Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

ரத்தன் டாடா - டாடா குழுமம்..

Image result for ரத்தன் டாடா
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் செல்போனில் சிம் கார்டாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டி.வியில் டி.டி.எச்சாய் ஒவ்வொரு இடத்திலும் கால் ஊன்றி தடம் பதித்திருக்கும் ஒரே நிறுவனம் டாடா குழுமம்.

உப்பு என்றால் நமக்கு நினைவிற்கு வரும் முதல் பிராண்ட், டாடா. அதேபோல் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் டாடா நம்முடன் கலந்திருக்கிறது.

சாமான்ய மக்களும் கூட காரில் செல்லக் காரணமாக இருந்த ஒரே நிறுவனம் டாடா. மோட்டார் உலகிலேயே மிகச்சிறிய அளவில் மிகக் குறைந்த விலையில் கார்களை விற்பனை செய்த நிறுவனம் டாடா குழுமம்.

சந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில், டாடா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பெருநிறுவன குழுமமாகும். மேலும், இந்நிறுவனம் உலகில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

டாடா ஸ்டீல், கோரஸ் ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா டெக்னாலஜீஸ், டாடா டீ, டைட்டன் இண்டஸ்ட்ரீஸ், டாடா பவர், டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலிசர்வீசஸ் மற்றும் தாஜ் ஹோட்டல்ஸ் உள்ளிட்டவை இந்தக் குழுமத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்ற நிறுவனங்கள் ஆகும்.

முன்னேற துடிக்கும் இந்திய மக்களை பார்த்து உங்களின் முன்மாதிரி யார்? எனக் கேட்டால் பெரும்பாலானோர் ரத்தன் டாடா என்றே கூறுவார்கள்.

நம்மைப் பார்த்து சிலர் நீ என்ன பெரிய டாடா-வா? என்று கூற கேட்டிருப்போம். அந்த அளவுக்கு டாடா அவர் கள் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார்.

உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் இவர் இடம் பிடிக்கவில்லை என்றாலும் தனது சாம்ராஜ்ஜியத்தை உலகறிய செய்திருக்கிறார்.

'உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டிடம் எழுப்புங்கள்!" - இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலக சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் நாவல் டாடா.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக இருந்த டாடா குழுமத்தை உலகின் பார்வைக்கு எடுத்துச் சென்றவர், ரத்தன் டாடா. 'சிறிய முன்னேற்றங்கள் பற்றி யோசிப்பது எனக்குப் பிடிக்காது", 'எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகப்பெரிதாய் அனைவரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும்" என்று கூறுவார், ரத்தன் டாடா. அப்படித்தான் மிகப்பெரிய அடிகளை உலக மார்க்கெட்டில் எடுத்து வைத்தது, டாடா குழுமம். உலகின் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சந்தையிலும் தனக்கான வாய்ப்புகளை கண்டறிந்து தனக்கான இடத்தை பிடித்துள்ளது, டாடா நிறுவனம்.

ரத்தன் நவால் டாடா :

ரத்தன் டாடா 1937ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் டாடா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாடா-வின் கொள்ளுப் பேரனாவார்.

ரத்தன் டாடா-வின் குழந்தைப்பருவம் இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. ரத்தன் டாடாவின் பெற்றோர்கள் பிரிந்தபோது அவருக்கு ஏழு வயது மற்றும் அவரது இளைய சகோதரர் ஜிம்மிக்கு ஐந்து வயதாகும்.

அவரது அன்னை குடும்பத்திலிருந்து வெளியேறிய பின், ரத்தன் டாடா-வையும் அவரது சகோதரரையும் அவர்களது பாட்டி நவஜிபாய் வளர்த்தார்.

ரத்தன் டாடா-வின் படிப்பு :

ரத்தன் டாடா, 1962ஆம் ஆண்டில் கார்நெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலில் பி.எஸ்.சி இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர், 1975ஆம் ஆண்டில் ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் உயர் மேலாண்மை பட்டம் பெற்றார். அவர் அங்கு மேற்படிப்பை முடித்தவுடனேயே மிகப்பெரிய நிறுவனமான ஐடீஆல் அவருக்கு வேலை கிடைத்தது.

இருப்பினும், இந்தியாவில் தான் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தாய்நாட்டிற்கே திரும்பி வந்தார். ரத்தன் டாடா தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் பணிக்கு சேர்ந்தார். ஆனால், இவர் தனது நிறுவனத்திலேயே அடிப்படையான சிறிய பொறுப்புகளையே செய்து வந்தார்.

அவர் முதலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்ற ஜாம்ஷெட்பூருக்கு சென்றார். அங்கு இவர் பிற பணியாளர்களுடன் சேர்ந்து சுண்ணாம்புக்கல் வாருதல் மற்றும் சூளைகளை கையாளும் பணிகளை செய்தார். இதனால் இவர் உழைப்பின் அருமையை அறிந்திருந்தார்.

1981ஆம் ஆண்டில், குழுமத்தின் மற்றொரு பங்குதார நிறுவனமான டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனராக ரத்தன் டாடா பொறுப்பேற்றார்.
டாடா குழுமத்தில் தலைமை பொறுப்பு :

பல வருடங்களாக டாடா குழுமத்தின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு பங்காற்றிய ரத்தன் டாடா, 1991ல் டாடா குழுமங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இது அந்த நிறுவனத்தில் உள்ள குழு உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால், ரத்தன் டாடாவிற்கு போதிய திறமையும், அனுபவமும் இல்லை என கூறினார்கள். இவர் இந்த நிறுவனத்தை எப்படி சமாளிப்பார்? என கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். ஆனால், ரத்தன் டாடா அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக சில நாட்களிலேயே டாடா குழுமத்தை உலகறியச் செய்தார்.

அதாவது அவர் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா டீ, டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய பெரும் டாடா நிறுவனங்களுக்கும் தலைவராக பொறுப்பேற்றார். அதன்பிறகு, டாடா குழுமத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் பெரும் பங்காற்றினார்.

டாடா இண்டிகா :

ரத்தன் டாடாவின் வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பொது நிறுவனமானது. 1998ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியன்று 2.6 லட்சம் ரூபாய்க்கு டாடா மோட்டார்ஸ், ரத்தன் டாடா சிந்தனையில் பிறந்த டாடா இண்டிகாவை அறிமுகப்படுத்தியது.
'இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட முதல் கார்" என்ற நற்பெயரால், இண்டிகா இந்திய மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனாலேயே காரைப் பார்க்காமலேயே புக் செய்தனர்.

இந்தியர்களின் கார் குறித்த எதிர்பார்ப்புக்கான விடையாக இண்டிகா வெளிவந்ததை பற்றி ரத்தன் டாடாவிடம் கேட்டபோது, 'மாருதி ஜென் காரின் சைஸ் - அம்பாஸ்டரின் கேபின் இடவசதி - மாருதி 800 காரின் விலை - டீசல் காரின் மைலேஜ் ஆகியவைதான், நாங்கள் இண்டிகா காரை உருவாக்கும்போது கவனத்தில் கொண்டவை" என்றார்.

அடிப்படையில் பஸ் மற்றும் டிரக்குகளை தயாரிக்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து, ஐரோப்பிய கார்களுக்கு இணையான டிசைனில் ஒரு கார் வெளிவந்தது என்பதையே, பலரால் நம்ப முடியவில்லை.

ஏனெனில், அப்போதுதான் இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கல் கொள்கைக்கு வந்திருந்தது. என்றாலும், தொழில்நுட்ப தேவைகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதற்கு பலர் தயங்கிய நிலையிலும், ரத்தன் டாடா துணிச்சலாக அந்தச் சவாலை எதிர்கொண்டார்.

'எல்லாமே சரியாக சென்று கொண்டிருக்கின்றன" என டாடா நினைத்த வேளையில், ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. முதற்கட்டமாக கார்களைப் பெற்றவர்கள், காரில் இருந்த பல பிரச்சனைகளை முன்வைக்கத் தொடங்கினர். இதற்கு கார் உற்பத்தியில் டாடா-வின் அனுபவமின்மையே காரணமாக அமைந்தது. ஏனெனில், கனரக வாகனங்களை தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்த டாடா, இண்டிகா மூலம்தான் கார் உற்பத்தியில் பிள்ளையார் சுழியைப் போட்டிருந்தார்.

அந்த நிறுவன ஊழியர்களும் அப்போதுதான் அதிகப்படியான டிமாண்டுக்கு ஏற்ப கார்களை உற்பத்தி செய்யக்கூடிய பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில், பிரச்சனைகளின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்துக்கொண்டு போகவே, ஆரம்ப நாட்களில் இண்டிகாவுக்கு இருந்த வரவேற்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

இதனால் ரத்தன் டாடா பெரும் நஷ்டத்திற்கு உள்ளானார். எனவே, உடனிருந்தவர்கள் டாடா மோட்டார்ஸை விற்றுவிடும் படி அறிவுறுத்தினர். மனமில்லாமல் அமெரிக்காவில் உள்ள ஃபோர்டு கம்பெனிக்கு இதை விற்பதற்கு முன்வந்தார்.

டாடா மோட்டர்ஸ்-ன் இண்டிகாவை, ஃபோர்டு கம்பெனிக்கு விற்பனை செய்ய ரத்தன் டாடா அமெரிக்கா சென்றார். அங்கு சந்திப்புக்கூட்டம் 3 மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. ஃபோர்டின் நிறுவனர் பில் ஃபோர்டு, ரத்தன் டாடா-விடம் உங்களுக்கு மோட்டார் துறையை பற்றிய அறிவும், திறமையும் இல்லாமல் ஏன் இதை ஆரம்பித்தீர்கள் என்று இழிவாக பேசினார்.

உங்கள் கம்பெனியை நான் வாங்குவது உங்கள் மீது பரிதாபப்பட்டுத்தான். இது உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறினார். இதைக் கேட்ட ரத்தன் டாடா அந்த டீலை உடனே ரத்து செய்துவிட்டு, இந்தியா திரும்பினார்.

பில் ஃபோர்டின் வார்த்தைகள் ரத்தன் டாடாவை மிகவும் புண்படுத்தியது. இனி எந்த காரணத்தை கொண்டும் தனது கம்பெனியை விற்கப்போவதில்லை என்ற முடிவிற்கு வந்தார்.

டாடா இண்டிகாவின் அடுத்த நிலை :

இந்த நேரத்தில் இண்டிகாவின் ஆரம்பகால டிசைனை வடிவமைத்த பொறியாளர்கள் குழு, இந்த காரின் உற்பத்திமுறையை முற்றிலுமாக மாற்றியமைத்தது. டிசைனில் இருந்த குறைகளைக் களைந்து, ஒட்டுமொத்த தரத்தில் கவனத்தை செலுத்தியது. இதன் வெளிப்பாடாக இண்டிகா ஏ2, மக்களின் பேராதரவோடு மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

முந்தைய மாடலைவிட இது தரமாக இருந்ததுடன், நம்பகத்தன்மையான தயாரிப்பாகவும் இண்டிகா ஏ2 இருந்தது. 'More car per car" என்ற அடைமொழியுடன் வெளிவந்த இண்டிகா, அதற்கேற்ப குறைவான விலை - அதிக மைலேஜ் - குறைவான பராமரிப்புச் செலவுகள் என, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்கக் காராக இருந்தது.

2002 முதல் 2007 - இண்டிகாவின் பொற்காலம் எனலாம். ஏனெனில், இதே காரை அடிப்படையாகக்கொண்டு இண்டிகா செடான், இண்டிகா மெரினா எஸ்டேட் வேகன், இண்டிகா காம்பேக்ட் செடான், இண்டிகா ஓடு என வரிசையாக கார்களை வெளியிட்டது, டாடா மோட்டார்ஸ்.

ரத்தன் டாடா தனது கம்பெனியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு, தனது கம்பெனியை நல்ல இலாபத்திற்கு கொண்டு வந்தார். சிறிது நாட்களிலேயே அவர் மார்க்கெட்டில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வளர்ச்சியடைந்தார்.

அச்சமயம் ஃபோர்டு கம்பெனி வருடத்திற்கு வருடம் நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்தது. 2008ஆம் ஆண்டு இந்த கம்பெனி முழ்கிபோகும் அளவிற்கு வந்திருந்தது. அப்போது ஃபோர்டு கம்பெனியின் ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர்-ஐயும் விற்பதற்கான முடிவுக்கு வந்தனர்.

ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் :

ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவரை ரத்தன் டாடா வாங்க முன் வந்தார். அதனால் ஃபோர்டு கம்பெனியினர் டாடா மோட்டார்ஸ்-ன் தலைமையகத்திற்கு வந்தனர். மார்ச் 26, 2008ஆம் ஆண்டு தனது ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் செயல்பாடுகளை இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விற்க ஒப்புக் கொண்டதாக ஃபோர்டு அறிவித்தது. 2.3 பில்லியன் அமெரிக்கன் டாலருக்கு ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர், டாடா மோட்டார்ஸ்-க்கு ஒப்படைக்கப்பட்டது.

அப்போதும் பில் ஃபோர்டு அதே வார்த்தையை திரும்பக் கூறினார். நீங்கள் எங்கள் கம்பெனியை வாங்குவது எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று. ரத்தன் டாடா நினைத்திருந்தால் அப்போதே அவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாது பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.

அதன்பிறகு ஜாகுவார் மிகப் பிரபலமடைந்தது. நல்ல இலாபம் ஈட்டியது. ரத்தன் டாடாவின் அணுகுமுறையே இதற்கு காரணமாக இருந்தது. முதலில் ஜாகுவார் நிறுவனத்திடம் என்ன பிரச்சனை? என்று கேட்டார். அதை சரிசெய்ய முழு சுதந்திரமும் அளித்தார். இந்த அணுகுமுறை தான் டாடா குழுமத்திற்குள் 90 நிறுவனங்களை வைத்திருக்க உதவியிருக்கிறது.

ரத்தன் டாடாவின் கைப்பற்றல்கள் :

2007ஆம் ஆண்டு ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ், டாடா சன்ஸ் நிறுவனம், எஃகு மற்றும் அலுமினியம் தயாரிக்கும் ஆங்கிலோ-டச்சு நிறுவனமான கோரஸ் குழுமத்தை கைப்பற்றியது. இந்த கைப்பற்றல் மூலம் ரத்தன் டாடா இந்திய வணிகக் கலாச்சாரத்தின் புகழ்பெற்ற ஆளுமையானார். இந்த இணைப்பு உலகிலேயே ஐந்தாவது பெரிய எஃகு உற்பத்தியாளரை தோற்றுவித்துள்ளது.

கோரஸ் என்ற உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனத்தை டாடா வாங்கியதன் மூலம் உலகின் முன்னணி இரும்பு உற்பத்தியாளராய் உருப்பெற்றது, டாடா ஸ்டீல்ஸ்.

பல நிறுவனங்கள் இந்தியாவிற்குள் காலடியை எடுத்து வைக்க, உலக சந்தையில் சத்தமின்றி தன்னிகரற்ற ஒரு இடத்தைப் பெற்றது, டாடா குழுமம். தற்போது இந்நிறுவனத்தின் வருவாயில் 65% வெளிநாடுகளிலிருந்துதான் ஈட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என அனைத்து துறையிலும் அசுர வளர்ச்சி கண்டது, இந்நிறுவனம். ரத்தன் டாடா பொறுப்பேற்ற பின் டாடா குழுமம் கால் வைக்காத துறை இல்லை என்றே சொல்லலாம்.

பணியாளர்களுக்கான சலுகைகள் :

இப்போது தனியார் நிறுவனங்களில் இருக்கும் சலுகைகள் யாவும் டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்டதாகும். ஆலையில் பணிபுரியும் பெண்களுடைய குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவும், அந்தக் குழந்தைகளுக்குத் தொடக்கக்கல்வி அளிக்கவும் 1886-லேயே ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தது, டாடா நிறுவனம்.

தொழிலாளர்கள் தரப்பில் கேட்காமலேயே, வருங்கால வைப்பு நிதித் திட்டத்தை தன்னுடைய ஆலையில் அமலாக்கியது, டாடா நிறுவனம். இந்தியாவிலேயே அப்போதுதான் முதல்முறையாக அத்திட்டம் அமலாக்கப்பட்டது.

1907-ல் உருவான 'டாடா ஸ்டீல்" நிறுவனம்தான் இந்தியா கண்ட முதல் இரும்பு-உருக்கு நிறுவனமாகும்.

பிரிட்டனில் ஒரு நாளைக்கு பனிரெண்டு மணிநேரம் தொழிலாளர்களை வேலை வாங்கலாம் என்று சட்டம் இருந்த நாட்களில் 1912-ல் எட்டு மணிநேர வேலைத் திட்டத்தை அமலாக்கியது, டாடா நிறுவனம்.

டாடா உருக்கு நிறுவனத்தில் 32,000 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய சூழல் உருவானபோது, உலகில் இதுவரை எந்த நிறுவனமும் அளித்திராத அளவிற்கு சலுகைகளை டாடா நிர்வாகம் அளித்தது.

அவர்கள் வேறு வேலைக்குச் சென்றாலும் அவர்கள் ஓய்வுபெறும் வயதை எட்டும் வரையில் நிறுவனத்தில் வாங்கிய கடைசி ஊதியத்தைத் தொடர்ந்து வழங்க ஒப்பந்தம் செய்து அதை அப்படியே கடைபிடித்தது.

ரத்தன் டாடாவின் இரக்க குணம் :

ரத்தன் டாடா மிகவும் இரக்க குணம் கொண்டவர். எனவே, தனது ஆண்டு வருமானத்தில் 66 சதவீதத்தை அறக்கட்டளைகளுக்கு அளித்துவிடுகிறார். ஆனால், இவர் உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.

ரத்தன் டாடா மிகவும் சாந்தமான மனிதர். ஆதரவற்ற குழந்தைகளுக்கும், மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கும் தனது தொண்டு நிறுவனம் மூலமாக பல உதவிகளைச் செய்து வருகிறார்.

இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் அந்த காலக்கட்டத்தில் அமலாக்கி அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு முன்னோடியாக விளங்குகிறது டாடா நிறுவனம்.

டாடா நிறுவனத்திற்கு இந்த சமூகத்தில் பல விமர்சனங்கள் எழுந்தன. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கான லட்சிய பாதையினை நோக்கி முன்னேறி கொண்டே இருக்கிறது, டாடா நிறுவனம்.

நமக்கு எந்த இடத்தில் அங்கீகாரம் மறுக்கப்படுகிறதோ அதே இடத்தில் நமக்கான அங்கீகாரம் தேடி வரும்படி நமது தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறது, இந்த நிறுவனம்.

டாடா நானோ உருவான கதை :

 ஒருநாள் ரத்தன் டாடா சாலையில் சென்று கொண்டிருந்தபோது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் நனைந்தபடி ஒரு குடும்பம் சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த ரத்தன் டாடா மிகவும் வருந்தினார். அப்போது ஏழைகளும் பயன்படுத்தக்கூடிய ஒரு காரை உருவாக்க வேண்டும் என முடிவு செய்தார். அப்போது உதயமானதுதான் டாடா நானோ கார்.

வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார்கள் வெளிவரும் என்று டாடா நிறுவனம் அறிவித்தப்போது உலகமே கேலி செய்தது. தரம் குறைவாயிருக்கும், சிறு அடிபட்டாலும் கார் நொறுங்கிவிடும் என பழித்தனர். இது நிச்சயம் சாத்தியமில்லை என்று அனைவரும் கூறினார்கள்.

 அதன்பின் 2003ஆம் ஆண்டு முதல் ரத்தன் டாடாவின் (நானோ கார்) கனவுக்கு செயல் வடிவம் கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 2005ல் இந்திய சாலைகளில் ஆட்டோக்களை ஓரம்கட்டி 'டாடா ஏஸ்" வாகனம், வணிக ரீதியிலான வெற்றி பெற்றதே இதற்கு ஊக்கம் கொடுத்தது. 2006ல் டாடா நானோ உற்பத்தி திட்டமிடப்பட்டது.

 2008ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற மோட்டார் வாகனப் பொருட்காட்சியில் நானோ காரை அறிமுகப்படுத்தியதன் மூலம் இவரது கனவு நனவானது. டாடா நானோ-வின் மூன்று மாதிரிகளை காட்சிக்கு வைத்தார்கள். ஒரு லட்சம் ரூபாய் விலையில் ஒரு காரை தயாரித்து தனது வாக்குறுதியை ரத்தன் டாடா நிறைவேற்றினார்.

 இந்திய சாலைகளில் நானோவை கம்பீரமாய் வலம்வர வைத்தது டாடா நிறுவனம். உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையை தனதாக்கியது நானோ. விலை குறைவு என்றாலும் தரத்தில் எந்தக் குறையும் இல்லாமல் வெற்றிகரமான மாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது நானோ. உலகின் அனைத்து கார் கம்பெனிகளும் டாடாவிற்கு தலை வணங்கின.

 'நானோ" என்பதன் பொருள் குஜராத்தி மொழியில் 'சிறிய" என்பதாகும். குஜராத்தி டாடா குழும நிறுவனர்களின் மொழியாகும்.
ரத்தன் டாடாவின் சொந்த வாழ்க்கை :

 ரத்தன் டாடா மிகவும் வெளிப்படையான மனிதர். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. 'நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?" எனக்கேட்டதற்கு '4 முறை கல்யாணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேறாமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளது" என்று சிரித்துக்கொண்டே வெளிப்படையாகச் சொன்னார் ரத்தன் டாடா.

 ஆனால், அவையெல்லாம் ரத்தன் டாடாவின் சிந்தனையை சிதறடிக்கவில்லை. அவரது தொலைநோக்குப் பார்வைகளை சிதைக்கவில்லை. முன்னேற்றம் என்பதை மட்டும் முழு மூச்சாய்க் கொண்டு, இன்றுவரை செயலாற்றிக் கொண்டிருக்கிறார் ரத்தன் டாடா.

ரத்தன் டாடா-விற்கு கிடைத்த விருதுகள்..!!

 மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட தாஜ் ஹோட்டல்கள் டாடா நிறுவனத்திற்கு சொந்தமானவையே. அவற்றை சரிசெய்வதற்காக பொது டெண்டர் விடப்பட்டபோது பாகிஸ்தானை சார்ந்த இரு பெரும் நிறுவனங்கள் அவற்றிற்கு விண்ணப்பித்திருந்தன. அந்த டெண்டரை தனதாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்நிறுவனங்களைச் சார்ந்த இருவர் ரத்தன் டாடாவைப் பார்க்க அவர் அலுவலகத்திற்குச் சென்றனர்.

 பாகிஸ்தானியர்கள் என்பதால் அவர்களை வெகுநேரம் காக்க வைத்த டாடா, பின்னர் முன் அனுமதி இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதன்பின் அவர்கள் இருவரும் அமைச்சரை அணுக, இதைப்பற்றி ரத்தன் டாடாவிடம் பேசியுள்ளார் அமைச்சர்.

 அதற்கு டாடா அளித்த பதில் நம்மை மெய்சிலிர்க்கச் செய்யும். 'உங்களுக்கு வேண்டுமானால் இது கூசாமல் இருக்கலாம். ஆனால், எனக்கு அது அவமானம்" என்று டாடா கூற, அதிர்ந்து போனாராம் அமைச்சர்.

 டாடா சுமோ கார்கள் வேண்டுமென்று பாகிஸ்தான் அரசு, மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை டாடா நிறுவனத்திற்குத் தர, 'பாகிஸ்தானுக்கு ஒரு கார் கூட கொடுக்க முடியாது" என்று ஆர்டரை நிராகரித்தார் ரத்தன் டாடா. பணம்தான் முக்கியம் என்று பலரும் அறத்தை மீறிச் செயல்பட்டாலும், பணத்தை விட தாய்நாடுதான் தனக்கு முக்கியம் என்று கருதுபவர் டாடா.

ரத்தன் டாடாவின் ஓய்வு :

 நாட்டின் மாபெரும் தொழில் குழுமமான டாடா நிறுவனத்தின் தலைவராக 50 ஆண்டுகள் பதவி வகித்த ரத்தன் டாடா 2012ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதியன்று ஓய்வு பெற்றார்.

 உலக சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்ததிலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு டாடா குழுமத்தின் பங்கும், ரத்தன் டாடாவின் பங்கும் அளப்பறியது.

விருதுகள் :

 படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் மூன்றாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம பூஷண் விருது ரத்தன் டாடாவுக்கு இந்திய அரசு வழங்கியது.

 2006ஆம் ஆண்டில், பொறுப்புடைய முதலாளித்துவத்திற்கான First விருது அவருக்கு வழங்கப்பட்டது.

 மார்ச் 2006ஆம் ஆண்டில், பொருளாதாரக் கல்விக்காக ராபர்ட் எஸ். ஹாட்பீல்ட் பெல்லோ விருதினை வழங்கி, கார்நெல் பல்கலைக்கழகம் டாடாவை கௌரவித்தது.

 2008ஆம் ஆண்டிற்கான NASSCOM உலகத் தலைமை விருதுகள் பெற்றவர்களில் இவரும் ஒருவர். இவ்விருதை 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியன்று மும்பையில் வழங்கினார்கள்.

 படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் இரண்டாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம விபூஷண் விருது, 2008ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதியன்று இவருக்கு வழங்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், இன்னும் பல விருதுகளையும், பரிசுகளையும் ரத்தன் டாடா பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக