Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

பதினொன்றாவது சர்க்கம் - உணவுக்கூடத்தில் தேடல்

Image result for mandodari hanumanமண்டோதரியைச் சீதை என்று நினைத்ததைத் தவறென்று உடனேயே உணர்ந்து கொண்ட ஹனுமான் இவ்வாறு சிந்தித்தார்:" ராமனைப் பிரிந்த நிலையில் சீதாப் பிராட்டி உண்ண மாட்டார், உறங்க மாட்டார், ஆபரணங்களை அணிய மாட்டார், ஏன் தண்ணீரைக் கூடத் தொட  மாட்டார். எந்த ஆண் அருகிலும் - அவன் தேவேந்திரனாகவே இருந்தாலும் - போக மாட்டார். தேவர்களிடையே கூட ராமனுக்கு இணையானவர் எவரும் இல்லை. அதனால் நான் பார்த்த பெண்மணி வேறு யாராவதாகத்தான்  இருக்க வேண்டும்"

இந்த முடிவுக்கு வந்த பின் ஹனுமான் உணவுக் கூடத்தில் சீதையைத் தேட ஆரம்பித்தார்.

காமக் கேளிக்கைகளினாலும், ஆடல் பாடலினாலும் களைப்படைந்த பல பெண்களை ஹனுமான் அங்கே பார்த்தார். இன்னும் சிலர் மதுவுண்ட மயக்கத்தில் விழுந்து கிடந்தனர். சிலர் மிருதங்கங்கள் மீது சாய்ந்தபடியும், சிலர் முரசுகள் மற்றும் சிறு மர இருக்கைகள் மீது சாய்ந்தபடியும், இன்னும் சிலர்  மென்மையான படுக்கைகள் மீது படுத்தும் உறங்கிக் கொண்டிருந்தனர்.


அழகை அற்புதமாக விவரிக்கும் கலைத்திறன்  கொண்ட பெண்கள், பாடல்களின் பொருளைச் சிறப்பாக விளக்கும் திறன் பெற்ற பெண்கள், காலத்துக்கும், இடத்துக்கும் தக்கவாறு பேசும் திறமை பெற்ற பெண்கள் ஆகியோர் அடங்கிய நூற்றுக் கணக்கான பெண்களிடையே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் ராவணன்.  அந்தப் பெண்களுக்கிடையே ராவணன் படுத்திருந்த காட்சி பல ஜாதிப் பசுக்களிடயே ஒரு காளை படுத்திருப்பது போல் இருந்தது. பல பெண்களால் அவன் சூழப்பட்டிருந்த காட்சி பெண் யானைக் கூட்டத்துக்கு நடுவே இருக்கும் ஒரு கொம்பன் யானையைப் போலவும் இருந்தது.


 மனிதர்கள்  உண்ண விழையும் எல்லா உணவுப் பண்டங்களும் அங்கே இருந்தன. மான், எருமை, காட்டுப் பன்றி ஆகியவற்றின் மாமிசங்கள் அங்கே தனித் தனியே வைக்கப்பட்டிருந்தன. பாதி உண்ணப்பட்ட மயில் மற்றும் கோழி இறைச்சிகள் நிறைந்த தங்கப் பாத்திரங்களையும் ஹனுமான் அங்கே பார்த்தார். பன்றிகள் மற்றும் பருந்துகளின் மாமிசம் தயிரில் சமைக்கப்பட்டு, கடுக்காய், கார உப்பு ஆகியவற்றால் பதப்படுத்தப்பட்டபன்றிகள் மற்றும் பருந்துகளின் மாமிசமும், முள்ளம்பன்றி, மான், மயில் போன்றவற்றின் இறைச்சியும்  உண்ணத் தயாராக வைக்கப்பட்டிருந்தன.

பலவகைப் புறாக்கள், எருமைகள் ஆகியவற்றின் இறைச்சி, மீன்கள் ஆகியவற்றுடன் பலவகைக் காய்களால் சமைக்கப்பட்ட உணவுகள், பானங்கள் மற்ற தின்பண்டங்களும் அங்கு நிறைந்திருந்தன.. புளிப்பு, உப்பு சுவை மிகுந்த உணவுகள், திராட்சை, ஆரஞ்சு, மாதுளை ஆகிய பழங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழச்சாறுக் கலவைகள், பழச்சாறுடன், பாலும், தேனும் கலந்த தயாரிப்புகள் ஆகியவும் அங்கு இருந்தன.


அந்த அறையில் பெண்களின் உடல்களீருந்து நழுவி விழுந்த காப்புகள், வளையல்கள், சங்கிலிகள் போன்றவை பரவிக் கிடந்தன. பழங்கள் நிறைந்த  பல தட்டுக்களும், பூங்கொத்துக்கள் நிறைந்த பூச்சாடிகளும் அந்த இடத்துக்கு ஒரு அழகிய தோற்றத்தை அளித்தன. விளக்குகள் ஏதும் எரியாத நிலையிலும், அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் சாய்வு நாற்காலிகளிலிருந்து வெளிப்பட்ட ஒளியினால் அந்த உணவுக்கூடம்  ஒளி  பெற்று விளங்கியது.


சாதாரண மற்றும் போதையூட்டும் பானங்கள், இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள், தேன், பழ ரசங்கள், பூக்களின் சாறுகள், வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தி, திறமையான சமையற்காரர்களால் சமைக்கப்பட்ட இறைச்சி வகைகள் ஆகிய பல்வகை உணவு வகைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இடங்களில்  வைக்கப்பட்டிருந்தது அந்த அறைக்கு ஒரு அலாதியான தோற்றத்தை அளித்தது.  தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்த கோப்பைகள் மதுவகைகளால் நிரம்பி இருந்தன. தங்கம், படிகம் ஆகியவற்றால் செய்யப்பட பூச்சாடிகளும், தங்கத்தினால் ஆன கை கழுவும் தொட்டிகளும் அங்கே காணப்பட்டன. காலியான மற்றும் பாதி நிரம்பிய  கோப்பைகளையும் ஹனுமான் அங்கே பார்த்தார்.


பல இடங்களிலும் காணப்பட்ட தின்பண்டங்கள், பானங்கள், மீதம் வைக்கப்பட்ட அரிசி உணவுகள் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டே ஹனுமான் நடந்தார். சில இடங்களில் உடைந்த பாத்திரங்களையும், கீழே கவிழ்ந்திருந்த தண்ணிர் கூஜாக்களையும், வேறு சில இடங்களில் பழக் குவியல்களையும், அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலர்க் கொத்துக்களையும் அவர் பார்த்தார்.

மென்மையாக அமைக்கப்பட்டிருந்த  பல படுக்கைகள் காலியாக இருந்தன. சிலவற்றில் சில பெண்கள் ஒருவரை ஒருவர் அணைத்தபடி படுத்திருந்தனர். உறங்கிகொண்டிருந்த பெண்களில் சிலர் தூக்கக் கலக்கத்தில் மற்ற பெண்களின் மேலாடைகளை உருவி அவற்றைத் தங்கள் மீது போர்த்தியபடி படுத்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த  ஆடைகளையும்,மாலைகளையும் அவர்கள் மூச்சுக் காற்று தென்றலைப் போல் அசைத்துக்கொண்டிருந்தது.


அங்கே வீசிக்கொண்டிருந்த மென்மையான காற்று சந்தனக்கலவையின் மணத்தையும், பல்வகை பானங்களின் மணத்தையும், மலர்மாலைகளின் நறுமணத்தையும் சுமந்து கொண்டிருந்தது. புஷ்பக விமானத்தின் மீது ஊற்றப்பட்டிருந்த வாசனைத் திரவத்தின் மணமும், பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட சந்தனம் மற்றும் ஊதுவத்தியின் மணமும் அந்த அறை முழுவதும் நிறைந்திருந்தன. அந்த இல்லத்தில் இருந்த பெண்களில் சிலர் சிவப்பு நிறத்தினர், சிலர் கருத்த நிறத்தினர், சிலர் இடைப்பட்ட நிறத்தினர், இன்னும் சிலர் தங்க நிறத்தினர். துக்கக் கலக்கத்தினாலும், காமக் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தைர்ந்ததாலும் அவர்கள் வாடிய தாமரை மலர்களைப் போல் சோர்ந்து காணப்பட்டனர்.


அந்தப்புரம் முழுவதும் தேடிய பின்பும் ஹனுனானால் சீதையைக் காண முடியவில்லை. அந்தப் பெண்களை நெருக்கமாகப் பார்த்ததால் தாம்  ஒழுக்க நெறியிலிருந்து வழுவி விட்டோமோ என்று அவர் மனம் வருந்தினார். "எதிரி அரசனின் மனைவிகளாக இருந்த போதிலும், இந்தப் பெண்களை அவர்கள் உறங்கும்போது பார்த்தது  பாவச் செயல்தான். மற்றவர்களின் மனைவிமார்களை இவ்வாறு பார்த்தது சமுதாயத்தால் ஏற்கப்பட்ட ஒழுக்க நெறியை மீறிய செயல்தான்,  ஆயினும், உயர்ந்தவரான ராமபிரானின் மனைவியைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தினால்தான் இப்படிச் செய்தேன்  என்ற ஆறு தல் எனக்கு : இருக்கிறது."


ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவரான ஹனுமான், தன் முன் இருக்கும் கடமையைப் பற்றிய ஒரு உறுதியான முடிவுக்கு வருவதற்காக ஒரு புதிய வழிமுறையைப பற்றிச் சிந்தித்தார்.


"அனேகமாக ராவணனின் அந்தப்புரத்தில் இருக்கும் எல்லாப் பெண்களையுமே நான் பார்த்து விட்டேன். ஆயினும் என் மனதில் எந்த விதத் தவறான எண்ணமும் எழவில்லை. புலன்களை நல்வழியிலோ தீயவழியிலோ செலுத்துவது மனம்தான்.  என் மனதில் எந்த ஒரு சஞ்சலமும் ஏற்படவில்லை. ஒரு  பெண்ணைத் தேட வேண்டுமென்றால் பெண்கள் மத்தியில்தான், பெண்கள் எங்கே இருப்பார்களோ அங்கேதான் தேட வேண்டும். வேறு இடங்களில் அவர்கள் இருக்க மாட்டார்கள். மான் கூட்டத்தில் போய் ஒரு பெண்ணைத் தேட முடியாது. அதனால்தான் ராவணனின் அந்தப்புரத்தில் நான் சீதையைத் தேடினேன். ஆயினும் அந்தப்புரம் முழுவதும் தேடியும் என்னால் சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை."


தேவ லோகம், கந்தர்வ லோகம் மற்றும் நாகலோகத்தைச் சேர்ந்த பெண்களை அங்கே ஹனுமான் பார்த்தார். ஆனால் சீதையை அவர் அங்கே காணவில்லை. பல  உயர் குலப் பெண்களைப் பார்த்தும் சீதையைப்   பார்க்க முடியவில்லையே என்று கவலைப்பட்ட ஹனுமான் அந்த உணவுக் கூடத்திலிருந்து வெளியே வந்து தனது தீவிரத் தேடலைத் தொடர்ந்தார்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை           உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக