பூரித் தேர்வீதியின் மேற்புறம் ஜகந்நாதர் கோவில் என்றால் அதன் வடகிழக்கில் இருப்பது குந்திச்சா தேவி கோவில். இவ்விரண்டுக்கும் இடையில் நீண்டு செல்வதுதான் அந்தத் தேர்வீதி. அதன் நடுப்பகுதியில் சிறிய பேருந்து நிலையம் ஒன்று இருக்கிறது. தவறாகச் சொல்லிவிட்டேன். பேருந்து நிலையம் என்று சொல்லலாகாது. சிற்றுந்து நிலையம் என்றுதான் சொல்லத் தகும். பொடிநடையாக இருபது மணித்துளிகள் நடந்தால் அந்த நிலையத்தை வந்தடையலாம்.
ஒடிய மாநிலத்தின் போக்குவரத்து வசதிகளைப்பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கண்ணுக்கெட்டிய தொலைவுவரை அங்குள்ள சாலைகளில் ஒரு பேருந்தையேனும் பார்த்ததாக நினைவில்லை. நல்ல வேளை, எண்பதுகளுக்குப் பிறகான தொழிற்புரட்சியில் ஈருருளி உற்பத்தி மிகுந்ததால் ஆளாளுக்குக் கடன்பட்டு ஒரு வண்டியை வாங்கிக்கொண்டார்கள். அந்த வண்டிகள் இருந்தமையால் உள்ளூர் ஆடவர்கள் அக்கம் பக்கத்திற்குச் சென்று பிழைப்பைப் பார்த்தார்கள். பேருந்துகளை மட்டும் நம்பியிருந்திருந்தால் இன்றைக்கும் நாம் நட்டநடுச் சாலையில் நின்றுகொண்டிருக்க வேண்டியதுதான்.
இந்தப் புள்ளியில்தான் தமிழகமும் பிற மாநிலங்களும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் போக்குவரத்து வசதிகளை எம்மாநிலத்தோடும் ஒப்பிடல் இயலாது. மலைமுடிகள் மிக்குள்ள உதகை, வால்பாறைப் பகுதிகளில்கூட ஒவ்வொரு சிற்றூர்க்கும் அரசுச் சிற்றுந்துகள் சென்று திரும்புகின்றன.
எனக்குத் தெரிந்த தம்பி ஒருவன் எம்மூர்க்கு வரும்போதெல்லாம் வந்த வேலையை முடித்துவிட்டு உதகைப் பேருந்தைப் பிடித்துவிடுவான். அங்கே சென்றிறங்கி போத்திமந்து, குந்தா, கோடைநாடு போன்ற மலைமுடி ஊர்களுக்குச் செல்லும் பேருந்தில் ஏறி காலதர் ஓரத்து இருக்கையில் அமர்ந்துகொள்வான். மணிக்கணக்கில் மலையழகுகளைக் காட்டிக்கொண்டே செல்லும் அப்பேருந்தில் அமர்ந்து இயற்கையழகில் திளைப்பான். சேருமிடம் சேர்ந்ததும் அந்தப் பேருந்து மீண்டும் உதகைப் பேருந்து நிலையத்திற்கே திரும்பி வரும். அங்கே ஒரு தேநீர் பருகிவிட்டு அதே வண்டியில் உதகை வந்தடைவான். போகும்போது வலப்புறக் காட்சிகளைப் பார்த்துச் சென்றவன் வரும்போது இடப்புறக் காட்சிகளைக் கண்டு திரும்புவான். வெறும் முப்பது உரூபாயில் நீலமலைத் தொடர்களில் இப்புறத்திற்கும் அப்புறத்திற்கும் கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்டு மகிழ்கிறான். ஒரு நாளில் இதைவிடவும் மலிவாய் ஒரு சுற்றுலாவை நிகழ்த்துவது எப்படி ? இது தமிழ்நாட்டின் சாலை மற்றும் பேருந்து வசதிகளால்தான் இயன்றது. இதை ஒடியாவில் செய்ய முடியாது.
பூரியும் கோனார்க்கும் அடுத்தடுத்துள்ள சுற்றுலாத் தலங்கள். இரண்டுக்குமிடையே முப்பத்தாறு கிலோமீட்டர்கள். பூரிக்கு வருபவர்கள் கோனார்க் செல்வதும் கோனார்க்குக்கு வருபவர்கள் பூரிக்குச் செல்வதும் இடையறாது நிகழும் போக்குவரத்துகள். ஆனால், அவ்விரண்டு ஊர்களுக்கும் இடையில் இயங்கும் அரசுப் பேருந்துகளைக் காணவில்லை. பூரி நகரத்தின் தேர் வீதி நடுவில் சாலையோரமாக அரதப் பழைய சிற்றுந்துகள் நின்றுகொண்டிருந்தன. அந்தச் சிற்றுந்துகளின் பழைமைக்கும் 'லொடலொடப்புக்கும்' காரணம் அவை தம் கொள்ளளவுக்கு மீறிய எடையை ஏற்றிக்கொண்டு சென்றதுதான்.
வண்டிக்குள் உள்ள பாட்டொலிப்பான்களின் மேல்மூடி பிய்ந்து போனதால் உணவுத் தட்டில் ஓட்டையிட்டுப் பொருத்தியிருக்கிறார்கள். நாம் எப்போதும் தீர்வைக் கண்டுபிடிப்பதில் வல்லவர்களாயிற்றே. ஒரு வண்டிக்குள் ஐம்பதுக்கும் மேற்பட்ட தலைகளை ஏற்றுகிறார்கள். வண்டி செல்லும்போது தரதர கரகர ஒலிகளை எழுப்பிக்கொண்டே செல்கிறது. வழியிலுள்ள நிறுத்தங்கள் எல்லாவற்றிலும் பொறுப்பாக நிறுத்தி ஏற்றிச் செல்கிறார்கள்.
பூரியிலுள்ள அந்தச் சிற்றுந்து நிலையத்தில் வண்டிகளுக்கிடையே 'புறப்பாட்டு நேரம்' என்பது பெரும் கலவரப்பொருள்போலும். நாம் சென்றபோது ஏற்கெனவே புளிமூட்டைபோல் அடைத்திருந்த சிற்றுந்துக்குள் ஏற நம்மையும் அழைத்தார்கள். 'கோனார்க்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லையாக்கும்' என்பதைப்போல் நின்றுகொண்டேன். புறப்பாட்டுக் கலவரத்தை அடக்குவதற்காக அந்த நிலையப் பேருந்துகளின் தலைவனைப்போல் ஒருவன் வந்தான். நல்ல திடகாத்திரமான தோற்றம். முதலில் அறைந்துவிட்டுத்தான் பேசத் தொடங்குவான் என்று நினைக்கிறேன். நம்மைப்போல் ஏறாது நின்றவர்களை மிரட்டி அந்த வண்டிக்குள் ஏற்றினான். நம் மீசையைப் பார்த்து நம்மை விட்டுவிட்டான். இந்த மீசையினால் நான் அடைந்துவரும் நலன்கள் இவ்வாறு எண்ணற்றவை.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக