மக்கள் ஏறியடைந்த பிறகும் கிளம்பாமல் நின்றிருந்த சிற்றுந்தினை அந்தத் தடியன் வந்து கிளப்பி அனுப்பினான். கையில் தளர்ந்து ஆடும் கைக்கடிகாரம், தங்கக் கைச்சங்கிலி, உடனே கழற்றியெறிவற்கு ஏதுவான செருப்பு, புதிய ஈருருளி, அரைத்தொந்தி, மேல்பொத்தான்கள் அணியாத சட்டை, பாக்குக் களிம்பேறிய பற்கள் என ஆள் பார்ப்பதற்கு நிலைய நாட்டாமைபோல்தான் இருந்தான். எப்படிப் பார்த்தாலும் அவனுடைய தோற்றம் நமக்கு மிரட்டலாக இல்லைதான். ஆனால், அங்கிருந்த மக்களும் வண்டிக்காரர்களும் அவனைப் பார்த்துப் பம்மினார்கள். 'சங்கத்து ஆளாக' இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
அடுத்த சிற்றுந்து வந்து நின்றதும் அதில் படபடவென்று ஏறிக்கொண்டோம். வண்டி நிற்கையில் கீழேயே நடத்துநரிடம் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். வழியோர நிறுத்தங்களில்தான் ஏறியமர்ந்தபின் சீட்டு பெறலாகுமாம். அடுத்தடுத்த சிற்றுந்து வரிசை கட்டி நின்றிருந்தாலும் அவற்றில் யாரையும் ஏற விடுவதில்லை. கிளம்புவதற்கு நிற்கும் சிற்றுந்தில் மட்டும்தான் ஏற வேண்டும். அந்த வண்டி கிளம்பிச் சென்றதும் அடுத்த வண்டியில் ஏறலாம் என்று கமுக்கமாக நிற்பவர்களைக் கண்டுகொள்கிறார்கள். வலிய வந்து, "ஏறு ஏறு, நீ பார்த்திருக்கும் வண்டி போகாது," என்று பலவிதமாகவும் பேசுகிறார்கள். நம் பொறுமையைத் தீர்ப்பதற்கென்றே கூட்டமேறிய வண்டியை எடுக்காமல் எரிபொறியை உறுமவிட்டபடியே நிற்கிறார்கள். "நிறுத்தத்திலேயே படுத்தாலும் படுத்துக்கொள்வேனேயன்றி உன் வண்டியில் ஏறமாட்டேனடா..." என்று சூளுரைத்து நின்றாலொழிய நம்மைத் தூக்கி வண்டியில் ஏற்றாமல் விடமாட்டார்கள். ஒவ்வொரு பயணியும் அவர்கட்கு இழக்கக்கூடாத வணிகம்.
நிலைமை இவ்வாறிருக்கும் ஒரு நிறுத்தத்தில் நாம் அடுத்த வண்டியில் ஏறி காலதர் ஓரத்தில் அமர்ந்துவிட்டதைத் தடியன் பார்த்தான். "இவன் எந்த மாநிலத்தில் இருந்து வந்திருப்பான்... எதற்கும் அயராதவனாக இருக்கிறானே...." என்று மனத்திற்குள் நினைத்திருப்பான். "போடா... போடா... நீ படிக்கின்ற பள்ளியில் நான் தலைமை ஆசிரியரடா..." என்பதைப்போல் நானும் நினைத்துக்கொண்டேன். நாம் ஏறிய சிற்றுந்திலும் மடமடவென்று மக்கள் ஏறிக்கொண்டார்கள். என்னருகில் முக்காடு போட்ட ஒரு பெண்மணி வந்து அமர்ந்துகொண்டார். ஆண்பெண் ஒன்றாய் அமர்வதில் அங்கே எவ்வித மனத்தடையும் இருக்கவில்லை. முட்டாமல் மோதாமல் உட்கார்ந்து நல்லபடியாக சென்று சேர வேண்டும் என்று என்னைக் குறுக்கிக்கொண்டேன்.
சிற்றுந்து கிளம்பியது. நிலையைத்தைவிட்டு வெளியே வந்து தேர் வீதியில் நகர்ந்தது. கடற்கரை, கோவில்கள், தேர்வீதி, கடைவீதிகள், தங்குவிடுதிகள், மடக்கட்டடங்கள் ஆகியவற்றால் ஆகிய சிறிய நகரம்தான் பூரி. வண்டியை நகர்த்திய ஐந்தாம் நிமிடத்தில் நகரத்தைவிட்டு வெளியேறிவிடலாம். பூரிக்குள் நுழைவதும் அவ்வாறுதான். உள்நுழைந்த உடனே நகர்நடுவத்திற்குள் வந்துவிடலாம்.
கோனார்க் செல்கின்ற இந்தச் சிற்றுந்து ஏன் நிரம்பி வழிகிறது என்பது இப்போதுதான் விளங்கியது. வழிநெடுக அங்கங்கே நிறுத்தங்கள் இருக்கின்றன. உள்ளூர்வாசிகள் எங்கே வண்டியை நிறுத்தினாலும் நிற்கிறார்கள். பிரிவுச் சாலையில் தொலைவில் ஒரு பெண்மணி வண்டியை நோக்கி வந்தபடியிருந்தார். அவர் வருகையில் வண்டியைப் பார்த்து ஒரு சைகை செய்தார். அதற்காகவே சற்று நேரம் நிறுத்தியிருந்து அவரை ஏற்றுக்கொண்டது. அப்பெண்மணியின் அழகுதான் காரணமா... அறியேன். அந்த வண்டியில் கோனார்க் வரை செல்கின்ற மக்கள் நம்மைத் தவிர யாருமே இல்லை. பூரியில் ஏறியவர்கள் வழி நிறுத்தங்களில் இறங்கிக்கொள்கின்றார்கள். வழி நிறுத்தங்களில் ஏறியவர்கள்தாம் கோனார்க்வரை வருகின்றார்கள். கோனார்க்கில் அவர்கள் வேலையென்று செய்வதற்கும் ஒன்றுமில்லை. கோனார்க் சூரியக் கோவில் பகுதியில் கடைபோட்டிருப்பவர்களாக இருக்கக்கூடும்.
ஒடிய மக்கள் எதற்கும் உணர்ச்சி வயப்படாதவர்களாக இருக்கிறார்கள். தமக்கு நேரும் எவ்வொன்றையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் சினந்து பேசுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்குள் சண்டை வரவே வாய்ப்பில்லை. அதற்கு என்ன காரணம் என்பதைப் பிறகு சொல்கிறேன்.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக