Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 28 பிப்ரவரி, 2019

பன்னிரண்டாவது சர்க்கம் - ஹனுமானின் மனக் கவலை

Image result for ஹனுமானின் மனக் கவலை

கொடிகள் நிறைந்த தோட்டங்கள், கலையரங்குகள், ஓய்வறைகள் என்று ராவணனின் அந்தப்புரத்தில் இருந்த பல இடங்களில் தேடியும் ஹனுமானால் சீதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ராமபிரானின் மனைவியைத்  தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் ஹனுமான் இவ்வாறு சிந்தித்தார்:

"என்னால் சீதையை எங்கும் காண முடியவில்லையே! ஒருவேளை அவர் இறந்து போயிருப்பாரோ? தர்மத்தின் வழியிலிருந்து வழுவாமல் தன் கணவருக்கு விஸ்வாசமாக இருந்ததால், சிந்தையிலும் செயலிலும் கொடியவனான ராவணன்   சீதையைக் கொன்றிருப்பானோ? அல்லது ராவணனின் அரண்மனையில் இருந்த பெண்களின் குரூரத் தோற்றத்தைக் கண்டு பயந்த சீதை  அந்த பயத்தினாலேயே இறந்திருப்பாரோ?

" மற்ற வானரங்களுடன் நீண்ட காலம் செலவழித்து விட்டு இப்போது சீதையின் இருப்பிடத்தையும் கண்டு பிடிக்காமல் என்னால் எப்படி சுக்ரீவனைப்  பார்க்க முடியும்? தவறு செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கும் இயல்புடையவன் ஆயிற்றே சுக்ரீவன்?

"அந்தப்புரம் முழுவதும் தேடியதில் ராவணனின் பெண் துணைகள் அனைவரையும் பார்த்து விட்டேன். ஆனால் கற்புக்கரசி சீதையை என்னால் காண முடியவில்லை. என் முயற்சி எல்லாம் வியர்த்தம் ஆகி விட்டது. நான் திரும்பிச் சென்றதும் என் நண்பர்கள் 'வீரனே, நீ அங்கு போய் என்ன செய்தாய்? அதை விவரமாகச் சொல். உனக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்ன ஆயிற்று?'என்றெல்லாம் கேட்பார்கள். சீதையைக் கண்டு பிடிக்க முடியாதபோது நான் அவர்களுக்கு  என்ன பதில் சொல்ல முடியும்?

"நான் திரும்பி வருவதற்கு மிகவும் தாமதம் ஆனால் அவர்கள் நான் இறந்து விட்டதாக நினைத்து விடக் கூடும். நான் திரும்பிச் சென்றதும், அங்கதன், ஜாம்பவான் போன்றோர்  என்னைச் சூழ்ந்து கொண்டு என்னைக்  கேலி பேசத் தொடங்கி விடுவார்கள். ஆனால் விரக்தியின் மூலம்   செல்வத்தையோ, நன்மையையோ அடைய முடியாது.  விரக்தியிளிருந்து மீள்வதுதான் மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும். ஒரு பொழுதும் விரக்தி அடையாதவனால்தான் எந்த வேலையிலும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் ஈடுபட முடியும். விரக்தியால் பாதிக்கப்படாத மனநிலையில் செய்யப்படும் செயல்தான் வெற்றியைத் தேடித்தரும். எனவே விரக்தியான மனநிலைக்கு ஆளாகாமல் உற்சாகத்துடன் நான் இன்னொரு முறை முயன்று பார்க்கப் போகிறேன். இதுவரை நான் தேடாத இடங்களில் தீவிரமாகத் தேடப் போகிறேன்."

இவ்வாறு உறுதி எடுத்து கொண்டு அவர் தன் தேடலைத் தொடர்ந்தார்.

இதுவரை அவர் உணவுக்கூடங்கள், உயர் வசதி கொண்ட மாளிகைகள், கலைக்கூடங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகிய இடங்களில் தேடி விட்டார். அடுத்தபடியாக அவர் தோட்டங்களுக்குச் செல்லும் பாதைகள், நகரின் எல்லைப்புறப் பகுதியில் உள்ள கட்டிடங்கள், பாதாள அறைகள், நினைவு மண்டபங்கள் ஆகிய இடங்களில் தன தேடலைத் தொடர்ந்தார்.

அரண்மனைக்கு உள்ளும் வெளியும் இருந்த எல்லா இடங்களிலும் தேடினார். பல கட்டிடங்களுக்குள் நுழைந்து வெளி வந்தார். சில இடங்களில் உள் புகுந்து தேடினார். சில கதவுகளைத் திறந்து பார்த்தார். திறக்க முடியாத கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே போனார்.  எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்தார்.

ராவணனின் அந்தப்புரத்துக்குள் அவர் தேடாத இடம் ஒரு உள்ளங்கை அளவு கூட இல்லை.  சுவர்களுக்கு இடையே இருந்த குறுகிய சந்துகள், நினைவு கோபுரங்கள், கிணறுகள், குளங்கள் என்று எல்லா இடங்களிலும் தேடினார். அவர் தேடிய இடங்களில் எல்லாம் கோரமான தோற்றம் கொண்ட பல அரக்கிகளைக் கண்டார்; ஆனால் சீதை மட்டும் காணப்படவில்லை.  நிகரில்லாத அழகு படைத்த வித்யாதரப் பெண்களை அவர் கண்டார்; ஆனால் சீதையைக் காணவில்லை. ராவணனால் பலவந்தமாக அழைத்து வரப்பட்ட முழு நிலவு போல் முகம் படைத்த நாகலோகப் பெண்களை அவர் பார்த்தார்; ஆனால் ராமரின் பத்தினியான சீதையைப் பார்க்கவில்லை.

இந்தப் பெண்களையெல்லாம் பார்த்த ஹனுமான் சீதையைக் காணவில்லையே என்று மீண்டும் வருத்தத்தில் ஆழ்ந்தார். பல வானரர்களின் முயற்சியும், தான் கடலைத் தாண்டி வந்ததும் பயனளிக்காமல் போய் விட்டதே என்று வருந்திய  வாயுபுத்திரரான ஹனுமான்  மனம் உடைந்தவராக தன இருந்த உயரமான கட்டிடத்திலிருந்து கீழே இறங்கினார்..


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை           உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக