நடுகற்கள்
என்பவை அந்தந்த கால மரபுகள், அரசர்களின் ஆட்சி, மொழி, கலாச்சாரம், போர் மற்றும்
போர் முறைகள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் குறித்த வரலாற்றுத் தகவல்களைக்
கொண்டுள்ளது. இதன் வாயிலாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் சங்க காலம்
பற்றிய அழிக்க முடியாத ஆதாரமிக்க ஆவணங்களின் களஞ்சியமாக நடுகற்கள் விளங்கி
வருகிறது.
நாடு, இனம் காத்து மாண்ட போர் வீரர்களை
தெய்வமாக வழிபடும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்துள்ளது. போர் வீரர்களின் வீரம்
, தியாகத்தைப் போற்றும்படி அவர்களது நினைவாக நடுகற்கள் நடப் பட்டு வழிபாடு
நடத்தப்பட்டு வந்துள்ளது. நடுகற்களில் வீரக்கல், சதிக்கல், பட்டவன் கல்,
புலிகுத்திக்கல், நவ கண்டம், ஆயுத கல் எனப் பலவகை உண்டு.
ஏறு தழுவுதல் (மாடுகளின் துள்ளலை அடக்கி அவற்றை
வேலைகளுக்குப் பயன்படுத்துவதை ஒரு விளையாட்டாக்கிய செயல்தான் ஏறு தழுவுதல்).
நடந்தமையைக் காட்டும் பருண்மைச் சான்றுகளாக நடுகற்கள் விளங்குகின்றன.
பண்டைய காலத்தில் அண்டை நாடுகளுடன் போரிட்டு
வெற்றி பெறும் வீரர்கள் அங்குள்ள ஆடு, மாடுகளைக் கவர்ந்து வருவார்கள். இவ்வாறு
கவரும் ஆடு, மாடுகளைக் காட்டின் வழியாகக் கொண்டு வரும் போது எதிரே புலி, சிங்கம்,
சிறுத்தை போன்ற விலங்குகள் வழிமறிக்கும். அவற்றுடன் சண்டையிடும் போது உயிரிழக்கும்
வீரனுக்கு அந்த இடத்திலேயே நடுகல் நட்டு வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்துள்ளது.
இதை ‘புலிக்குத்திக்கல்Õ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடு கின்றனர்.

அதே போல்
பன்றி குத்திக்கல், குதிரைக் குத்திக்கல், யானைப் போர் நடுகல் எனப் பல வகைகள்
உண்டு. அவற்றுள் ஒன்று ‘எருது பொருதார் கல்Õ என்பதாகும். இதில் காளையின்
கொம்புகளைத் தன் கைகளால் பிடித்துப் போரிடும் வீரனின் புடைப்புச் சிற்பம்
செதுக்கப்பட்டுள்ளது.
சதிக்கல் எனப்படுவது கணவன் இறந்தவுடன் அந்த
சிதையிலேயே உடன்கட்டை ஏறும் பெண்ணிற்கு வைப்பதாகும். நவகண்டம் என்பது தனது
நாட்டு அரசன் போரில் வெற்றி பெற்றால் தன் உயிரையே பலியிடுவதாக பொதுமக்கள்
வேண்டிக்கொள்வார்கள்.
அவ்வாறு அரசன் வெற்றி பெற்றவுடன் வேண்டுதலை
நிறைவேற்ற உடம்பில் கை, கால் என 9 இடங்களில் வெட்டிக்கொண்டு, முடிவில் கழுத்தில்
கத்தியால் வெட்டி தங்களது உயிரை பலி கொடுப்பார்கள்.
பழந்தமிழர் வழிபாட்டு முறைகளுள் வீரவணக்கமும்
ஒன்று. இனக்குழு வேடர் மரபிலிருந்து தோன்றி வளர்ந்து வீரமரபிற்குரிய வழிபாடாக
மாற்றமடைந்தது நடுகல் வழிபாடு. ‘நடுகல்" ((Hero-Stone)) என்பது பெருங்
கற்கல்லறைகள் (Megaliths) என்ற சடங்கு ரீதியான நினைவுச் சின்னங்களில் அடங்கும்;
அது சமய ரீதியானது என்று குப்தா குறிப்பிட்டுள்ளார்.
சங்க கால நடுகல் என்பது வெகு புராதனமாக
‘‘Menhir’’ எனும் வடிவத்தின் நாகரிக வடிவமாகத் தெரிகிறது. வேட்டை, ஆநிரை கவர்தல்,
மீட்டல் ஆகிய நிகழ்வுகளில் நடந்த போராட்டங்களில் ‘வீரமரணமடைந்த வீரர்கள்/ மற்றவர்களுக்குக்
காடுகள், மரங்கள் ஆகிய இடங்களிலிருந்த சிறு பாதைகள், வண்டிப் பாதைகள் (உமணர் சென்ற
பாதை) ஆகியவற்றின் ஓரங்களில் நடுகற்களை நாட்டி, அவற்றில் இறந்த வீரர்களின்
பெயர்களையும், அவர்களது வீர பிரதாபங்களையும் (‘பீடு) உளியால் செதுக்கி வைத்து
அவற்றை வழிபட்டது சங்ககால வழக்கமாகியிருந்தது. இவ்வழக்கம், அரசர்கள் புரிந்த
போர்களில் மாண்ட மறவர்களுக்கும் ஏற்படுத்தப் பட்டது. (நாயக்கர்கள் காலத்தில்
வேட்டையில் உயிர்விட்ட நாய்க்கும் கூட நடுகல் எழுப்பப்பட்டது).
வீரனின் நினைவுச் சின்னம், வீர வழிபாட்டுச்
சின்னமாக ஆகியது. துடியன், பாணன், பறையன், கடம்பன் முதலிய நான்கு தொல்குடிகள்
வழிபடும் தெய்வமாக நடுகல் கூறப்பட்டது.வரகு, தினை, கொள், அவரை முதலிய தானியங்கள்
விளைந்த வன்புலக் காட்டுப் பகுதியில் வாழ்ந்த குடிகள் நடுகற்களை வழிபட்டன.
தொல் குடிகள் மட்டுமல்லாது, மறக்குடிகள்
வாழ்ந்த சீறூர் மக்களும், மூதின் மகளிரும் வழிபட்டதைப் பாடல் ஒன்று பதிவு
செய்துள்ளது.
‘களிறுபொரக் கலங்கு கழல்முள் வேலி
அரிதுஉண் கூவல் (குழி, பள்ளம்) அம்குடிச்
சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒள்நுதல் அரிவை (மறக்குடி
மகள்)
‘நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது
விருந்து எதிர் பெறுகதில் யானேக் என்ஐயும்
. . . . . . . . வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக ‘எனவே’ ( புறம் 306)
மூதின் மகள் , தன் வீட்டுக்கு விருந்தினர்
வரவேண்டும். தன் வீட்டுத் தலைவன் நாடுதரு பகை எய்தி போருக்குச் செல்ல வேண்டும்
என்று வரம் கேட்டாள்! ஆநிரைகளைக் கவர்ந்து வந்து நடுகல்லான விடலை (புற.261).
போரில் வில் உமிழ்ந்த கடுங்கணை மூழ்க இறந்து நடுக்கல்லான வீரன் (புற.263)
பற்றியதாகவே நடுகற்கள் எழுந்தன.
பெரும்பாலும் நடுகற்கள், ‘சுரன் இடை விலங்கிய
மரம் ஓங்கு இயவு...’ (289:3-4) களில் அவ்வழியே செல்வோர் கண்டு, பெயரும் பீடும்
அறிந்து வழிபடுவதற்காக நிறுத்தப்பட்டன. சில நடுகற்கள், அவ்வீரனைப் புதைத்து வட்ட
வடிவமாகக் கற்களை அடுக்கி மூடிய ‘பதுக்கை’யில் எழுப்பப்பட்டன.
விடியற்காலம் சில்குடிச் சீறூர் பக்கமுள்ள
நடுகல்லை நல் நீராட்டி, நெற்விளக்கு கொளுத்தி, அதிலிருந்து மேகம் போலப் புகை
கிளம்பி ஊர்த் தெருவில் கமழும். இதனை ‘நாட்பலி’ என்றனர் (புற 329). நடுகல் வழிபாடு
நெல் உகுத்து வழிபடும் வழிபாடன்று; நெல் விளைந்த பகுதிகளில் இவ்வழிபாடு இல்லை
எனலாம். காட்டுப் பகுதிச் சிற்றூர்களில் புராதனமான வேட்டை, ஆநிரை கவர்தல்
முதலான ‘களவு’த் தொழில்களைச் செய்து வாழ்ந்த - குழு நாகரிகம் மறையாத
மக்களுடைய வழிபாடாக இருந்தது. ஏனைய சூர், அணங்கு, முருகு, அரமகளிர், மரம் உறை
கடவுள்கள் போல நடுகல் வழிபாடு இல்லை; இது, உண்மையில் வாழ்ந்து ஆள்வினையில் ஆயுதம்
பாய்ந்து இறந்த விடலை, மறவன், வேடன் ஆகியோரின் நினைவாக நடைபெற்ற வழிபாடாக இருந்தது.
(பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்
சமூக உருவாக்கமும் - ராஜ் கௌதமன் ப.182 - 183)
‘ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிரேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்ததெனக்
கல்லே பரவி னல்லது
நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவேÕ
(புறம் 335 : 9 -12)
என்று பாடுகிறார் மாங்குடிகிழார். பகைவர்
முன்னே அஞ்சாது நின்று அவர் மேற்செலவைக் குறுக்கிட்டுத் தடுத்து யானைகளைக் கொன்று
வீழ்ந்துபட்ட வீரரது நடுகல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுவதல்லது, நெல்லைச் சொரிந்து
வழிபடும் தெய்வம் வேறொன்று மில்லை என்பது பாடலின் பொருள். இதனால், வீரரைத்
தெய்வமாகப் பரவுதல் எத்துனைச் சிறப்புடையதா யிருந்தது என்பது தெளிவாகின்றது.
போரில் யானையை வீழ்த்தி மடிந்த எங்கள் (விவசாயப் பழங்குடியினர்) குடிமக்களின்
நடுகல்லை எங்கள் வழக்கப்படி வணங்குவது தான் எங்கள் பழக்கம். மாறாக நெல்லையும் ,
பூவையும் சொரிந்து வணங்கும் மேட்டுக்குடிக்கடவுள் எங்களுக்கு வேண்டாம் என்பதே இதன்
பொருளாகக் கொள்கிறார் அ.மார்க்ஸ்- இந்துத்துவத்தின் இருள்வெளிகள் - அ.மார்க்ஸ்;
கருப்புப் பிரதிகள் வெளியீடு ப.34)
தொல்காப்பியச் சூத்திரம் புறத்திணையியலில்
வெட்சித்திணைத் துறையை கூறுமிடத்து,
‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படைவ லீழ்த்தலென்
றிரு மூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட வெழுமூன்று துறைத்தேÕ
என்று நடுகல் அமைப்பதற்குரிய வினையமைதிகள்
ஆறினையும் ஆசிரியர் கூறுவார். யாவற்றிற்கும் வரம்பு கட்டி இலக்கணம் அமைத்த
தொல்காப்பியர் பழந் தமிழரிடையே பெரு வழக்கமாயிருந்த இவ்வழிபாட்டு முறைக்கும்
இலக்கணம் வகுத்ததில் வியப்பெதுவு மில்லை.
இறந்தவரைக் கல்லிலே அமைத்து வழிபடும் இந்நடுகல்
முறையானது, பண்டைக் காலத்தில் தமிழ் மக்களிடையே நிலவிய இழவு வினைகள் பற்றிய
நம்பிக்கை களுடன் நெருங்கிய தொடர்புடையது. நடுகல் வழிபாடு தோன்றியதைப் போன்று
கோயிற் கட்டிடக்கலை இழவு வினைகளை ஒட்டியே வளர்ந்திருக்கலாம் என அறிஞர் கருதுவர்
(C.F.P.R.Srinivasan, ‘Beginnings of the Traditions of south Indian
Temple Architecture’ P.6f).
தொல்காப்பியர் கூறியவற்றைப் பார்க்கும் பொழுது,
இவ்வழிபாட்டு முறையைச் சில விதிகளுக் கேற்ப கடைப்பிடித்தனர் என்பது தெளிவு.
தொல்காப்பி யரது வருணனையானது, பழங்குடி மக்களிடத்து இன்றும் கண்ணாரக் காணப்படும்
நடுகல் வழிபாட்டு முறையை ஒத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்ஸாம்
மாகாணத்துக் ‘காஸி’ மக்கட் கூட்டத்தினரி டையே காணப்படும் நடுகல் முறை இதற்குச்
சிறந்த உதாரணமாகும். (David Roy, ‘The Megalithic Culture of the
Khasis ANTHRORPOS.L.VIII.Pt 3 - 4. p.p522 ff’)
யாருக்கு நடுகல் வழிபாடு ஏற்பட்டது என்பதை
அகப்பாட்டொன்றிலிருந்து அறியலாம்.
“அரம்போழ் நுதிய வாளி அம்பின்
நிரம்போ நோக்கின் நிறையங் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்” (அகம்.
67:5-10)
நெல்லி மரங்களையுடைய இடங்களில் இருளிலே கடுகிச்
சென்று கூரிய முனையையுடைய பற்களையுடைய அம்பினையும் குறிபார்க்கும்
பார்வையினையுமுடைய வராய், தமது நிரையை மீட்க வேண்டி உக்கிரமான போரிலே வீழ்ந்துபட்ட
மானமிக்க வீரர்களது பெயரையும் பெருமையையும் பொறித்து பாதைகளிலே மயிற்றோகை யணிந்து
விளங்கும் நடுகற்கள் என்பது பாடற்பொருள். இங்கே நிரைமீட்கும் போரும் அதிலே தமது
உயிரை யிழந்தவரும் கூறப்படுகின்றனர். அத்தகையோருக்கே நடுகல் உரியது.
“நுழைந்தி நெடுவேற் குறும்படை மழவர்
முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த
வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை
மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரம்”
(அகம் 35:4-10)
இதன் பொருள் : ‘கூரிய முனையுடைய நெடிய வேற் படையையுடைய மழவர் போர்
வென்று பசுக்கூட்டங் களை மீட்டு வெட்சியாரை மேட்டு நிலத்தே வீழ்த்தினர்; வில்லையே
ஏராகக் கொண்ட சிறந்த அம்பினையுடைய மறவர்கள் தமது வலிய ஆண்மையாலிட்ட பதுக்கைக்
கண்ணுள்ள கடவுளை வழிபடற்கு, அந்நடுகல்லில் மயிற்றோகைகளைச் சூட்டித் துடிப்பறையை
யடித்து நெல்லாற் செய்த கள்ளடு மறியறுத்துப் பலி கொடுக்கும், வழிப் போவதற்கு இயலாத
பிரிந்து செல்லும் பாதைகளையுடைய புலால் வீசும் அரிய காட்டுப் பாதை’.
இங்கே நடுகல்லிற்கு மயிற்பீலி முதலியன
சூட்டுவதுடன் நெல்லாலாக்கிய கள்ளையும் செம்மறிக் குட்டியிறைச்சியையும் பலியாகப்
படைப்பதைப் பார்க்கின்றோம்.
‘நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவுங்
கொள்யின்Õ (புறம் 232:3-4)
என்று பிறருங் கூறுவது காண்க. இவற்றை நோக்கும்
போது இறந்தவரைப் பேணிப் போற்றும் மனப்பான்மை நிலவியது புலனாகும். இவ்வாறு
நடுகல்லானவர்கள் தம்மை வழிபடுவோருக்கு வேண்டும் ‘வரம்’ அளிப்பர் என நம்பினர்.
தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையுமுடைய அரிவையருத்தி நாளும்
தவறாமல் நடுகல்லைக் கைக்கூப்பித் தொழுது தனது கொழுநன் போரில் வெற்றி பெற வேண்டும்
என்று வேண்டினாள் என்று அள்ளூர் நன்முல்லையார் என்னும் பெண்பாற் புலவர்
பாடியுள்ளார் (புறம் 306: 3 - 7). நடுகல்லாயினோர் குல தெய்வமாகவும், காவல்
தெய்வமாகவும் விளங்கினர். ஆநிரையைக் கண்ணும் கருத்துமாகக் காத்தது போலவே,
தம்மையுங் கண் காணிப்பர் என்பது நம்பிக்கை.
எனவே, இந்நடுகற்கள் இறந்தவரின் உறவினராலோ,
நெருங்கிய நண்பராலோ ஏற்படுத்தப்பட்டன என்று கருதலாம். மலரும், மதுவும் , ஊனும் ,
சோறும் நடுகற்களுக்குப் படைக்கப்பட்டதை நோக்குமிடத்து, பிற்காலத்திலே தாழ்ந்த
சாதியினர் எனக் கருதப்படுவோர் “வேள்வி நடாத்தி மடை கொடுத்துச் சிறு தெய்வங்களை
வழிபடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது எண்ணத் தக்கது. ஐயனார், மதுரை வீரன்,
இருளன், கறுப்பன், நொண்டி முதலியன நடுகல் தெய்வங்களை ஒத்தனவாயுள்ளன. (சு. வித்தியானந்தன்,
தமிழர் சால்பு ப.112).
நடுகல் வழிபாட்டு வினையமைதிகளான கற்கோள்,
நீர்ப்படை முதலியன வீரர்க்கே மட்டுமின்றிப் பிற் காலத்தில் பிறருக்கும்
ஏற்புடையதாயிற்று என்பதற்கு கண்ணகி வரலாற்றாலும் உணரப்படும். கற்புக்கடம் பூண்ட
பொற்புடைத் தெய்வத்தின் படிவம் அமைத்தற் பொருட்டுக் கற்கொள்ளுதலை விரும்பியே,
வடபேரி மயத்தை நோக்கிப் படை செலுத்தினன் சேர மன்னன் என்று பதிற்றுப் பத்து,
சிலப்பதிகாரம் முதலிய இலக் கியங்கள் கூறும்.
‘கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து
பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை
நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து’
(சிலப் 27:14-16)
சிறப்புற்றதைச் சிலப்பதிகாரம் வருணிக்கும். எனவே வழிபாடு, வழிபடுமிடம்
முதலியவற்றின் பரிணாம வளர்ச்சியில் கல்நட்டுப் பரவுதல் எத்தகைய பங்கை வகித்தது
என்பதனை நாம் ஒருவாறறியலாம்.
சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கொண்டு
வந்து கண்ணகி தேவியின் வழிபாட்டுக்காக அமைத்தது ‘நடுகல்’ என்னும் முறையிலேயே
இருந்திருக்க வேண்டும். காப்பியத்தின் இருபத்தெட்டாம் பகுதியே ‘நடுகல் காதை’ என்று
தான் வழங்கப்படுகிறது. பிற்காலத்தில் தான் இன்றைக்கு மங்கலதேவி, கண்ணகிக் கோட்டம்
என்றெல்லாம் வழங்கப்படுகிற திருக்கோயில் அமைப்பு உருவாகியிருக்கிறது.
இதுபற்றி வெ.சு. சுப்பிரமணிய ஆச்சாரியார்
கூறும் போது ‘பெண்களுக்கு கல்நாட்டும் வழக்கம் சிலப்பதி காரத்தேதான் முதன்முதலாகக்
கூறப்பெற்றுள்ளது. இச்செய்தி தொல்காப்பியத்திலும் கூறப்பெறவில்லை. பிற்பட்ட
நூலாகிய புறப்பொருள் வெண்பா மாலை யிலும் கூறப்படவில்லை’ என்ற இவரின் கருத்து
சிந்தனைக்குரியது......! ( கல்கி, 21 ஜூலை 2013. சுப்ர.பாலன் ப. 28)
வீர யுகத்தின் பிற்பகுதியில் இளவரசன் ஒருவன்
போரில் இறந்தால் அவன் ‘துஞ்சினான்’ என்று மங்கல வழக்குச் சொல்லினால் கூறினர். அவன்
துஞ்சிய (வீழ்ந்த) இடத்திலே அவனது புகழிற்கும் தகுதிக்கும் ஏற்பப் பெரிய
‘பள்ளிப்படை’ எழுப்பியிருப்பர். அவ்வரசன் வீழ்ந்துபட்ட இடத்தையும் அவன் பெயரோடு
சேர்த்து வழங்கினர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன், சோழன்
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்,
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி முதலியன அத்தகைய சில பெயர்களாம்.
சோழப்பேரரசு நிலவிய காலத்திலே, ஆதித்தன் போன்றோரது கல்லறை களுக்கு மேல் ஆலயங்கள்
கட்டினர்.
பின்தங்கிய சமூகங்களில் வீழ்ந்துபட்டவர்கள்
‘அநாமதேய’ங்களாய்த் தெருவோரத்திலும், காட்டு வழியிலும் ஊர்ப்புறத்திலும் ஆங்காங்கு
நடுகற்களாக நின்றனர்! கிராம தேவதைகளாக மாறினர்.
இப்பொழுது தமிழ் நாட்டில் பல இடங்களில்
காணப்படும் ‘ஐயனார்’ கோயில்கள் இச்சிறு தெய்வழி பாட்டை ஒட்டியெழுந்தவையே. பழைய
நடுகல் வழி பாட்டுடன் தொடர்புடையதே இது (சு. வித்தியானந்தன். தமிழர் சால்பு ப.113)
பெருங்கற்காலம் தொடங்கி இறந்தவர்களுக்கு
நினைவுக் கற்கள் எழுப்பி தமிழர்கள் வழிபட்டனர். தமிழ் மொழியில் நடுகல் என்றும்
கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியில் வீரகலு அல்லது வீர சிலாலு எனவும்
அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் இந்நடுகற்களை பலியா என்றும் கம்பியா என்றும் சர
என்றும் அழைக் கின்றனர்.8
தெலுங்கு மொழி பேசும் தமிழகத்தில் உள்ள
அருந்ததியர் சாதியினர் நடுகல் வழிபாட்டையட்டி சற்று மாறுபட்ட விதமாக கல் நடும்
வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இறந்தவரின் காரியச் சடங்கு முடிந்த 3 ம் நாள், 5 ம்
நாள், 7 ம் நாள் என்று ஒற்றை எண்கள் கொண்ட தினங்களை தேர்வு செய்து மயான இடத்திற்கு
அருகே ஒரு பகுதியில் இறந்தவரின் பெயர், பிறப்பு, இறப்பு ஆண்டு என்று செதுக்கப்பட்ட
சுமார் மூன்றடிக்குக் குறையாத கல்லைக் கொண்டு நடுகின்றனர். இதற்கு தீபகல் என்றும்,
நடு கல் என்றும் பெயர் கூறப்படுகிறது. நடுகல் நடுவதற்கென்றே ஒரு நாளை தேர்வு
செய்யும் இவ்வழக்கம் இங்குள்ள எந்த சாதியினரிடமும் இல்லை. ( தகவலார் கா. இளங்கோ,
ஓட்டுனர் கோழிமேக்கனூர் கிராமம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தருமபுரி மாவட்டம்.)
இது ஆய்விற்குரியது.
வரலாறு என்பது பழங்கதையல்ல, அது உலகின்
உயிரினங்கள் அடைந்த வளர்ச்சியினை உணர்த்தும் காலக் கண்ணாடி. வீரதீர செயல்
புரிந்தவர்களின் வரலாற்று அடையாளமாகவே இன்று நடுகற்கள் உள்ளன. இந்த நடுகற்கள் பல
இடங்களில் முக்கிய ஆவணமாக விளங்குகிறது. போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு
மட்டுமில்லாமல், போரில் சண்டையிடப் பயன்படுத்திய யானை, குதிரை ஆகியவை களும்
நடுகற்களாக உள்ளன.
இறந்தாரை நினைவு கூறும் நடுகற்கள் அனைத்தும்
பிற்காலத்தில் வழிபடு கோயில்கள் ஆயின. இறந்தோரை நடுகல்லில் உருவமாக செதுக்கினர்.
பெயரும் பீடும் எழுதினர். வழிபட்டனர். இன்று வரை வழிபடுகின்றனர்.
போரில் இறந்த பல சாதாரண மறவரும் வீரரும் தம்மை
வழிபடுவோரைப் பாதுகாக்கும் சிறு தெய்வங் களாக (Tutelary Spirits) மண்ணுலகிலேயே
கல்லாகவும், மரமாகவும் , கற்குவியலாகவும், மண் படிவங்களாகவும் நின்றனர். போலும்
...!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக