Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 7 ஜனவரி, 2019

சீத்தாப்பழ அல்வா, பான் கேக், ஐஸ்க்ரீம்... டேஸ்டியான சீத்தாப்பழ ரெசிப்பிகள்

Image result for சீத்தாப்பழ அல்வா



பழங்களைச் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு,ஜூஸ்,ஐஸ்க்ரீம் என வித்தியாசமாக செய்து கொடுத்து,அவர்களை சாப்பிடவைக்கலாம்.டிசம்பர் மாத சீசன் ப்ரூட்டான சீத்தாப்பழம் அதிக கலோரியும் இரும்புச்சத்தும் கொண்டது.விலை மலிவாகவும்,எளிதாகவும் கிடைக்கக்கூடியது..சீத்தாப்பழத்தில் வித்தியாசமாக அல்வா,பான் கேக்,  ஐஸ்க்ரீம் எனச் சுவையான ரெசிப்பிகளை இந்த வார விடுமுறையில் முயற்சிசெய்து சுவைத்துப்பாருங்கள்.

சீத்தாப்பழ சீஸ் கேக்
தேவையானவை
:    


  •  தோல், விதை நீக்கிய சீத்தாப்பழம் - ஒரு கப்
  •  பிஸ்கட் - 200 கிராம் (பொடிக்கவும்)
  •  உருக்கிய வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
  •  சர்க்கரை - முக்கால் கப்
  •  கெட்டித்தயிர் - ஒரு கப் (மூட்டைக் கட்டி, தண்ணீரை வடியவிடவும்)
  •  ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்
  •  ஜெலட்டின் - ஒரு டேபிள்ஸ்பூன்
  •  தண்ணீர் - 4 டேபிள்ஸ்பூன்

                                                                                             சீஸ் கேக்
செய்முறை:    
பிஸ்கட் தூளுடன் உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதை ஒரு ட்ரேயில்  சமமாகப் பரப்பி  ப்ரீசரில் வைக்கவும்.  சீத்தாப்பழத்துடன் சர்க்கரைச் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். பிறகு அதனுடன் கெட்டித்தயிர், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கலவை மிருதுவாகும் வரை நன்கு அடித்து எடுக்கவும். தண்ணீருடன் ஜெலட்டினைச் சேர்த்து டபுள் பாய்லிங் முறையில் உருக்கி வடிகட்டவும். இதனுடன் சீத்தாப்பழக் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். பிஸ்கட் தூள் வைத்த ட்ரேயை வெளியே எடுத்து, அதன்மீது சீத்தாப்பழக்  கலவையை ஊற்றவும். பிறகு ட்ரேயை மெல்லிய பாலித்தீன் கவரால் மூடி, இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். மறுநாள் காலை வெளியே எடுத்துத் துண்டுகளாக்கி ஜில்லென்று பரிமாறவும்.
குறிப்பு:
பெரிய பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர்   ஊற்றிக் கொதிக்கவிட்டு, அதற்குள் மற்றொரு சிறிய பாத்திரத்தில் ஜெலட்டின் கலந்த தண்ணீரை வைத்து உருக்குவதே டபுள் பாய்லிங் முறை.
சீத்தாப்பழ அல்வா
தேவையானவை


  •  சீத்தாப்பழம் - 3 (தோல், விதை நீக்கிக் கூழாக்கவும்)
  •  ரவை - ஒரு கப்
  •  நெய் - 2 டீஸ்பூன்
  •  சர்க்கரை - ஒன்றரை கப்
  •  காய்ச்சாத பால் - 3 கப்
  •  முந்திரி, உலர்திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
  •  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

                                                                                          அல்வா ரெசிப்பி
செய்முறை:  
வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, அதே வாணலியில் மீதமுள்ள நெய்யைவிட்டு ரவையைச் சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.  பாலுடன் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் சீத்தாப்பழக் கூழ், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு சிறிது சிறிதாக ரவையைச் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறவும். ரவை வெந்த பிறகு வறுத்த முந்திரி, உலர்திராட்சையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும்.
சீத்தாப்பழ பான் கேக்
தேவையானவை:

  •  மைதா மாவு - ஒரு கப்
  •  கோதுமை மாவு - அரை கப்
  •  நன்கு பழுத்த சீத்தாப்பழம் - ஒன்று  (தோல், விதை நீக்கிக் கூழாக்கவும்)
  •  நெய் - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
  •  காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப்
  •  பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
  •  சர்க்கரை - 2 டீஸ்பூன்
  •  தேன் - தேவையான அளவு
  •  உப்பு - கால் டீஸ்பூன்

                                                                                                பான் கேக்
செய்முறை:    
மைதா மாவுடன் கோதுமை மாவு, சீத்தாப்பழக் கூழ், பால், பேக்கிங் பவுடர், உப்பு, சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவைச் சற்றுக் கனமான தோசைகளாக ஊற்றிச் சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.  சூடாகவோ அல்லது குளிரவைத்தோ, மேலே சிறிதளவு தேன்விட்டுப் பரிமாறவும்.
சீத்தாப்பழ ஐஸ்க்ரீம்
தேவையானவை: 


  •  சீத்தாப்  பழக்கூழ் - முக்கால்  கப்
  •  காய்ச்சி ஆறவைத்த பால் - 2 கப்
  •  பால் பவுடர் - ஒரு கப்
  •  ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப்
  •  பொடித்த சர்க்கரை - 1/3 கப்
  •  வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

                                                                                               ஐஸ் க்ரீம்
செய்முறை:    
பாலுடன் பால் பவுடர், ஃப்ரெஷ் க்ரீம், சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் சீத்தாப்பழக் கூழ் சேர்த்துக் கலந்து ஆழமில்லாத பாத்திரத்தில் ஊற்றவும். இதை மூடி, பாதியளவு கெட்டியாகும் வரை ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து இரண்டாக பிரித்து பிளெண்டரால் நன்கு அடிக்கவும். இப்போது ஐஸ்க்ரீம் மிருதுவாகவும் க்ரீமியாகவும் மாறிவிடும். மீண்டும் இதை ஆழமில்லாத பாத்திரத்தில் ஊற்றி, மூடி ஃப்ரீசரில் வைக்கவும். நன்கு உறைந்த  பிறகு ஸ்கூப்பரால் எடுத்துப் பரிமாறவும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களுக்கு தோன்றிய கருத்துக்களை நீங்கள் தாராளமாக பதிவிடலாம்


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக