Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 1 மார்ச், 2018

ஒன் + ஒன் = ஜீரோ 17

விஷ்ணு செல்போனின் மறுமுனையில் சொன்னதைக் கேட்டு சற்றே குரலைத் தாழ்த்தினான் விவேக்.
"ஹாஸ்பிடல்ல ஏதாவது பிரச்னையா?''
"பிரச்னைன்னு சொல்லாதீங்க பாஸ். பிரளயம்னு சொல்லுங்க...''
"புரியும்படியாய் சொல்லு...!'' விவேக் இன்னும் குரலைத் தாழ்த்தினான்.
"என்ன பாஸ்... உங்க வாய்ஸோட டெசிபல் ரொம்பவும் கவலைக்கிடமாய் இருக்கு... எதிர்ல கமிஷனர் இருக்காரா?''
"ஆமா...''
"அப்படீன்னா போன்ல எதுவும் வேண்டாம் பாஸ்... நீங்க ஏதாவது ஒரு காரணம் சொல்லிட்டு உடனடியாய் ஹாஸ்பிடலுக்குப் புறப்பட்டு வாங்க...'' விஷ்ணு சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட விவேக்கும் செல்போனை அணைத்தான்.
கமிஷனரை ஏறிட்டான். அவர் ஏதோ ஒரு ஃபைலைப் புரட்டி அதன் பக்கங்களில் மும்முரமாய் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தார். விவேக் செல்போனை அணைத்ததும் தலை நிமிராமல் கேட்டார்.
"என்ன மிஸ்டர் விவேக்... கால் யார்கிட்டேயிருந்து?''
"விஷ்ணு சார்''
"எனிதிங்க்... இம்பார்ட்டண்ட்?''
"அந்தப் பெண் ஜெபமாலைக்கு இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள கான்ஷியஸ் திரும்ப வாய்ப்பு இருக்குன்னு டாக்டர் சொல்லியிருக்கார்.''
"தட்ஸ் குட்... டு ஹியர் திஸ் மெஸேஜ்''
"நான் புறப்படறேன் ஸார்... '' விவேக் நாற்காலியினின்றும் தன்னை உருவிக்கொண்டு எழுந்தான்.
"ஜெபமாலை கான்ஷியஸுக்கு வந்து ஏதாவது பேசினா அந்த விபரத்தை எனக்கு உடனடியாய் கன்வே பண்ணுங்க விவேக்''
"ஷ்யூர் ஸார்...!''
"விவேக் கமிஷனரின் அறையினின்றும் வெளிப்பட்டான். விஷ்ணு செல்போனில் 'பிரச்னைன்னு சொல்லாதீங்க பாஸ், பிரளயம்னு சொல்லுங்க' என்று சொன்னது விவேக்கின் இருதயத்தை கலவர பூமியாக மாற்றியது.
'ஹாஸ்பிடலில் அப்படி என்ன நடந்திருக்கும்?'
பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த தன்னுடைய காரை நோக்கி வேகவேகமாய் நடந்தான் விவேக்.
*******
முப்பது நிமிட வேகமான கார் பயணம்.
ஹாஸ்பிடல் வந்தது.
வரவேற்பறையிலேயே காத்திருந்தான் விஷ்ணு. அவனது உடம்பில் வழக்கமாய் ஒட்டியிருக்கும் உற்சாகத்தில் ஐம்பது சதவீதம் காணாமல் போயிருந்தது.
"வாங்க பாஸ்...''
"என்னடா பிரச்னை?''
"பிரச்னையில்ல பாஸ் பிரளயம்''
"சரி...பிரளயம்... அது என்ன?''
"பாஸ்... இது ரிசப்ஷன்... உள்ளே வாங்க... அந்த காலியான ரூமுக்கு போயிடுவோம்...!''
விஷ்ணு சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட விவேக் அவனைப் பின் தொடர்ந்தான்.
இருவரும் அந்த காலியான அறைக்குள் நுழைந்தார்கள். விஷ்ணு கதவைச் சாத்தினான்.
"என்னடா பண்றே?''
"கதவைச் சாத்தினேன் பாஸ்''
"அது தெரியுது... கதவை மூடிட்டு பேசற அளவுக்கு அப்படி என்ன பிரச்னை, ஸாரி பிரளயம்...?''
"பாஸ்... நீங்க எப்படி காரணம் இல்லாம ஒரு காரியத்தை செய்ய மாட்டீங்களோ அதே மாதிரிதான் நானும்...''
"சரி... சரி... விஷயத்தை சொல்லு...''
"விஷயத்தைச் சொல்லப்போறது நானில்லை பாஸ்''
"பின்னே...?''
"என்னோட செல்போன்... இதுல நான் ரெக்கார்ட் பண்ணி வெச்சுருக்கற கான்வெர்சேஷனைக் கேளுங்க பாஸ்...'
"கான்வெர்சேஷனா...?''
"ஆமா பாஸ்... நீங்க கமிஷனர் ஆபிஸுக்கு புறப்பட்டுப் போனதும் கொஞ்ச நேரம் கழிச்சு ஜெபமாலையோட கான்ஷியஸ் கண்டிஷன் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரிஞ்சிக்கறதுக்காக டாக்டரைப் பார்க்கப் போனேன். அவரோட அறைக் கதவு திறந்திருந்தது, கதவைத் தட்டிட்டு உள்ளே போலாம்னு நினைச்ச விநாடி அவரோட கோபமான குரல் கேட்டது. "ஜெபமாலையைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியணும்?'' இப்படி ஒரு கோபமான வாசகம் டாக்டர்கிட்டேயிருந்து வெளிப்பட்டதும் நான் உஷாரானேன். டாக்டர் யார் கூடவோ போன்ல பேசிட்டிருக்கார். போனின் மறுமுனையில் இருக்கிற யாரோ ஒரு நபர் ஜெபமாலையைப் பத்தி விசாரிக்கிற விஷயம் என்னுடைய மனசுக்கு உறுத்தலாய் படவே உடனே என்னோட செல்போனை எடுத்து ஆடியோ ரிக்கார்டிங் ஆப்ஷனுக்குப் போய் 'ஆன்' பண்ணிட்டேன்... அந்த கான்வெர்சேஷனைத்தான் இப்ப நீங்க கேட்கப் போறீங்க பாஸ். ஆன் பண்ணட்டுமா?''
"பண்ணு...!''
ஆடியோ ஆப்ஷனை ஆன் செய்தான் விஷ்ணு, டாக்டரின் குரல் கோபத்தோடு கேட்டது.
"சரி! உங்களுக்கு இப்ப என்ன வேணும்?''
டாக்டர் கேட்ட கேள்விக்கு மறுமுனையில் ஒலித்த ஓர் ஆண் குரல் அதள பாதாளத்தில் இருந்து ஏதோ ஓர் எதிரொலி போல் கேட்டது.
"நான் சொல்றபடி நீங்க கேட்கணும் டாக்டர்''
"மொதல்ல நீங்க யார்ன்னு எனக்குத் தெரியணும்''
"மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு முக்கியமான அதிகாரியின் பி.ஏ பேசறேன்''.
"பேரு?''
"அதெல்லாம் உங்களுக்கு வேண்டாம் டாக்டர். அந்த விபரத்தையெல்லாம் சொல்ற மாதிரி இருந்தா நானே நேர்ல வந்து இருப்பேன். இப்ப நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். ஜெபமாலை விவகாரத்துல நான் உங்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுக்கிற மாதிரி நீங்க நடந்துக்கணும்''
"இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை...!''
"ஜெபமாலைக்கு அவ்வளவு சுலபத்துல கான்ஷியஸ் வந்துடக்கூடாது. அப்படியே வந்தாலும் பேச முடியாத நிலைமையில் சில குறிப்பிட்ட நாட்கள் வரை இருக்கணும்...''
"இது எதுக்காகன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?''
"கண்டிப்பா தெரிஞ்சுக்கணுமா?''
"நான் ஒரு டாக்டர். என்னோட ஒரு பேஷண்டை குணப்படுத்தக்கூடாதுன்னா அதுக்குச் சரியான காரணம் வேணும் இல்லையா?''
"ஜெபமாலை சில குறிப்பிட்ட நாள் வரைக்கும் எதுவும் பேசாம இருக்கறதுதான் நம்ம நாட்டுக்கு நல்லது... முக்கியமாய் நம்ம தமிழ்நாட்டுக்கு ரொம்ப ரொம்ப நல்லது...!''
"எனக்கு காரணம் தெரியணும்...''
"நேரம் வரும்போது உங்களுக்கே தெரிய வரும்''
"ஸாரி... மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு முக்கியமான அதிகாரியின் பிஏ பேசறதாய் நீங்க சொல்றீங்க... இந்த விஷயத்தை நான் எப்படி நம்ப முடியும்?''
"இப்போதைக்கு நீங்க நம்பணும்... ஜெபமாலை விவகாரத்துல நாங்க சொன்னபடி நடந்துக்கணும்''
"அப்படி நடக்கலைன்னா...?''
"அதுக்கப்புறம் உங்க வாழ்க்கையில நடக்கப்போகிற சம்பவங்களில் சந்தோஷம் என்கிற விஷயம் காணாமல் போயிருக்கும்''
"இந்த மிரட்டற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்''
"இது மிரட்டல் இல்லை... ஒரு அப்ளிகேஷன்... இந்த அப்ளிகேஷனை கன்சிடர் பண்றதும் பண்ணாததும் உங்க விருப்பம். இது ஒரு தனி நபர் கட்டளை கிடையாது. அரசாங்கத்தோட கட்டளை. சில நேரங்களில் இது போன்ற விஷயங்களை வெளிப்படையாய் சொல்ல முடியாது''
"நான் கொஞ்சம் யோசிக்கணும்''
"இதுல யோசிக்க ஒண்ணுமேயில்லை... ஜெபமாலைக்கு கான்ஷியஸ் திரும்பக் கூடாது. அப்படி திரும்பினாலும் அவ பேச முடியாத நிலைமையில் வெச்சுருக்க வேண்டியது உங்க கடமை. இது அனானிமஸ் போன் கால் கிடையாது. அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட அதிகாரபூர்வமான கால்.ஸோ யோசனை பண்ணி ஒரு முடிவு எடுங்க டாக்டர். இனி நான் உங்களுக்கு போன் பண்ணமாட்டேன்!''
உரையாடல் இத்துடன் நின்றுபோயிருக்க விஷ்ணுவின் செல்போன் வாயைச் சாத்திக் கொண்டது.
"கேட்டீங்களா பாஸ்...?''
"ம்...''
"எவனோ ஒருத்தன் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை ஒரு போர்வையாய் போர்த்திகிட்டு மிரட்டுறான்...''
"இல்ல விஷ்ணு... போன்ல பேசுன நபர் அரசுத் துறையைச் சேர்ந்த நபராத் தான் இருக்கணும்... அந்தப் பேச்சுல ஓர் ஆணவம் இருந்தது. அப்படிபட்ட ஓர் ஆணவம் ஓர் அரசு அதிகாரியின் பேச்சில் தான் இருக்கும்''
"இப்ப என்ன பண்ணப் போறோம் பாஸ்?''
"அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு விஷயம் தெரியணும். டாக்டர் செல்போனில் அந்த நபரோடு பேசும்போது அவரோட வாய்ஸ் மட்டும் தானே உன்னோட செல்போன்ல ரெக்கார்ட் ஆகியிருக்கணும். எதிமுனையில பேசின நபரோட வாய்ஸும் துல்லியமாய் பதிவாகியிருக்கே... அது எப்படி...?''
"ஸாரி பாஸ்... உங்ககிட்ட அந்த விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்னொட ஃப்ரெண்ட் ஒருத்தன் 'ட்யூட்டி பெய்ட் ஷாப்' ஒண்ணை வெச்சு நடத்திட்டு வர்றான். போன மாசம் அவனோட கடைக்குப் போய் நான் பேசிட்டிருந்தபோது அவன் ஒரு 'சிப்'பைக் கொடுத்து இதை உன்னோட செல்போன்ல ஃபிக்ஸ் பண்ணிக்கோன்னு சொன்னான். இது என்ன சிப்ன்னு கேட்டேன். அதுக்கு அவன் இந்த 'சிப்'க்கு பேர் மெமோர் மைக்ரோ சவுண்ட் அண்ட் வாய்ஸ் கேப்ச்சர் (MEMORE MICRO SOUND AND VOICE CAPTURE). இதை செல்போன் ஆடியோ ஆப்ஷனோட கனெக்ட் பண்ணி உள்ளே பொருத்திட்டா அது ஒரு நபரின் பேச்சை பதிவு பண்ணும்போது எதிர்முனை செல்போனில் பேசுகிற நபரின் பேச்சையும் பதிவு பண்ணி ரெண்டு பேருக்கும் இடையில எது மாதிரியான பேச்சுவார்த்தை நடைபெற்றதுன்னு உரிச்ச வாழைப்பழம் மாதிரி காட்டிக் கொடுத்துடும்...!''
விஷ்ணு சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த நீளமான வராந்தாவின் கோடியில் ஒரு நர்ஸ் வேகமாய் ஓடி வருவது தெரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக