களைப் பார்த்தவர்களின் காட்சி விவரணைகள் நமது முதுகெலும்பில் ஐஸ் நதியை ஓட வைக்கிறது !

டெஸ்ட்ராய்ட் இன் செகண்ட்ஸ்


“கொஞ்சம் கூட எதிர்பாக்கல, சட்டுன்னு நடந்து போச்சு” என சொல்கிறோமல்லவா ? அந்த ஒன்லைன் தான் இந்த நிகழ்ச்சியின் மையம். ரன்வேயில் சாதாரணமாய் ஓடிக்கொண்டிருக்கும் விமானம் சட்டென தீப்பிடிக்கும். வேகமாய் போய்க்கொண்டிருக்கும் படகுகள் எதிர்பாராமல் மோதிச் சிதறும். ரேஸ் கார்கள் இரண்டு மோதி வெடிக்கும். அமைதியாக இருக்கும் இடத்தில் திடீரென வெடி குண்டு வெடிக்கும். இவையெல்லாம் இந்த நிகழ்ச்சியின் சில சாம்பிள்கள். 

பார்வையாளனின் மனதில் அதிர்ச்சிக் கண்ணிவெடியை வெடிக்க வைத்து, நிகழ்ச்சியின் பின்னணியை விரிவாக அலசுவது இந்த நிகழ்ச்சி. கற்பனை, கிராபிக்ஸ் கலக்காத உண்மை சம்பவங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். இதன் குறையாத திரில்லுக்கு எக்கச்சக்கமாய் ரசிகர்கள். செம ஹிட் நிகழ்ச்சியாய் அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன் ஓடிக்கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியை மீண்டும் துவங்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கின்றனர். 

டர்ட்டி ஜாப்


தலைப்பை மறுபடியும் வாசிக்க வேண்டாம். உண்மை தான். இப்படியும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி இருக்குமா ? என வியக்க வைக்கிறது இந்த நிகழ்ச்சி. யாருமே செய்ய வெறுக்கும், கூச்சப்படும், முகம் சுழிக்கும் வேலைகள் தான் இந்த நிகழ்ச்சியின் கதா நாயகர்கள். நம்ம ஊர் உதாரணம் வேணும்னா சாக்கடை சுத்தம் செய்யறது என்று வெச்சுக்கலாம். வெறுமனே அந்த நிகழ்ச்சியைப் பற்றி “மூக்கையும், கேமராவையும்” பிடித்துக் கொண்டு பேசுவதல்ல இந்த ஷோ.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் மைக் ரோவே அந்த கடினமான வேலையில் குதித்து ஒரு நாள் வேலை செய்து அதன் சிரமங்களை சுவாரஸ்யமாய் விளக்குவதால் இந்த நிகழ்ச்சி படு பயங்கர ஹிட். பெரும்பாலும் இப்படிப்பட்ட அழுக்கான வேலை செய்பவர்கள் உற்சாகமாக, ஆனந்தமாக இருக்கிறார்கள். அழுக்கில்லாத வேலை செய்பவர்கள் தான் அழுது வடிகிறார்கள் என்பது இவர் தரும் தத்துவ பளிச் ! சுமார் ஏழு ஆண்டுகள் பட்டையைக் கிளப்பிய இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சின்ன பிரேக் விட்டிருக்கிறார்கள்.

பிளைண்ட் டேட்


மேலை நாடுகளில் ஏறக்குறைய எல்லா சானல்களிலும் அரைக்கப்படும் ஒரு நிகழ்ச்சி டேட்டிங் ஷோ. நம்ம ஊர் “ஜோடி நம்பர் 1” போல இத்தகைய டேட்டிங் ஷோக்களிலும் ஒரு ஜோடி வெற்றி பெறும் ! யூகேவிலுள்ள பிளைண்ட் டேட் ஷோ இதில் முக்கியமானது.  இந்த ஷோவின் சாராம்சம் இது தான். மூன்று பெண்கள் வருவார்கள். அவர்கள் டேட்டிங் செல்ல ஒரு  ஆணை தேர்வு செய்யவேண்டும். ஆளை நேரில் பார்க்க முடியாது, போனில் பேசி தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்வு செய்தபின் நேரில் தரிசனம் தருவார் காதலன். “அடடா… இவனையா செலக்ட் பண்ணினேன்…” எனும் பெருமூச்சுகள் ஆரம்ப சுவாரஸ்யம். அப்புறமென்ன ஜோடிகள் டேட்டிங் செல்ல வேண்டும். அதை “வெட்கம் கெட்ட” கேமரா விடாமல் பின் தொடர்ந்து படம் பிடிக்கும். இதன் ஆஸ்திரேலிய உதாரணம் பெர்பக்ட் மேட்ச் ஷோ. எப்படிப் பட்ட பெயரில் வந்தாலும் இதற்கென குறிப்பிட்ட ரசிகர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். உலகெங்கும் பல்வேறு பெயர்களில் வலம் வரும் இந்த நிகழ்ச்சி இளசுகளை வசீகரிக்கும் புதுமையும், காமெடியும் கலந்த நிகழ்ச்சி.


இண்டிப்பெண்டண்ட் லென்ஸ்


“வாங்க பழகலாம்” என பார்வையாளர்களை வசீகரிக்கும் நிகழ்ச்சி இது. திறமையானவர்களுக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியலில் இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்கலாம். சொல்லப்போனால் இதில் நிகழ்ச்சியை  நடத்துவதே பார்வையாளர்கள் தான்.

அதாவது, பார்வையாளர்கள் எடுக்கும் சிறு சிறு வீடியோ பதிவுகளைக் கொண்டு தான் இந்த நிகழ்ச்சியே அமைக்கப்படுகிறது. கிளிப்பிங்ஸ் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சில நிமிடங்கள் ஓடும் உங்கள் குழந்தையின் நகைச்சுவை சேட்டையாய் இருக்கலாம். உங்கள் செல்ல நாய்க்குட்டி செய்யும் அறிவு ஜீவித் தனங்களாக இருக்கலாம். எதேர்ச்சையாய் படம் பிடித்த எதிர்பாராத சில சுவாரஸ்ய வீடியோக்களாய் இருக்கலாம், அல்லது திட்டமிட்டே எடுத்த குறு நாடகங்களாகவும் இருக்கலாம்.   சிறந்த படங்களுக்குப் பரிசுகளும் உண்டு என்பது இதன் ஹிட் அம்சம்.

பார்வையாளர்களே இதில் ஹீரோக்கள் என்பதால் மக்களோடு எளிதில் இந்த நிகழ்ச்சி கலந்து விடுகிறது.

ஜஸ்ட் எ மினிட்


ஒரு நிமிட நேரம் பேசவேண்டும். சொன்ன வார்த்தையைத் திரும்ப சொல்லக் கூடாது, தொடர்ச்சியாகப் பேச வேண்டும், சொல்ல வேண்டிய கருத்தை ஒட்டியே பேசவேண்டும். அட.. இது தான் தெரியுமே ! நம்ம ஊர் ரேடியோக்களில் வரும் நிகழ்ச்சி என சிலாகிக்கிறீர்களா ?. இந்த நிகழ்ச்சியின் முதல் சுவடு 1951ல் யூகேவில் ஆரம்பித்த ஒன் மினிட் பிளீஸ் எனும் நிகழ்ச்சி தான்.

அது பல்வேறு மாறுதல்களைக் கடந்து 1967ல் “ஜஸ்ட் எ மினிட்” என்றானது. கிட்டத்தட்ட இப்போதைய வெர்ஷன் அது ! இந்த நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில் பின்னர் காப்பியடிக்கப்பட்டது என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?. ஸ்வீடன் நாட்டில் இந்த நிகழ்ச்சியின் பெயர் “பா மினூடென் ! “. இந்த நிகழ்ச்சி மக்களுக்குப் பழகப் பழக, சின்னச் சின்னதாய் ஒவ்வொரு நிபந்தனைகளை அதிகரித்து நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யப்படுத்துகின்றனர்.

மே டே


“மேடே மேடே மேடே” என்று மூன்று தடவை சொன்னால் ஏதோ பெரிய ஆபத்து என்று அர்த்தம். பெரும்பாலும் கப்பல், விமான தகவல் தொடர்பில் இந்த குறியீடு நடத்தப்படும். அந்த பெயரையே இந்த நிகழ்ச்சிக்கு சூட்டிவிட்டார்கள். காரணம், இந்த நிகழ்ச்சி அலசப் போவது அத்தகைய விஷயங்களைத் தான்.

“குற்றம்….. !  நடந்தது என்ன?” ரேஞ்சுக்கு நடத்தப்படும் இன்வெஸ்டிகேஷன் ஷோ இது. சுமார் 60 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஏதோ ஒரு வடிவில் ஒளிபரப்பாகிறது.

விமான விபத்துகள் குறித்த இன்வெஸ்டிகேஷன் தான் இதன் மையம். விபத்துக்கு முன், விபத்தின் போது, விபத்துக்குப் பின், என பல கட்டங்களாக நிகழ்ச்சி விரியும். பிளாக்பாக்ஸ் தேடுதல் போன்றவற்றை மிக விரிவாக சுவாரஸ்யங்களுடன் விளக்குவது இதன் ஹைலைட். உண்மை சம்பவங்களின் மர்மங்கள் அவிழ்வதில் இருக்கும் சுவாரஸ்யம் வலி மிகுந்தது. அது தான் இந்த நிகழ்ச்சியின் பலம்.

ஒன் வே அவுட்


ஒன் வே அவுட் என்பது சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் அடங்கிய நிகழ்ச்சி. “ஐயோ….” என பயத்தில் பார்வையாளர்களைக் கண் மூட வைப்பதே இதன் நோக்கம் !  இந்த நிகழ்ச்சியை நடத்திய ஜோனதன் குட்வின் “ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்கிறார். உடல் முழுதும் இரண்டு இலட்சம் தேனீக்களுடன், ஒரு சிறு பெட்டியில் அடைந்து கிடப்பார். கொஞ்சம் அசைந்தாலும் தேனீக்கள் ஜோனதனின் தேனை எடுத்துவிடும். அந்த பெட்டியை ஆடிக்கொண்டிருக்கும் வாஷின் மிஷினின் மேல் வைக்கச் சொல்வார். பார்வையாளர்களோ பதட்டத்தில் மிதப்பார்கள்.

ஒரு ஷோவில் ஒரு பெட்டிக்குள் அடைபட்டு, அந்த பெட்டியை மலை உச்சியிலிருந்து உருட்டி விடச் சொல்வார். நிமிடத்துக்கு 126 முறை உருண்டு வரும் பெட்டியிலிருந்து சிரித்துக் கொண்டே வெளியே வருவார்.  உடைந்து கிடக்கும் கண்ணாடிச் சில் குவியலில் செருப்பில்லாமல் நடப்பார், ஆழமில்லாத ஆற்றில் உயரத்திலிருந்து குதிப்பார் !  இந்த ஷோ நடக்கும் போதெல்லாம் விளம்பரதாரர்களுக்கு வேட்டை தான் ! இப்போதைக்கு இந்த நிகழ்ச்சி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறது.

மித் பஸ்டர்ஸ்


“இதைத் தான் நாங்க காலங் காலமா கடைபிடிக்கிறோம்” என பல விஷயங்கள் நம்மிடையே உண்டு.  அதில் பல விஷயங்கள் மூட நம்பிக்கைகள் தான் என்பது பகுத்தறிவாளர்களின் வாதம். இதைத் தான் மித் என்கிறோம். அந்த மித்தை உடைப்பது தான் இந்த நிகழ்ச்சி.

உலகெங்கும் படு வரவேற்பு பெற்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சி இந்த மித் பஸ்டர்ஸ். அமெரிக்கா துவங்கி மேலை நாடுகள் பலவற்றிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மூட நம்பிக்கைகள், இண்டர்நெட்டில் உலவும் தில்லாலங்கடி கதைகள், போன்றவற்றின் உண்மைத் தன்மைகளை புரட்டிப் போடும் நிகழ்ச்சி இது. “அட… அப்படியா ?” என வியக்கவும், “அட.. இதையா நான் நம்பிட்டிருந்தேன்” என வெட்கப்படவும் வைக்கும் ஷோ இது. மிகுந்த சுவாரஸ்யமான ஒரு மர்ம நாவல் போன்ற இந்த ஷோவுக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு. 


த மொமண்ட் ஆஃப் ட்ரூத்


“த மொமண்ட் ஆஃப் ட்ரூத்” ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி. உலகெங்கும் பல விதங்களில் நடத்தப்படும் செம ஹிட் ஷோ இது! இருபத்து ஒரு கேள்விகள் கேட்கப்படும். அதற்கு கொஞ்சம் கூட கலப்படமில்லாத  “உண்மை”யான பதிலைச் சொல்ல வேண்டும். பொய் சொன்னால் கருவி காட்டிக் கொடுத்துவிடும். “கோடீஸ்வரன்” நிகழ்ச்சி போல கடினமான கேள்விகள் ஏதும் இல்லை.  உங்களுக்கு சர்வ நிச்சயமாய் விடை தெரிந்த சிம்பிள் கேள்விகள் தான்.  !

ஆனால் அதைச் சொல்லி ஜாக்பாட் பரிசுத் தொகையான 5 இலட்சம் டாலர்களை வாங்க ஆளில்லை. காரணம் கேள்விகள் அத்தனை பர்சனல் ! “நேற்று நைட் விமலாவை தள்ளிட்டு கமலா தியேட்டருக்குப் போனியா” எனும் கேள்வி போல சிக்கலில் மாட்டி விடும் கேள்விகளும், “உங்க ஜட்டி கிழிஞ்சிருக்கா” என்பது போன்ற அவமானகரமான கேள்விகளும் இதில் அடக்கம் ! அடக்கடவுளே…  யாருக்கு வேணும் பரிசு ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக