Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 24 டிசம்பர், 2018

பங்கு வர்த்தக வகைகள் (Types of Trading in Share Market)


download
Types of trading in Share Market - explained in Tamil
எல்லா வர்த்தகத்தை போலவே பங்குகள் வர்த்தகத்திலும் இரண்டே பரிவர்த்தனைகள் தான் உள்ளன. ஒன்று பங்குவகளை வாங்குவது இன்னொன்று பங்குகளை விற்பது :) ஆனால் பங்குகளை வாங்கி  எவ்வளவு நாட்களுக்குப் பிறகு விற்கிறோம் என்பதை பொறுத்து பங்கு வர்த்தகத்தை 3 வகைகளாக பிரிக்கலாம்.

1) Day Trading : பங்குகளை வாங்கி, வாங்கிய அதே நாளில் ஒரு குறிப்பிட்ட அளவு விலை ஏறியவுடன் ( 2 to 5 %) விற்பது. இப்படி வாங்கி விற்பவர்கள் Traders என்றழைக்கப்படுவார்கள். பங்கு வர்த்தகத்தில் புதிதாக நுழைபவர்கள் இந்த வகையான trading செய்யாமலிருப்பது அவர்களுக்கு நல்லது. Day trading   செய்வதற்கு மிக நிறைய அனுபவம்  வேண்டும். முக்கியமாக ஆசையை அடக்க தெரிய வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் ABC என்ற நிறுவனத்தின் பங்குகளை ஒரு பங்கின் விலை Rs.500-க்கு 100 பங்குகளை காலையில்  வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த பங்கின் விலை மதியம் Rs.512-க்கு செல்லும்போது, விற்கிறார்  என்றால் ஒரு பங்கிற்கு Rs.12 வீதம், 100 பங்குகளுக்கு Rs.1200 லாபம் கிடைக்கும். Brokerage மற்றும் Tax போக, அவருக்கு Rs.1000 வரை அன்றைய தினம் நிகர லாபம் கிடைக்கும். அடுத்த நாள், முந்தைய நாள் லாபத்தை இரட்டிப்பாக்க, Rs.1 லட்சம் முதலீடு  செய்து, 200 பங்குகளை, காலையில் Rs.510-க்கு வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். துரதிஷ்டவசமாக, அந்த பங்கின் விலை, அவர் வாங்கிய பிறகு, Rs. 490-க்கு அன்றைய தினம்  முடிவடைந்தால், அவர் ஒரு பங்கிற்கு Rs.20 வீதம் Rs.4000 மற்றும் Brokerage, Tax  சேர்த்து Rs.4400 வரை நட்டம் அடைய  நேரிடும். இந்த நட்டத்திற்கு பிறகு பங்கு சந்தையை விட்டு ஓட்டம் பிடிக்கவும் வாய்ப்புகள் உள்ள வர்த்தக வகை இது. Day Trading என்பது புதிதாக நுழைபவருக்கு மிகவும் ஆபத்தான trading  வகை. 10 நாட்களில் சேர்த்த லாபத்தை ஒரே நாளில் கபளீகரம் செய்யும் ஒரு மோசமான வாய்ப்புள்ள trading வகை இந்த trading.

2) Swing  Trading : பங்குகளை வாங்கி ஒரு சில நாட்களோ அல்லது வாரங்களோ கழித்து விற்பவர்கள் இந்த வகையை  சேர்ந்தவர்கள். இவர்களையும் traders  என்றே சொல்ல வேண்டும். Swing Trading  செய்பவர்கள், ஒரு பங்கினை வாங்கும்போதே, ஒரு குறிப்பிட்ட சதவீத விலை உயர்வை மனதில் வைத்து  வாங்குவார்கள். அவர்கள் நினைத்த அளவுக்கு விலை ஏறியவுடன் விற்றுவிட்டு வெளியேறி  விடுவார்கள். உதாரணமாக, ABC Ltd என்ற நிறுவனத்தின் 100 பங்குகளை Rs.500-க்கு ஒரு ஸ்விங் ட்ரேடர் வாங்குகிறார் என்றால், அவர் Rs.550-ஐ ஒருவேளை தன்னுடைய இலக்காக வைத்து வாங்கலாம். அப்படி வாங்குபவர், பங்கின் விலை Rs.550 வந்தவுடன் (ஒரு சில நாட்களிலோ அல்லது வாரத்திலோ), பங்கை விற்றுவிட்டு வெளியேறி விடுவார். அவரின் இலக்கு Rs.50000 முதலீட்டில் Rs.5000 சம்பாதிப்பது. ஸ்விங் ட்ரேடர்-க்கு அவரின் இலக்கை அடைந்தால் போதும். பங்கின் எதிர்கால வளர்ச்சி பற்றிய ஆர்வமோ எதிர்பார்ப்போ இல்லை.  இந்த வகையான trading, Day  trading -ஐ விட கொஞ்சம் பாதுகாப்பானது, ஆனாலும் இந்த வகையும் என்னை பொறுத்த வகையில் மிக  சிறந்தது என்று சொல்ல முடியாதது. ஏனென்றால், நாம் விற்றவுடன் அந்த பங்கு மீண்டும் ஒரு 10 - 20% ஏறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதை போலவே, நாம் ஒரு பங்கை விற்ற விட்டு புதிதாக வாங்கிய பங்கின் விலை இறங்கவும் வாய்ப்புகள் உண்டு.

3) Long Term  Investment: இது ஒரு மிக சிறந்த வர்த்தக முறை. ஒரு பங்கினை வாங்குவதற்கு முன், அந்த நிறுவனத்தை பற்றியும், அதனுடைய management  பற்றியும், அந்த நிறுவனம் சார்ந்துள்ள தொழில் துறைக்கு எதிர்காலத்தில் உள்ள பிரகாசமான வளர்ச்சி வாய்ப்புகள்  பற்றியும் தெள்ள தெளிவாக அலசி ஆராய்ந்து, அந்த பங்கினை வாங்கி, 2 அல்லது 3 வருடங்கள் கழித்து, விற்கும் முறை.  இது வரை பங்கு சந்தையில் பணம்  சம்பாதித்தவர்கள், Warren  Buffet , ராகேஷ் ஜுஞ்சுன்வாலா போன்ற ஜாம்பவான்கள் பின்பற்றும் வழிமுறை இந்த வகையான பங்கு வர்த்தகம். ஒரு தரமான நிறுவனம், சிறந்த துறையில் உள்ள நிறுவனம், வளமான எதிர்காலம் உள்ள நிறுவனம் , ஒரு சில காரணங்களால் (சர்வதேச அளவில் உள்ள பொருளாதார நிகழ்வுகள், Reserve Bank  எடுத்த பாலிசி முடிவுகள் அல்லது அந்த நிறுவனத்தின் தற்போதைய காலாண்டு முடிவுகள்  எதிர்பார்த்த அளவு இல்லாதது) விலை வீழ்ச்சியில் இருக்கும்போது வாங்கி, ஒரு சில அல்லது பல வருடங்கள் கழித்து 2 அல்லது மூன்று மடங்கு விலையில் விற்று பணத்தை பல மடங்காக மாற்றும் வர்த்தக முறை.


பங்கு சந்தையின் தந்தை Warren Buffet சொன்ன, நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய பொன்மொழிகள்:
1) "ஒரு சிறந்த தொழில் துறையில் உள்ள தரமான நிறுவனம், கஷ்டத்தில் இருக்கும்  நேரம், அந்த பங்கை வாங்க சரியான நேரம்"(Buy the shares of a good company in a great industrial segment, when it is in trouble) - காரணம் - அந்த நிறுவனம் தரமான ஒன்று..இருக்கும் தொழில் துறை வளமான ஒன்று... ஆகவே, அந்த நிறுவனம் ஒரு சில ஆண்டுகளில் கஷ்டத்தில் இருந்து  மீண்டு வந்து சாதிக்க வாய்ப்புகள் மிக அதிகம். இப்படிப்பட்ட நிறுவனங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அவற்றின் விலை அதிகமாக சரிந்திருக்கும்...எனவே அந்த தருணம் பங்கை வாங்க மிக சரியான தருணம்.
  2) " எல்லோரும் பேராசைப் படும் போது கவனமாக இருக்க வேண்டும். எல்லோரும் பயப்படும் போது பேராசைப் பட வேண்டும்.(Be greedy when everyone is fearful, Be fearful when everyone is greedy)" காரணம் - எல்லோரும் பேராசைப் படும்போது, எதை பற்றியும் கவலைப்படாமல் அனைவரும் பங்குகளை வாங்குவார்கள். ஒரு பங்கை அதற்கு உரிய விலையை விட மிக அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஏனென்றால் பங்கின் விலை உயர்ந்து வருகிறது. அனைவருக்கும் தங்களின் முதலீட்டை குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கும் பேராசை. எனவே, அந்த குறிப்பிட்ட பங்கு உயர்ந்து கொண்டே போகும் என்ற  ஆசையில், அந்த நிறுவனத்தின் சந்தை  மதிப்பு, வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் பற்றி கவலைப்  படாமல்,காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் பேராசையில்  வாங்குவார்கள். அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு என்பதை  போல, ஒரு எதிர்மறை நிகழ்வு நடந்தால் (உதாரணம்: ஒரு மாநில தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியின் தோல்வி )பஞ்சாமிர்தமாக இனித்த பங்கு, பாகற்காய் போல கசக்க ஆரம்பித்து விடும். மாநில தேர்தல் தோல்வியால் மத்திய அரசு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மந்தப்படுத்தும் என்று பங்கு சந்தை வல்லுனர்கள் டிவி-யில் அறிவுரை கூறுவார்கள். அப்போது தான் பங்கிற்கு தகுதியான விலை என்ன என்று ஆராய்ச்சி நடக்கும். பங்கின் விலை ஊதி பெரிதாக்கப்பட்ட நிலவரம் தெரிய  வரும். எனவே மற்றவர்க்கு முன்பு தான் விற்றுவிட்டு வெளியேறி விட வேண்டும் என்று நிறைய பேர் பயத்தில் பங்குகளை வேகமாக விற்பார்கள்.பங்குகளின் விலை மட மட என்று சரிய நேரும். அந்த நேரத்தில் அப்படி தேவையற்ற பயத்தினால், விலை மள மளவென  சரியும் நேரம், தரமான பங்குகளை வாங்க சரியான நேரம் - ஏனென்றால், நிறுவனத்தின் மோசமான செயல்பாடு காரணமாக விலை சரியவில்லை, நிறுவனம் அல்லாத வேறு காரணங்களால் விலை இறங்கியது; இது ஒரு தற்போதைய (temporary ) நிகழ்வு. இதிலிருந்து பங்கின் விலை கண்டிப்பாக மீண்டு வரும், ஏனென்றால், அடுத்த காலாண்டில் நிறுவனத்தின் லாப கணக்கு எதிர்பார்த்த படியே அல்லது அதை விட அதிகமா இருக்கும் (முன்பு சொன்னதை போல, நிறுவனத்தின் செயல் பாட்டில் மாற்றம் இல்லை).

3) "நான் ஒரு பங்கை வைத்திருக்க விரும்பும் காலம் - நிரந்தரமாக (my favorite holding period of a stock is - FOREVER)"- குறுகிய கால ஏற்ற இரக்கத்தை பற்றி கவலைப்படாமல், நல்ல நிறுவனத்தின் பங்கை வாங்கி சில வருடங்கள் கழித்து விற்பதே புத்திசாலித்தனம் என்பது பங்கு சந்தையின் மூலம் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான Warren Buffet சொன்ன பொன்மொழி. நினைவில் கொள்ளுங்கள், அவர் தன்னுடைய 14-ம் வயதிலிருந்து பங்கு சந்தையில் முதலீடு செய்து பல பல வருடங்கள் கழித்து கோடீஸ்வரர் ஆனார். ஒரு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் பணம் சேர்க்க வேண்டும் என்ற பேராசை, பெரு நஷ்டத்தை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உண்டு.

 
முன்றைய பதிவில் சொன்னது போல, பங்கு சந்தையும் வீட்டு மனை வர்த்தகம் போல. இடம் வாங்க சரியான நேரம் - பத்திர பதிவு விலை ஏறும்போது. ஏனென்றால் பத்திர பதிவு விலை ஏறும்போது, அது ஒரு தயக்கத்தை இடம் வாங்குபவர்களிடம்  உருவாக்கும். அதனால், வீட்டு மனைகளுக்கான demand குறைந்து வீட்டு மனைகளின் விலை ஏற்றத்தில் ஒரு தடங்கல் ஏற்படும். அந்த நேரத்தில், பிற்காலத்தில் வளரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ள ஒரு ஊரில் அல்லது ஊரின் ஒரு பகுதியில் இடம் வாங்குபவர்கள், முதலீட்டை பல மடங்காக்க வாய்ப்புக்கள் அதிகம்.  ஏனென்றால், crowd mentality-ஐ தாண்டி நிற்பவர்கள்தான் ஜெயிப்பவர்கள் :).
 
 
 

Disclaimer

இந்த இணைய தளத்தில் எழுதுபவர் பங்கு சந்தை நிபுணரோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சியாளரோ அல்ல. பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் ஒரு சாதாரண முதலீட்டாளர். இந்த இணைய பக்கத்தின் நோக்கம் பங்கு சந்தை பற்றி கற்றதை பதிவு செய்வது மட்டுமே. பங்குகளில் முதலீடு செய்பவர்கள்,பங்குகளை வாங்குபவர்கள், வாங்க போகும் பங்குகள் பற்றிய விவரங்களை அவர்களின் சொந்த முயற்சியில் சேகரித்து வாங்குமாறு அறிவுருத்தபடுகிரார்கள். பங்கு வர்த்தகத்தில் ஏற்படும் லாப, நஷ்டங்களுக்கு முதலீடு செய்பவர்களே பொறுப்பு; இந்த இணைய தளத்திற்கோ அல்லது இதில் எழுதுபவர்க்கோ, இதனை படித்து முதலீடு செய்பவரின் லாப நட்டத்தில் எந்த பொறுப்பும் இல்லை. இந்த இணைய தளத்தினை உபயோகப் படுத்த கட்டணம் எதுவும் இல்லை. 
 
 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக