கலிங்கம் காண்போம் - பகுதி 44 பரவசமூட்டும் பயணத்தொடர்
கொனாரக் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய சிற்றுந்து மண் தடத்தில் நகர்ந்தது. மிகச்சிறிய ஊரான கொனாரக்கில் மக்கள் கையைக் காட்டி நிறுத்தும் இடந்தோறும் சிற்றுந்து நிற்கிறது. அங்கங்கே ஒருவரோ இருவரோ ஏற்றிக்கொள்ளப்படுகிறார்கள். நிலையத்திலேயே இருக்கைகள் நிரம்பி விடுவதால் அடுத்தடுத்து ஏறும் பயணிகள் நின்றபடியே வரவேண்டும். வண்டி கொள்ளாத அளவுக்குக் கூட்டம் நிரம்பிவிட்டாலும் மேலும் நெருக்கி நெருக்கி ஏற்றுகிறார்கள்.
ஒடியர்கள் பெரும்பாலும் ஒல்லியராய் இருப்பதால் ஒரு சிற்றுந்தில் பேருந்துக்குரிய கூட்டம் ஏறிக்கொள்கிறது. சிற்றுந்தில் ஒலித்துக்கொண்டிருந்தது இந்திப்பாடலா ஒடியப்பாடலா என்று தெரியவில்லை. சிற்றுந்துப் பின்சக்கரத்தின் பட்டையொன்று உரசிக்கொண்டே வந்தது. பாட்டைவிட 'படக்கு படக்கு’ என்று அந்த அடிப்பொலிதான் தொடர்ந்து கேட்டது. பக்கத்தில் அமர்ந்திருந்தவன் என்னைப் போட்டு நெருக்கியதில் என் உடல்வலி எல்லாம் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்.
குலுங்கியபடியே வியர்வைக் கசகசப்போடு புவனேசுவரம் வந்து சேர்ந்தோம். பொதுவாக, எவ்வூர் என்றாலும் இருப்பூர்தி நிலையத்தின் அருகில் பற்பல தங்குவிடுதிகள் இருக்கும். அங்கேதான் நமக்கு ஒன்றுக்குப் பத்து வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் புவனேசுவரத்தின் இருப்பூர்தி நிலையத்தருகே இறக்கிவிடுமாறு நடத்துநரைக் கேட்டுக்கொண்டோம். நடத்துநர் என்ற பெயரில் ஒட்டிய உடலோடு ஓர் இளைஞர் இருந்தார். அவர் பயணச்சீட்டு கேட்டு வண்டிக்குள் முன்னும் பின்னுமாக அலைவதில்லை. ஏறும்போதே சீட்டு கொடுத்துவிடுகிறார். இறங்குமிடம் பார்த்து நிறுத்துகிறார். அவ்வளவுதான். புவனேசுவரத்திற்குள் இறங்கியாயிற்று.
சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், தில்லிக்கு அடுத்து நான் காலடி வைக்கும் மாநிலத் தலைநகரம் புவனேசுவரம். நேரம் இரவு எட்டுமணி. ஊர்மக்கள் பரபரப்பில்லாமல் நிதானத்தோடு காணப்பட்டனர். சாலையில் தானிழுனிகளும் மகிழுந்துகளும் ஈருருளிகளும் அளவான விரைவில் சென்றுகொண்டிருந்தன. சாலைப்புழுதி எழும்பாத அளவுக்குக் குளிர்காற்று பரவியிருந்தது. ஒடிய மக்கள் நம்மைப்போன்ற தோற்றமுடையவர்கள். சாலையோரங்களில் வழக்கமான கடைகள். எல்லாக் கடைகளிலும் ஹால்திராம்சின் நொறுக்குத்தீனிப் பொட்டணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. இருப்பூர்தி நிலையத்திற்கு அருகே இருக்கும் முதன்மைச் சாலையை வந்தடைந்தோம். அந்தச் சாலையைப் பிடித்தபடி சென்றால் கட்டாக்கை அடைய முடியும். புவனேசுவரமும் கட்டாக்கும் அருகருகே இருக்கும் இரட்டை நகரங்கள்.
கட்டாக் சாலையில் பல விடுதிகளில் நுழைந்து அறைகேட்டோம். சிலவற்றில் நாள்வாடகை கூடுதலாக இருந்தது. புவனேசுவரத்தின் குளிர்ச்சிக்கு நமக்கு வேண்டிய அறைக்குக் குளிரூட்டம் தேவையில்லை. ஒருவழியாக பிரபுகிருபா என்ற பெயரில் அமைந்த விடுதியைத் தேர்ந்தோம். அறையின் நாள்வாடகை அறுநூற்றைம்பது உரூபாய். எண்ணூறு என்று சொன்ன தம்பியிடம் அடித்துப் பேசி அறுநூற்றைம்பதுக்கு இறக்கினோம். நல்ல பரப்பான அறை.
முதுகுப்பைகளை அறைக்குள் வைத்தாயிற்று. அருகிலே ஓர் உணவகத்தைப் பிடித்து வயிற்றுக்கு ஏதேனும் இடவேண்டும். வெளியே வந்து ஓர் உணவகத்தைக் கண்டுபிடித்து அவன் தந்த கடைசி மிச்சத்தை உணவாக உட்கொண்டோம். உண்டதில் சிறிதும் நிறைவில்லை. இவ்விரவில் இனி எங்கே சென்று தேடுவது? வேண்டா வெறுப்பாக உண்டுவிட்டு வந்து படுத்தாயிற்று.
கட்டிலில் விழுந்ததுதான் தெரியும். நாளெங்கும் அலைந்த வலியை அப்போதுதான் கால்கள் உணர்த்தின.
ஓரிடத்திற்குப் பயணம் வந்துவிட்டால் நமக்குக் கால்களே துணை. பலரும் வெளியே வருவதற்கும் அலைவதற்கும் ஏன் அஞ்சுகிறார்கள் என்றால் நடக்கவேண்டியிருக்குமே என்பதற்காகத்தான். நடைச்சோம்பேறிகள் நாடறிதல் இயலாது. இந்த நிலத்தை என் கால்களால் அளப்பேன் என்னும் வேட்கையுடையவர்தான் இருப்பிடத்தை விட்டுக் கிளம்பவேண்டும். நாள்முழுக்க எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் என்னால் அலைய முடியும். ஆனால், அன்றிரவு என் கால்களை நீட்டிப் பரப்பி நீள்துயில் கொள்வதற்குத் தடையிருக்கலாகாது. கால்வலி கண்ணிமைகளைத் தாழ்த்தியது. உறங்கிவிட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக