இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..உலகம் முழுக்க சில பரிச்சயமான உருவ அமைப்புகள் பல பிரபலமாகும், அது ஏன்? எதற்கு? எப்படி? என்று நம்மால் வரையறுக்க முடியாது.
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
அப்படியான ஒரு உருவம்தான், முக சவரம் செய்யப்படாமல் சிலுப்பிய தலையோடு, சிகார் சகிதமாக, கம்பீரமான ஆளுமையாக, டி-சர்டில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் செருப்பு வரை ஒரு உருவம் பிரபலம் என்றால் அது சேகுவாரா தான்.
கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன். சேகுவாரா புரியாதவர்களுக்கு புதிர். புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்.
சேகுவாரா யார்?
ஏழைகளை அன்போடு அரவணைப்பவர்.
ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், அரசியல்வாதி.
மேலும், கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர்.
சேகுவாரா என்றால் விடுதலை, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்பதாகும்.
சேகுவாரா என்கிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது. இந்த தேசத்தின் பிள்ளை என ஒரு தேசத்திற்குள் குறுக்கிவிட முடியாத வாழ்க்கை வாழ்ந்த போராளி ஆவார்.
வெனிசுலா, கொலம்பியா, பிரேசில், கியூபா, பொலிவியா, காங்கோ எனப் பல இடங்களில் கொரில்லா போர் முறைகளின் பின்னே சேகுவாரா நின்று இருந்தார்.
அடிப்படையில் மருத்துவரான இவர் ஆஸ்துமா நோயாளியாகவும் இருந்தார். ஆனால், மருத்துவம் பார்த்து நோய்களை தீர்ப்பதை விட சமூகத்தின் அழுக்குகளை தீர்க்க வேண்டும் என்கிற உறுதி அவரிடம் இருந்தது.
அதற்கு முக்கியமான காரணம் தன் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுக்க சுற்றியதுதான். அதோடு கார்ல் மார்க்சையும், லெனினையும் உள்வாங்கி படித்த அவர் ஏழைகளும், பாட்டாளிகளும் படும் துன்பங்களை அறிந்தபோதுதான் போராளியானார்.
சேகுவாராவின் இளமைப்பருவம்..!!
சேகுவாரா 1928ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 14ஆம் தேதி அர்ஜென்டீனாவில் பிறந்தார். ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ் மற்றும் சிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவராக பிறந்தார்.
அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து "ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா" என பெயர் சூட்டினர்.
அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. சேவிற்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம்.
இவர் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்கு கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தில் ஆதரவாளராக இருந்தார். இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
ஆஸ்துமா நோய் :
'சே"வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய், ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராட வைக்க, ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா இவரை இறுகப்பற்றியது. வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்துமா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார்.
இவர் ஒரு சிறந்த 'ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை 'பூசெர்" என்னும் பட்டப்பெயர் இட்டு அழைத்தனர்.
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12வது வயதில் உள்ள ர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்களின் மீது இவருக்கு சிறந்த ஆர்வம் இருந்தது.
குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. இவற்றுள் மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்கு சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் இவர் விரும்பி வாசித்தார். வசிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு இவரிடம் சுழன்றுகொண்டு இருந்ததால், தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் தொகுப்பாக்கி, பின் பகுத்து பார்க்கும் தன்மையும் இவரிடம் இருந்தது.
சேகுவாராவின் மருத்துவ படிப்பு!!
🏍சேகுவாரா, 1948ஆம் ஆண்டு மருத்துவம் படிப்பதற்காக புவனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால், 1951ஆம் ஆண்டு படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து, மோட்டார் ஈருருளியில் தென் அமெரிக்கா முழுதும் பயணம் செய்தார்.
அப்போது தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்திருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்கு தங்களால் ஏதாவது மருந்து கண்டுபிடிக்க முடியுமா? என்ற தேடலுமே அந்த பயணத்திற்கான ஆரம்பமாக இருந்தது.
பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வதுதான் இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது.
தொழுநோயாளிகளின் தங்குமிடங்களை தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கைப்போட்டு சாப்பிட்டு, உறங்கி, கால் பந்தாடிய 'சே"வின் உள்ளத்தில் பலவிதமான போராட்டங்களை ஏற்படுத்தியது. தொழு நோயாளர்களிடம் அவர் காட்டிய பரிவு மற்ற மனிதர்களிடம் இருந்து அவரை பிரித்துக் காட்டியது.
இப்பயணத்தின்போது அவர் எடுத்த குறிப்புகளை பயன்படுத்தி 'மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (வுhந ஆழவழசஉலஉடந னுயைசநைள) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாக தேர்வு செய்யப்பட்டது. பின்னர், 2004ல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.
சேகுவாராவின் வாழ்வை முழுவதுமாக புரட்டிப்போட்ட பயணம் இது. இதுவரை இவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என இவரது உலகம் உல்லாசமாக இருந்தது. ஆனால், இந்த பயணம் அவருக்கு பல படிப்பினைகளை கற்றுத்தந்தது.
தென் அமெரிக்க கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு, வர்க்க வேறுபாடுகளுக்கு காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார்.
சேகுவாராவின் பயணங்கள்..!!
லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் வாஷிங்டனும், அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரணமாக இருப்பதை கண்டறிந்தார்.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக மார்க்சியம் (ஆயசஒளைஅ) அவர் சிந்தனையில் தோன்றியது. மார்க்சியம் என்பது கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் ஆய்வுகள், எழுத்துக்கள் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் உலகப்பார்வை ஆகும்.
இறுதியாக 1952ஆம் ஆண்டு, ஜூலை மாதம் இந்த பயணம் முடிவுக்கு வந்தபோது, 'சே" முழுவதுமாக மாறியிருந்தார். இலத்தீன் அமெரிக்காவை தனித்தனி நாடுகளாக பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார்.
அதன்பின் அர்ஜென்டீனாவுக்கு திரும்பிய சேகுவாரா தனது படிப்பை முடித்து 1953ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளமோ பட்டம் பெற்றார்.
தனது மருத்துவப் படிப்பை முடித்த சேகுவாரா 1953ஆம் ஆண்டு ஜூலையில் மீண்டும் பயணமொன்றை தொடங்கினார். இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, காஸ்ட்டா ரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்கு சென்றார்.
அதே ஆண்டு டிசம்பரில் சேகுவாரா குவாதமாலாவுக்கு சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட குடியரசுத் தலைவர், நிலச் சீர்திருத்தங்களின் மூலமும், பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்.
உண்மையான புரட்சியாளனாக ஆவதற்கு தேவையான அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் சேகுவாரா, குவாதமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார். ஏற்கெனவே அவருக்குள் உருவாகியிருந்த அமெரிக்கா மீதான கோபத்தை குவாதமாலாவின் அரசியலை சூழல் அதிகப்படுத்தியது.
குவாதமாலா நகரில், ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் நட்பு இவருக்கு கிடைத்தது. பிற்காலத்தில் இவரையே சே திருமணம் செய்து கொண்டார்.
ஹில்டா கடேயா அக்கொஸ்தா :
ஹில்டா கடேயா அக்கொஸ்தா, பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளர் ஆவார். மேலும், இவர் இடதுசாரி சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் இவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன.
இவர் பல உயரதிகாரிகளை சேகுவாராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்களும், கியூபாவை விட்டு வெளியேறி வாழ்ந்து வந்தவர்களின் தொடர்புகளும் சேகுவாராவுக்கு கிடைத்தது. அச்சமயத்தில்தான் 'சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது.
சே :
'சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட அர்ஜென்டீன சொல்லாகும். சே என்பது வியப்புச்சொல் ஆகும்.
ஆனால், தென் அமெரிக்க பாம்பாஸ் புல்வெளியினருக்கு வியப்பு, மகிழ்ச்சி, வருத்தம், நாணயம், அங்கீகாரம் என பல மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக இது அமைகிறது. இச்சொல்லின் மீதுள்ள பற்றால், கியூபா புரட்சியாளர்கள், 'சே" என்று செல்லமாக அழைத்தனர்.
'சே", அங்கிருந்த கம்யூனிஸ்ட்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு, அமெரிக்காவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், அமெரிக்கா தனது எண்ணத்தை சுலபமாக நிறைவேற்றி அந்நாட்டின் அரசை கவிழ்த்தது.
1954ஆம் ஆண்டு குவாதமாலாவை முற்றுகையிடும்போது தப்பியோடும் நிலை ஏற்பட்டு மெக்ஸிகோவில் தஞ்சம் புகுந்தார் சே. அங்கு நாடு கடத்தப்பட்ட கியூபா மக்களை சந்தித்தார். இக்காலகட்டங்களில் கம்யூனிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய 'சே", மார்க்ஸிய லெனினிய பாதைதான் தனது பாதை என்பதை உணர்ந்தார். அது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார்.
மனிதருள் மாமனிதர்... சேகுவாரா..!!
விவசாயிகளிடம் குவாதமாலா அரசு, ஆயுதங்களைக் கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபடச் செய்திருந்தால் அமெரிக்காவின் தாக்குதலை முறியடித்திருக்கலாம் எனும் பார்வையில், 'சே" கட்டுரைகள் எழுதினார். இதனால் சி.ஐ.ஏவின் பார்வைக்கு இலக்கானார். எனவே, சே தன் பாதுகாப்பிற்காக அர்ஜென்டினா தூதரகத்தில் தங்க நேரிட்டது.
இச்சமயத்தில், இவரது எண்ணங்களால் ஒரு கியூபா போராளி வசீகரிக்கப்பட்டார். அவர் பெயர் நிக்கோலோபஸ். கியூபாவின் ஜனாதிபதியின் ஆட்சிக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் ஒரு புரட்சி ஏற்படுத்திய 'ஜூலை 26" எனும் இயக்கம் அப்போதுதான் தோல்வியை சந்தித்திருந்தது.
நிக்கோலோபஸ்க்கு, குவாதமாலாவில் 'சே"வை சந்தித்தபோது புத்துணர்ச்சி ஏற்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க சில யோசனைகள் இவரது எண்ணத்தில் பளிச்சிட்டன. சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றிருந்த சேகுவாரா மட்டும் கியூபா புரட்சியில் பங்கெடுத்தால், போராட்டத்திற்கு ஒரு புதுவடிவம் கிடைக்கும் என்று நிக்கோலோபஸ் நம்பினார். இது குறித்து காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோவுடன் பேசினார்.
இரண்டு மகத்தான சக்திகள் இணைந்த அந்த தருணம் கியூபா வளர்ச்சியின் அஸ்திவாரமாகும். அப்போது 'சே"வுக்கு வயது 27. பிடல் காஸ்ட்ரோவுக்கு 32. பிடல் காஸ்ட்ரோவுக்கு கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது.
ஆனால் 'சே"வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காக தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இதனால்தான் 'சே" மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.
அதன்பின் புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக படகில் ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது.
காலநிலையில் ஏற்பட்ட சிக்கலால் படகு எதிர்பார்த்த இடத்தை எதிர்பார்த்த நேரத்தில் அடைய முடியாமல் போகின்றது. இதனால் இராணுவம் சுதாரித்துக் கொள்கின்றது. இச்சூழ்நிலையில் தன் சகாக்கள் பலரை இழந்தார்கள். மிஞ்சியவர்களின் துணையோடு இராணுவத்திற்கு ஆயுதங்கள் வரும் இரயில் கவிழ்க்கப்படுகின்றது. இராணுவத்தினர் சிறைப்பிடிக்கபடுகின்றனர்.
1957ஆம் ஆண்டு, ஜனவரி 17ம் தேதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று துவங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கொரில்லா யுத்தம்.
துவக்கத்தில் குழுவில் மருத்துவராகவும், லெஃப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற 'சே", தன் திறமை, துணிச்சல், மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார். கொரில்லா படைக்கு கமாண்டராக அறிவிக்கப்பட்ட 'சே" கடுமையான ஆஸ்துமா துன்புறுத்திய போதிலும், அடர்வனங்களிலும் மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்கு தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார்.
'சாவைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்" போன்ற இவரது வாசகங்கள், களத்தில் வீரர்களுக்கு தெம்பூட்டி சீற்றம் கொள்ளவைத்தன.
யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கொரில்லாக்களை கொண்டு வீழ்த்தியதுதான் 'சே"வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டது. 1958ஆம் ஆண்டு ஸாண்டா கிளாராவைக் கைப்பற்றினார். கொடுங்கோலன் பாட்டிஸ்ட்டா ஸாண்டா டொமிங்கோவிற்கு தப்பியோடினான்.
1958ஆம் ஆண்டில், புரட்சிப்படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கொரில்லா யுத்த வெற்றி, உலகின் அனைத்து நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தியது.
1959ஆம் ஆண்டு கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன் சேகுவேராவை ஒரு கியூபன் என்று அறிவித்த பிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம் தேசிய வங்கியின் அதிபராக நியமிக்கப்பட்டார். மேலும், விவசாயத்துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் 'சே".
தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் 'சே" என கையெழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் 1961ஆம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியை துறந்து தொழிற்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் 'சே" தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார்.
விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற்சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். 'சே" மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்திற்கு முன்பும், பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என 'சே" திடமாக நம்பினார். கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோது, 'ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்" எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்திற்குக் காரணம்.
அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்-க்கு அழைத்தது. 'அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப்பேன்" என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் 'சே". சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இந்நிலையில் காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்திற்கு பிறகு, 'சே" 1965 மார்ச் மாதத்தில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு 'சே" நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு.
அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965ஆம் ஆண்டில் தனது நண்பர் காஸ்ட்ரோவுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதிவிட்டு கியூபாவில் இருந்து திடீரெனத் தலைமறைவானார்.
எதிரிகளுக்கு தெரியாமல் காடுகளில் சேகுவேரா ஒளிந்திருந்த சமயம், பொலிவியாவில் நடந்த கொரில்லா புரட்சியின்போது பொலிவிய காடுகளில் பதுங்கி இருந்தார். அப்போது தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாச்சாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்கு காரணமாக இருந்தது.
இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து 'சே"வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்சனைகளுடன் 'சே" காடுகளில் அலைந்தார். அச்சமயம் சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது.
1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். காலை 10.30 மணிக்கு யூரோ கணவாயை ஆறு கொரில்லா வீரர்களுடன் 'சே" கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.
நண்பகல் 1.30 மணிக்கு அந்த பெண் பொலிவிய ராணுவத்துக்கு 'சே"வின் இருப்பிடத்தை காட்டி கொடுக்கிறாள். அலறி அடித்துக்கொண்டு பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாக சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கொரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.
பிற்பகல் 3.30 மணிக்கு காலில் குண்டடிப்பட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், 'நான்தான் 'சே". நான் இறப்பதை காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார்.
மாலை 5.30-க்கு அருகிலிருந்த கைத்தாங்கலாக 'சே"வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் 'சே" கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறை வைக்கப்படுகிறார்.
இரவு 7.00 மணிக்கு 'சே பிடிபட்டார்" என சி.ஐ.ஏவுக்கு தகவல் பறக்கிறது. அதேசமயம், 'சே" உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.
தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், 'இது என்ன இடம்?" என்று 'சே" கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, 'பள்ளிக்கூடமா...!! ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?" என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் 'சே"வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.
அக்டோபர் 9ஆம் தேதி அதிகாலை 6.00 மணிக்கு லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.
கசங்கிய பச்சை காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் 'சே"வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இது. இந்த கோலத்தில் இங்கே நாம் காண்பது கனவா என நினைத்தார்.
பிடிப்பட்டிருப்பது 'சே"தான் என அமெரிக்காவுக்கு தகவல் சென்றது. 'சே"வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் 'சே"வை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் 'சே"வின் அப்புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் இடம்பிடித்துள்ளது.
காலை 10.00 மணிக்கு 'சே"வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாக தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏவிடம் இருந்து தகவல் வருகிறது.
வாலேகிராண்டாவில் இருந்துவந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் 'சே", 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.
காலை 11.00 மணிக்கு 'சே"வை சுட்டுக்கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. இதற்காக 'மரியோ ஜேமி" என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் பணியமர்த்தப்படுகிறார்.
நண்பகல் 1.00 மணிக்கு கைகள் கட்டப்பட்ட நிலையில், 'சே"வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்திற்கு மரியோ அழைத்துச் செல்கிறார். 'முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!" என்றார் 'சே". ஆனால், மரியோ அவரை ஒரு கோழையை போல கொல்ல தயாரானார்.
'சே" தன்னை நிற்க வைத்து சுடுமாறு கேட்டார். ஆனால், மரியோ அதை அலட்சியப்படுத்துகிறார். 'கோழையே, சுடு! நீ சுடுவது 'சே"வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!" உலகம் புகழும் மனிதனான 'சே" சொன்ன கடைசி வாசகம் இதுதான்!
1.10 மணிக்கு மனித குல விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கியின் ஒன்பது தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்திற்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட ஒரே வீரன் இவ்வுலகை விட்டு இதோ விடைப்பெற்றுவிட்டான்.
ஆனாலும், அந்த வீரனின் கண் இமைகள் அப்போதும்கூட மூடிக்கொள்ளவில்லை. கண்கள் திறந்தபடியேதான் அவரின் உயிர் விட்டுப் பிரிந்தது. 'சே" இறந்த தகவல் உலகத்தையே உலுக்கியது.
'சே"வின் அஞ்சலிக்காக கியூபா, ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. காஸ்ட்ரோ, அவர்கள் முன் தலைமை உரையாற்றினார். 'வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட 'சே" நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
எது எப்படியாயினும் சேகுவேராவின் சிந்தனையும், இலட்சியங்களும் இன்றைக்கும் சிறந்தவையாகவே கருதப்படுகிறது.
சேகுவேரா-வின் பொன்மொழிகள்!!
நீ ஊமையாய் இருக்கும்வரை உலகம் செவிடாய் தான் இருக்கும்.
நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப் படமாட்டேன்.
போருக்கு செல்லும் போது கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ உண்மையான வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும்.
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம்.
ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன்.
விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை.
புரட்சி தானாக உண்டாவதில்லை, நாம்தான் அதை உருவாக்க வேண்டும்.
எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம்.
எல்லா மனிதர்களுக்கும் அன்பும், மனிதமும் சரிசமமாக கிடைக்கும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.
நான் இறந்த பிறகு எனது கைத்துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக் கொள்வார்கள். அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப் பாயும்!.
மண்டியிட்டு வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
எனக்கு வேர்கள் கிடையாது! கால்கள் மட்டுமே உண்டு.
நமது போர்க்குரல் இன்னொரு மனிதனின் காதில் விழுமானால்... நமது ஆயுதங்களை இன்னொரு கை எடுத்துக்கொள்ளுமானால்... நமது இறுதிச்சடங்கில் துப்பாக்கியின் உறுமல்களோடும், புதிய போர்க்குரல்களோடும் இன்னும் பலர் கலந்து கொள்வார்களேயானால் மரணத்தை நாம் அன்புடன் வரவேற்கலாம்.
நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமூகத்தின் நன்மைக்காக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும்.
எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என
வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக