Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

வை ஜாக்கிங், புதிய அச்சுறுத்தல்

Image result for wi-jacking
வைஃபை இல்லாத வாழ்க்கையை இப்போது நினைத்துப் பார்க்க முடிவதில்லை. “எங்கெங்கு காணினும் வைஃபையடா” எனுமளவுக்கு விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள்,ஹோட்டல்கள், உணவு விடுதிகள் என எல்லா இடங்களிலும் வைஃபை வசதிகள் இருக்கின்றன. 

பொது இடங்களில் இருக்கும் வைஃபைகள் பாதுகாப்பானவை அல்ல என்பது நாம் அறிந்ததே. அதனால் தான் பொது இடங்களிலுள்ள வைஃபையைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கைகள் நமக்கு தொடர்ந்து விடுக்கப்படுகின்றன. அப்படியே பயன்படுத்தினாலும், அதைக்கொண்டு முக்கியமான வங்கிப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை நடத்தக் கூடாது. 

பொது இடங்களிலுள்ள வைஃபையை எக்காரணம் கொண்டும் ‘ஆட்டோ கனெக்ட்’ மோடில் சேமிக்கக் கூடாது. அது போல பொது இட வைஃபைக்களைப் பயன்படுத்திய பின் நமது பிரவுசர்களில் இருக்கின்ற குக்கிகளையும், ஹிஸ்டரியையும் முழுதாக அழித்து விடவேண்டும். 

பொது இடங்களில் இருக்கின்ற வைஃபைகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது எனும் புரிதல் இப்போது பெரும்பாலானவர்களுக்கு உண்டு. எனவே அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து விடுகின்றனர். 

ஆனால் வீட்டில் வந்து வைஃபையை இணைக்கும் போது, ‘ஆஹா இது நமக்கே நமக்கான வைஃபை. இதில் எவனும் நுழைய முடியாது’ எனும் இறுமாப்புடன் வேலையைத் தொடங்குவோம். 
வீட்டில் நாம் நுழையும் முன் நம்முடைய போன்கள் ஆட்டோமெடிக்காக நம்முடைய வைஃபையுடன் இணைந்து விடுகின்றன‌. லேப்டாப், டேப்லெட் என எல்லாமே எப்போதும் வைஃபையுடன் இணைந்து தான் இருக்கின்றன. 

‘இதுவும் பாதுகாப்பு இல்லையப்பா’ என நம்முடைய நம்முடைய நம்பிக்கையின் உச்சந்தலையில் சுத்தியல் கொண்டு அடித்துச் சொல்கிற விஷயம் தான் இந்த வை ஜாக்கிங். அதாவது நாம் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பாய் வைத்திருக்கின்ற நமது வைஃபை கூட மிக எளிதான தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதே வை ஜாக்கிங் சொல்கிற செய்தி. 

நமது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்ற நபர்கள் நினைத்தால் நமது வீட்டிலுள்ள வைஃபைக்குள் நுழைய முடியும். நமது வீட்டு வைஃபையை அவர்கள் விருப்பம் போல  பயன்படுத்த முடியும் என்பது தான் ஆரம்ப அதிர்ச்சி. 
“எனக்கு தான் ஆயிரம் ஜிபி லிமிட் இருக்கே, அடுத்த வீட்டுக்காரர் கொஞ்சம் எடுத்துட்டு போகட்டும்” என சும்மா இருந்து விட முடியாது.  வீட்டுக்குள் நுழையும் திருடன் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு போவதில்லை. கையில் கிடைப்பதையெல்லாம் சுருட்டி எடுத்துக் கொண்டு தான் போவான். அதே போல, நமது நெட்வர்க்குக்குள் ஒருவர் நுழைந்து விட்டால் நமது கணினி, மொபைல் என எந்த கருவியில் இருக்கின்ற எந்தத் தகவல்களையும் திருடி விடுகின்ற வாய்ப்பு உண்டு.

இப்போதெல்லாம் நம்முடைய  பரம ரகசிய விஷயங்கள் கூட மொபைலிலோ, கணினியிலோ தான் ஓய்வெடுக்கும். நமது நெட்வர்க்கிற்குள் நுழைகின்ற நபரிடம் நமது வங்கிக் கணக்கின் விவரங்கள், பாஸ்வேர்ட் போன்றவை கிடைத்தால் நமது வங்கியை துடைத்து சுத்தம் செய்து விடுவார்கள். அதே போல தனிப்பட்ட விஷயங்களைத் திருடிக் கொண்டால் அதன் மூலம் நமக்கு தேவையற்ற மன உளைச்சலோ, பெரும் நஷ்டமோ  உருவாக்கலாம். 

இது எப்படி நடக்கிறது ? நாம் வீடுகளில் பயன்படுத்துகின்ற பிரவுசர்களில் ‘பாஸ்வேர்ட்’ ஆட்டோ சேவ் ஆக இருக்கும். நமது மொபைலில் ஜிமெயில், யூடூப் போன்ற பல தளங்களில் நமது பயனர் ஆட்டோமெடிக்காக கணெக்ட் ஆகிவிடுவதைக் கவனித்திருப்பீர்கள். 

இந்த பயனர் எண், பாஸ்வேர்ட் இவையெல்லாம் பிரவுசரில் இருக்கும். இதற்கும் நமது  வீடுகளில் இருக்கும் மோடத்துக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் அன்.என்கிரிப்டர் ஹைச்.டி.டி.பி அதாவது ‘குறியீடுகளாய் மாற்றப்படாத நேரடியான தகவல் பரிமாற்றமாய்’ இருக்கும்.  

நமது மோடத்திற்கு நமது மொபைலையோ கணினியையோ இணைக்கும் ‘இன்டர்நெட் பாஸ்வேர்ட்’ தகவல்கள் கூட இப்படித் தான் இருக்கும். இந்த பிரவுசர் ‘ஆட்டோசேவ்’  மற்றும் ‘அன்.என்கிரிப்டட்’ தகவல் பரிமாற்றம் இரண்டும் சேர்ந்து தான் நமது வைஃபை இணைப்பை வலுவிழக்க வைக்கின்றன. 

இதைப் பயன்படுத்தி வெளியிலிருக்கும் ஒருவர் நமது கணினியில் ஒரு பிரவுசரை லோட் செய்வார்கள். அது நமது இணைய பாஸ்வேர்ட் தகவல்களை பிறருக்கு அனுப்பி வைக்கும். மிக எளிய வகையில் இந்த ஹேக்கிங் நடக்கும். மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.  

ஸ்யூயர் கிளவுட் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான எலியட் தாம்சன் என்பவர் இந்த அச்சுறுத்தலை முதன் முதலாய் கண்டுபிடித்துச் சொன்னது கடந்த மார்ச் மாதம். பல மாதங்களுக்குப் பிறகு இப்போது அந்த வைஜாக்கிங்கின் வீரியம் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது. 

சில நிறுவனங்கள் தங்களுடைய பிரவுசர்களிலுள்ள ஆட்டோ சேவ் ஆப்ஷனை விலக்க முடிவு செய்திருக்கின்றன.
இந்த வைஜாக்கிங் நடக்க வேண்டுமெனில் சில விஷயங்கள் நடந்திருக்க வேண்டும். அவற்றை அறிந்து கொள்வது நாம் பாதுகாப்பாக இருக்க உதவும். 

முதலில் நமது வைஃபை ஆன் நிலையில் இருக்கும் போது தான் இந்த தாக்குதல் நடக்கும். இரண்டாவது, நாம் முன்பு எப்போதாவது வேறு ஒரு பொது வைஃபையில் இணைந்திருக்க வேண்டும். அது ஆட்டோ ரிகனக்ட் ஆஃப்ஷனில் இருக்க வேண்டும். மூன்றாவது குரோம், ஓப்பேரா போன்ற பிரவுசர்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். நான்காவது, நமது போனில் வைஃபை தானாக இணையும் விதத்தில் இருக்க வேண்டும். 

இவை எல்லாமே சர்வ சாதாரணமாய் இருக்கக் கூடிய விஷயங்கள். எனவே தான் இந்த அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியமாகிறது. 
சரி, இதிலிருந்து தப்பிப்பது எப்படி ?
1. இன்காக்னிடோ மோட் தெரியுமா ? பிரவுசரில் உள்ள ஒரு ஆப்ஷன் இது. இதில் நுழைந்தால் நமது பாஸ்வேர்ட் போன்ற தகவல்கள் சேமிக்கப்படாது. அதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. இதை பிரைவட் பிரவுசிங் என்றும் சொல்வார்கள்.
2. பழைய வெர்ஷன் பிரவுசர்களையெல்லாம் மாற்றி புதியவற்றை இன்ஸ்டால் செய்யுங்கள். 
3. உங்களுடைய எல்லா பிரவுசர்களிலுமிருந்தும் ஹிஸ்டரி, குக்கீஸ் போன்றவற்றை அழியுங்கள்.
4. நெட்வர்க் ஆட்டோகனெக்ட் ஆஃஷனை அழித்து விடுங்கள். 
5. பொது இட வைஃபைகளைத் தவிருங்கள். 
6. பர்சனல் ஃபயர் வால் எனப்படும் பாதுகாப்பு வளையத்தை உங்களுடைய வீட்டு நெட்வர்க்கிலும் இணையுங்கள். 
7. வைஃபை மோடத்தை சுவர் அருகிலோ, சன்னல் அருகிலோ வைக்காமல் வீட்டிற்கு உள்ளே வையுங்கள். வெளியிட இணைப்பு அச்சுறுத்தலை அது கொஞ்சம் குறைக்கும். 
8. ரொம்ப பாதுகாப்பு அவசியமெனில் விபிஎன் பயன்படுத்தலாம். நெட்வர்க்கை அது அதிக பாதுகாப்பு உடையதாக்கும்.
9. உங்கள் வைஃபை ரவுட்டரை பரிசோதியுங்கள். செக்யூர்ட், என்கிரிப்டட் நிலையில் அது இல்லையேல் மாற்றுங்கள்.
10. இவ்வளவையும் செய்தபின் உங்களுடைய நெட்வர்க் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள். ஏற்கனவே உங்கள் வைஃபையை யாரேனும் கவர்ந்திருந்தால் பாஸ்வேர்ட் மாற்றுவது ஒன்றே வழி. 

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக