Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

உடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்


Image result for வெந்தயம்


வெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்துவத் தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் இது மருத்துவத் தாவரமாகவும் விளங்குகிறது. மட்டுமின்றி வெந்தயத் தழை சிறந்த கீரையாகவும் பயன்படுத்தப்படுகிறது. முற்காலத்திலிருந்தே வெந்தயம் உணவு வகைகளில், மணமூட்டவும், சுவையூட்டவும் பயன்படுத்தப்படுகிறது.
இது உணவில் பல்வேறு முறைப்படி சேர்க்கப்படுகிறது. உணவுப் பொருளுக்கு மணத்தை ஊட்டுவது மட்டுமின்றி, சத்துக்களையும் தருகிறது. கறி, கூட்டு, தோசை, இட்லிகளிலும், சாம்பார்பொடி, ரசப்பொடி, மல்லி, மஞ்சள் இவைகளோடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு குழம்புகளில் சேர்க்கப்படுகிறது. பேக்கரி, பிஸ்கட், ரொட்டி தயாரிப்பிலும் வெந்தயம் பயன்படுகிறது.
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் "ஏ" போன்றவைகளும் அடங்கியுள்ளன.
பொருளாதாரப் பயன்கள்:
வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
வெந்தயத்திலிருந்து ஈதரை பயன்படுத்தி வாலை வடித்தல் முறையில் ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை சோப்பு தயாரிப்பிலும் சமையலிலும் பயனாகிறது.
மேலும் வெந்தயத்திலிருந்து ஒரு மணமுடைய எண்ணை எடுக்கப்படுகிறது. இது சென்ட், மணப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
ஒருவகை மஞ்சள் சாயம் தயாரிக்கப்பட்டு துணிகளுக்கு வண்ணமேற்ற மாத்திரைகளுக்கு வண்ணம் கொடுக்க பயன்படுகிறது.
வெந்தயத்தை ஊற வைத்து எடுக்கப்படும் பசை நூற்பு ஆலைகளிலும், அச்சு தொழில்களிலும் பயன்படுகிறது.
சீயக்காய் தூளில் வெந்தயம் சேர்க்கப்படுகிறது.
வெந்தயத்தின் தன்மைகள்:
வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.
சித்த யுனானி முறைகளில் வெந்தயம்:
சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவப் பயன்கள்:
சீதபேதி குணமாக:-
20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும்.
சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.
வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும்.
வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.
வயிற்று வலி, பொருமல் நீங்க:-
மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும்.
வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.
இரவில் வெந்தயத்தை அரிசி கஞ்சியில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வலி தீரும்.
வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும்.
திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்.
ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும்.
இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
கணைச்சூடு நீங்க:-
வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடவும்.
20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணையில் காய்த்து, வடிகட்டி, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலையில் இருபது நாட்கள் குடிக்க கணைச்சூடு தீரும்.
மாதவிடாய் வயிற்று வலி நீங்க:-
100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும்.
வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.
உடல் பலம் ஏற்பட:-
200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து, மீண்டும் இளநீரில் ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி, கற்கண்டை சேர்த்து, காலை உணவுக்குப் பின் ஒரு கரண்டி சாப்பிட்டு சுடுநீர் அல்லது பால் சாப்பிட்டு வர (40 நாள்) உடல் பலம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும்.
தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படும்.
முகப்பரு நீங்க:-
ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருவில் பூச பரு மறையும்.
பேன், பொடுகு நீங்க:-
தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும்.
பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.
வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். இதை தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.
வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வர தோல் நோய்கள் நீங்கும். உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும் இந்த களி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக