இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
டேய் சார் வர்றார்டா வாம்அப் பன்ற
மாதிரி ஏதாவது செஞ்சுக்கிட்டே இருங்க. மனுசன் வந்தவுடனே ஏதாவது சொல்லி
திட்டிக்கிட்டே இருப்பாரு. நம்மள திட்டனும்ன்னா இந்த ஆளுக்கு அல்வா சாப்படுற
மாதிரின்னு, கபடி கேப்டன் நாகராஜ் சொன்னான்.
நல்ல பெரிய மைதானம். எல்லாப்
பள்ளிக்கூடங்களுக்கும் இப்படிப் பெரிய மைதானம் கிடைக்கிறதில்லை. பொதுவாக கிராமப்பகுதி
அல்லது சிறு நகரப் பகுதிகளில் இருக்கிற மேல்நிலைப்பள்ளிகளில் அதுவும் அரசுப்
பள்ளிகளில் நிறைய இடவசதிகள் இருப்பது பார்ப்பதற்கே பெருமையாக இருக்கும்.
இந்தக் காலத்தில் துவங்குகிற தனியார்
பள்ளிகளில் அரசு கேட்கிற அளவுக்குத்தான் இடவசதி இருக்கும். தாராளமாக இருக்காது.
மிகவும் பழமை வாய்ந்த பள்ளி. இங்கு பணிபுரிகிறவர் தான் உடற்கல்வி ஆசிரியர்
ராஜாமணி. மிகவும் கண்டிப்பானவர். மாணவர்களுக்கு விளையாட்டு சொல்லிக் கொடுப்பதில்
திறமையானவர். இவரின் நடையும், உடையும் எப்பொழுதுமே விரைப்பாகத்தான் இருக்கும்.
இவருக்கு கபடி விளையாட்டு மிகவும் பிடிக்கும். மற்ற விளையாட்டுகளுக்குக்
கொடுக்கிறதை விட கபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். ஆசிரியர்
மைதானத்திற்குள் நுழைந்து கம்பீரமாக நடந்து வருகிறார்.
கேப்டன் நாகராஜ் தலைமையில் ஒரு கபடி
டீம். பத்து முதல் பன்னிரென்டாம் வகுப்பு மாணவர்களில் நல்ல உடற்கட்டோடு ஆர்வம்
உள்ள பத்து மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சி கொடுத்து வருகிறார். சிறந்த
முறையில் கபடி பயிற்சி கொடுத்தாலும் மாணவர்களுக்கு இவரைப் பிடிப்பதில்லை. காரணம்
அந்தப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள்தான் தொன்னூறு சதவீதம் படிக்கின்றனர்.
ஆனால், ஆசிரியர் ராஜாமணியோ வெளியூரிலிருந்து வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்
சார்ந்தவர்.
கேப்டன் நாகராஜ் பன்னிரெண்டாம்
வகுப்பு படிக்கிறான். அவன் உடற்கல்வி ஆசிரியரை வேற்று மனிதனாகத்தான் பார்ப்பான்.
பயிற்சி ஆரம்பமானது முதலில் நாகராஜை பாடிப் போகச் சொன்னார். நாகராஜ் கபடி கபடி
என்று பாடிக் கொண்டிருக்க, டேய் சேகர் கேச் போடு விடாத. கேச் மிஸ் ஆகக்கூடாது.
லெப்ட் கார்னர் கொஞ்சம் இறங்கி வா.
சிங்கிளா இறங்கி வராத. சப்போட்டோடு
செயின்போட்டு வா. ஆம்.. அப்படித்தான்... அப்படித்தான் வெரிகுட் வெரிகுட்.. ரைடர் அவுட்
என்று விசிலடித்தார் ராஜாமணி சார். டேய் நாகராஜ் என்னடா விளையாடுற. லெப்ட் இறங்கி
வர்றான்ல. நீ ஏன் ரைட்ல ஏறிப் பாடுற. கவனம் வேண்டாமா. நாகராஜ் மனசுக்குள்ளே
திட்றான். ஆமா கேச்சோடு கேச் போடுன்னு அவனுகளுக்குச் சப்போட்டு பன்னிட்டு இப்போ,
என்ன விளையாடுறன்னு என்னைக் கேக்கிறாரு.
அடுத்து குமார் பாடிப் போப்பா.
ஒருத்தனையாவது அடிக்காம வரக்கூடாது என்று குமாரைத் தட்டிக் கொடுத்து பாடிப் போகச்
சொன்னார். குமார் பாடிப் போனான். சீறிப் பாய்ந்தவனைப் பிடிக்க முயன்றவனின் கையைத்
தொட்டுவிட்டு திரும்பினான். என்னடா பிடிக்கிற. கபடி விளையாடுறியா இல்ல தொட்டுப்
பிடிச்சி விளையாடுறியா என்று திட்டினார் ஆசிரியர். சில சமயங்களில் திட்டுவதோடு
கையால் அடிக்கவும் செய்தார்.
மாலை மணி ஆறாகிவிட்டது பயிற்சியை
முடித்துக் கொண்டார். அனைவரையும் அருகில் அழைத்து பயிற்சியின் போது நடந்த சரி எது
என்ன தவறு நடந்தது என்பது பற்றி ஆலோசனை வழங்கினார். இதுவரை நீங்க விளையாடியது
மாவட்டத்தில் உள்ள பள்ளிகளோடு மட்டும் தான். அடுத்த வாரம் நடக்கவிருப்பது மாநில
அளவிலான போட்டி. பெரிய பெரிய இங்கிலிஸ் மீடியம் பள்ளிகள் இதில் கலந்து கொள்ளப்
போகிறது. நம்மைப் போல அரசுப் பள்ளிகளும் கலந்து கொள்கிறது. அதனால சிறப்பான ஆட்டத்த
வெளிப்படுத்தனும். சும்மா விளையாட்டுத்தனமா இருக்கக் கூடாது.
நாகராஜ் உங்கிட்ட இன்னும் நிறைய
மாற்றம் வர வேண்டும். அடுத்த வாரம் நடைபெற இருக்கிற மாநில அளவிலான டோரனமென்ட்
முடிகிற வரையில் உங்கள் அனைவருக்கும் தூங்கப் போகும்போது கூட கபடி நினைப்பில் தான்
இருக்க வேண்டும். கனவிலும் கபடி தான் வர வேண்டும். உங்களுடைய உளரலும், குறட்டையும்
கூட கபடி கபடி என்று தான் இருக்க வேண்டும் என்றார். அதுமட்டுமல்ல அண்ணனுக்குக்
கல்யாணம், அக்காளுக்குக் கல்யாணம், அத்த மகளுக்குக் கல்யாணம்ன்னு சொல்லி எவனும்
லீவு போட்டுறாத.
சரி சார்... ஒருத்தன் நாளைக்கு
காலையில முதல் பீரியட் உங்க உங்க கிளாஸ் டீச்சர்ஸ்ட்ட சொல்லிட்டு கிரௌண்ட்டுக்கு
வந்துருங்க. வந்தவுடனே கிரௌண்ட நாலு சுற்று சுற்றனும். சோம்பேறித்தனமா
இருந்திடாதீங்க. சரி சார்.... ஒருத்தன், ஓகே சார் இன்னொருத்தன். சார் நாளை மறுநாள்
ஊர்ல கொடைவிழா இருக்கு சார். ஆதனால அன்னைக்கு மட்டும் லீவு வேணும். நாகராஜ்
மெதுவாகக் கேட்டான்.
ஊர்ல எது வேணும்ன்னாலும் நடக்கட்டும்
அதுக்கும் பள்ளிக்கூடத்திற்கும் சம்பந்தமில்லை. அதுவும் கபடி டீமுக்கு லீவே கிடையாது
சொல்லிவிட்டு போய்க் கொண்டிருந்தார் ராஜாமணி சார். அவர் போவதையே பார்த்துக்
கொண்டிருந்த கபடி டீம் மெல்ல சலசலக்க ஆரம்பித்தது. டேய் என்னங்கடா இப்படி
சொல்லிட்டுப் போறாரு. கொடை விழாவ கொண்டாட குரூப் ட்ரெஸ் எடுத்தாச்சு. என்னவெல்லாம்
கனவு கண்டுட்டு இருக்கோம். ஒரே வார்த்தையில கனவ கலைச்சிட்டு போய்ட்டாரு, என்றார்
ஒருத்தன்.
டேய் அவரு கனவ கலைச்சிட்டு போகலைடா,
சாதி வெறிய காட்டிட்டுப் போறாரு. இதே மாதிரி அவங்க சாதிப் பசங்ககிட்ட பேசுவாரா.
எப்படி கடுப்படிச்சிட்டுப் போறாருன்னு பாரு. நான் பலமுறை பார்த்துட்டேன்டா,
நம்மளையும், நம்மாளையும் பார்த்தா இந்த ராஜாமணி வாத்தியாருக்கு ரொம்ப இளப்பமாத்
தெரியுது என்றான் நாகராஜ். பள்ளி அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்த தலைமை
ஆசிரியர், எதிர்பட்ட ராஜாமணி ஆசிரியர் சந்தித்துக் கொண்டனர். ராஜாமணி சார்... கபடி
கோச்சிங் எப்படி போய்க்கிட்டு இருக்கு, பசங்க ஒத்துழைப்புக் கொடுக்கிறாங்களா?
என்றார் தலைமை ஆசிரியர்.
பரவாயில்ல சார், இப்போதான் சில
நுணுக்கங்களை புரிஞ்சிருக்காங்க. தொடர்ந்து பயிற்சி கொடுத்தா ஸ்டேட் லெவல்
காம்படிசன்ல நுழைய வாய்ப்பிருக்கு. ராஜாமணி சார் முழுசா அவங்கள நம்பிடாதீங்க.
எனக்கே தெரியும் அவனுங்களப்பத்தி. கடைசி நேரத்தில கால வாரி விட்டுறுவானுக.
எனக்கும் கொஞ்சம் தூரத்து சொந்தகாரனுவதான். அவ்வளவு சீக்கிரம் உங்க
சின்சீயாரிட்டிய நம்பிடமாட்டானுக. இவனுக அப்பன், தாத்தன் எல்லாம் எனக்குத்
தெரியும். இருக்கட்டும் சார். அதுக்காக நான் என் கடமைய செய்யாம இருக்க முடியுமா?
இந்த டோரனமென்ட்ல ஜெயிச்சிட்டாங்கன்னா, ரெண்டு பேராவது ஸ்டேட் பிளேயர்ராக தேர்வாக
வாய்ப்பிருக்கு. அதுமட்டுமல்ல அதுக்கப்புறம் அவங்க வாழ்;க்கையே மாறிடும். என்றார்
ராஜாமணி.
சார் உங்க எண்ணம் மட்டும் உயர்வு
அல்ல. உங்க மனசும் மிக உயர்ந்ததாக இருக்கு. உண்மையிலேயே எனக்கு சந்தோசமாக இருக்கு.
சார் இந்த விசயத்தில உங்களுக்கு என்ன உதவி வேணும்ன்னாலும் நான் செய்யத் தயாரா
இருக்கேன் என்றார் தலைமை ஆசிரியர். நல்லது சார். நம்ம பசங்க நல்லா கோ ஆப்ரேட்
பண்ணினாலே வெற்றிய நெருங்கின மாதிரி தான் என்றார் ராஜாமணி சார். அது சரி சார். அதே
சமயம் நாம பீல்டுலயும் நிறைய சவால்கள சந்திக்க வேண்டியதிருக்கும். உங்களுக்குத்
தெரியாதது இல்ல. இருந்தாலும் சொல்றேன். நாம எதரிகொள்கிற ஸ்கூல் எல்லாம் மெட்ரிக்
ஸ்கூல், சி.பி.எஸ்.சி. ஸ்கூல். அவங்க ஜெயிச்சா அது அவங்களுக்கு முதலீடு அதனால எல்லாவிதமான
குறுக்கு வழியையும் கையாளுவாங்க.
ஆமா சார் உண்மை தான். காலேஜ்
பசங்களக்கூட டீம்ல் இறக்கி விட்டு ரௌடித்தனம் பண்ணியிருக்காங்க. சில சமயங்களில்
கடுமையாத் தாக்கவும் செய்வாங்க. அதனாலத்தான் நான் நம்ம டீம் பிளேயர்ஸ்க்கு
அடிக்கடி சொல்றது, எண்ணுமும் செயலும் ஒன்னாயிருக்கனும். அதே சமயம் வெற்றியோ
தோல்வியோ உணர்ச்சிவசப்படக்கூடாது. நிதானம் அவசியம் என்று. என்றார் ராஜாமணி சார்.
சார் உங்கலாள நம்ம பள்ளிக்கு பெருமையும், மாணவர்களுக்கு நல்ல எதிர்காலமும்
கிடைத்தால் அதைவிட என்ன சார் இருக்கு என்று உருகினார் தலைமை ஆசிரியர்.
நாளை விளையாட்டுப்போட்டி ஆரம்பிக்க
இருக்கின்றது. அரசுப்பள்ளிகள், சி.பி.எஸ்.சி, மற்றும் மெட்ரிக் பள்ளிகள் கலந்து
கொள்கின்றன. அதற்காக மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் போட்டிக்காக
பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ராஜாமணி சார் கபடி டீமை மைதானத்திற்கு
அழைத்துச் செல்கிறார். பயிற்சி தான் வெற்றிக்கு முதல்படி என்று அடிக்கடி
மாணவர்களுக்கு சொல்வார். 'முயற்சி முடிந்தவரை அல்ல... வெற்றி கிடைக்கும் வரை"
என்பார்.
ஆசிரியர் சுப்பையா, இவர்
உள்ளுர்காரர். ஏனோ ராஜாமணி என்றால் இவருக்குப் பிடிப்பதில்லை. காரணம் மனதில்
வேரூன்றி இருக்கும் இன உணர்வு. இன உணர்வு மூச்சுக் காற்றாக உள்ளே வந்தால் குணம்
வெப்பக் காற்றாகத் தான் வெளிப்படும். அதனால் தான் உடன் பணிபுரியும் மற்ற
ஆசிரியர்களில் தன் இனத்தாரிடமே இயல்பாகப் பேசுவார். மற்றவர்களிடம் குறை
காண்பதிலேயே தன்னுடைய பொன்னான நேரத்தை வீணடிப்பார். அப்படி இருக்கும் போது ராஜாமணி
சாரை எப்படி இவர் பார்ப்பார் என்பதற்கு யாரும் விளக்கம் சொல்லத் தேவையில்லை.
ராஜாமணி சாரைப் பற்றி யாரிடமாவது எதையாவது பேசவேண்டும் போல் இருந்தது சுப்பையா
சாருக்கு. ஏனென்றால் இப்போது எல்லோரும் ராஜாமணி சாரையும், கபடி டீமையும் பற்றி
தான் பேசுகிறார்கள். வெற்றியோ தோல்வியோ மனுசன் போட்டின்னு வந்துட்டா தீயா வேலை
செய்வாரு. அதுல உள் நோக்கம் இருக்கிறதோ இல்லையோ.... உள்நோக்கம் கற்பிக்கிறதுல
சுப்பையா சாருக்கு உள்நோக்கம் கண்டிப்பாக இருக்கும்.
தமிழாசிரியர் இனியன் எதிரில் வருவதைப்
பார்த்ததும் சுப்பையா சார் லேசாக இளித்தார். அது இயல்பாக இல்லை. இருந்தாலும்
தமிழாசிரியர் இனியன் புன்முறுவலோடு, என்ன சுப்பையா சார் எப்படி இருக்கீங்க.
ஏதேனும் விசேஷம் உண்டா என்றார். என்ன விசேசம். ஒன்னாம் தேதியானால் சம்பளம்.
அஞ்சாந்தேதிக்குள் பை காத்தாடுது. அப்புறம் நாள எண்ணுறதுலயே மாசம் கடக்குது. ஆனா
பாருங்க சார் இந்த ராஜாமணி இருக்காரே, அவருக்கு எங்க இருந்துதான் பணம் வருமோ,
மனுசன் மாசம் முழுக்க ஜாலியாத்தான் இருக்கார். எனக்கு என்னமோ அவரு மேல ஒரு டவுட்டு
இருக்கு.
அவரு மாசம் முழுக்க ஜாலியா கலகலப்பா
இருக்கிறதுல உங்களுக்கு என்ன டவுட்டு வந்தது என்றார் தமிழாசிரியர். அதாவது சார்,
உங்களுக்கே சில விசயம் தெரியாதுன்னு நினைக்கிறேன். கபடி, புட்பால், வாலிபால்ன்னு
கோச்சிங் குடுக்கிறாரே எங்கேயாவது போய் கோப்பைய வாங்கினேன், அல்லது சீல்டு
வாங்கினேன்னு ஏதாவது நடந்திருக்கா, இல்ல. காரணம் என்ன? இவரு ஒரே கல்லில ரெண்டு
மாங்கா அடிக்கிறவரு. ஒன்னு, சிறப்பா பயிற்சி கொடுக்கிறது மாதிரி ஒரு பில்டப்பு
கொடுக்கிறது. ஆனால், உண்மையாக இந்த டீம் ஜெயிக்கனும்ன்னு நினைக்கிறது இல்ல. காரணம்
இந்த தாழ்ந்த சாதிக்காரப் பயலுக வாழ்க்கையில முன்னேறி விடக்கூடாதுன்னு வைராக்கியம்.
இன்னொன்று சி.பி.எஸ்.சி. ஸ்கூல், மெட்ரிக் ஸ்கூல் பிரின்ஸ்ஸிபாலிடம் பணம்
வாங்கிட்டு நடுவர்கள கண்டுக்கிறது இல்ல. ஆக இவருக்கு காரியமும் நடக்குது, காசும்
கிடைக்குது.
வாய் பிளந்து ஆச்சரியமாகக் கேட்டுக்
கொண்டிருந்த தமிழாசிரியர், அப்படியா சார். அதானப் பார்த்தேன், மனுசன் காலை,
மாலைன்னு நேரம் கூடப் பாக்காம கோச், கோச்ன்னு பிளேகிரௌன்ட்லயே கிடக்குறாரு. சார்
அதுமட்டுமல்ல, இவரு பலே கில்லாடி... ஹெட்மாஸ்டரையே கைக்குள்ள போட்டுக்கிட்டாருன்னா
பாத்துக்கோங்களேன் என்றார் சுப்பையா.
அட ஆமா சார். நாலு நாளைக்கு முன்னாடி
கூடப் பார்த்தேன். ஹெட்மாஸ்டரும், இந்த ராஜாமணியும் ரொம்ப நேரமா பேசிகிட்டு
நின்னாங்க என்று வியப்பானார் தமிழாசிரியர் இனியன். இப்பவாவது உங்களுக்குப்
புரிஞ்சுதே சார், என்றவரின் கண்ணில் பட்டான் கபடி டீம் கேப்டன் நாகராஜ். சுப்பையா
சார் அழைக்க நாகராஜ் அருகில் வந்து வணக்கம் சார் என்றான். கபடி டோரனமென்ட்
என்னைக்குடா நாகராஜ், என்றார் சுப்பையா. நாளைக்கு சார் என்றான் நாகராஜ்.
கோச்செல்லாம் எப்படிடா போய்க்கிட்டு
இருக்கு. இந்த தடவையாவது ஜெயிப்பீங்களா என்றார். கோச் நல்லா போய்கிட்டு இருக்கு
சார். இந்த தடவை ஜெயிக்க வாய்ப்பு இருக்கு சார். எந்த வாய்ப்பு இருந்தாலும் இந்த
வாத்தியார் ராஜாமணி உங்களை ஜெயிக்க விட மாட்டார்டா. ஏன்னா இதுல ஜெயிச்சா,
உங்களுக்கு சர்டிபிகேட்டு தருவாங்க. அத வச்சி போலிஸ் வேலைல சேர்த்துக்குவாங்க.
அப்படியா சார். போலிஸ் வேலைல சேர்றது தான் என் கனவு சார். டேய் நீங்க ஜெயிச்சா
உங்களுக்கு போலிஸ் வேலை கிடைக்கும். அவருக்கு? சொல்லுடா அவருக்கு என்ன கிடைக்கும்?
நாகராஜ் ஒன்னும் புரியாமல் சுப்பையா
சாரையே பார்த்தான். ஏண்டா அப்படி பாக்குற. நம்ம ஆளுகன்னாலே ராஜாமணி வாத்தியார்
ஆளுகளுக்குப் பிடிக்காது. பிறகு எப்படிடா நமக்கு செய்வாருன்னு நம்புறது.
உசுப்பேத்தினார் சுப்பையா சார். எரிகிற நெருப்பில எண்ணெய்யை வார்த்த மாதிரி
இருந்தது. நாகராஜுன் முகம். ஆமாம் சார் நம்ம ஊரு கொடைவிழாவுக்கு கூட லீவு
தரமாட்டேன்னு சொல்லிட்டாரு.
டேய் நாகராஜ் நல்லாத் தெரிஞ்சிக்க,
மாவாட்ட அளவில ஜெயிக்கிறதுக்கு நடக்கிற பேரத்தை விட மாநில அளவில் நடக்கிற
விளையாட்டுக்கு அதிகமான ரூபாய் பேரம் பேசப்படும். அதனால அவரு எங்க போராரு
யார்யார்கிட்டப் பேசுறாரு, என்ன பேசுறாருன்னு கொஞ்சம் பார். இது உங்க வாழ்க்கை
பிரச்சனைடா. விளையாட்டுத்தானேன்னு விளையாட்டா இருந்திடாத.
சரி சார் சொல்லிட்டீங்கில்ல, நாங்க
கவனமா இருந்துக்கிறோம். மறுநாள் ராஜாமணி சார் கபடி டீமை ஒரு வேனில் அழைத்துக்
கொண்டு போனார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள்
வந்திருந்தனர். விழாக்கோலம் பூண்டது பள்ளி மைதானம். மாணவர்கள் குழு குழுவாக நின்று
உடற்பயிற்சி செய்வதும், பயிற்சியளித்த உடற்பயிற்சி ஆசிரியரிடம் அறிவுரையும்,
ஆலோசனையும் கேட்பதுமாக இருந்தனர். விளையாட்டுப் போட்டியின் வர்ணனையாளர்
ஒலிபெருக்கியில் மாணவர்களுக்கு, அங்கு இருக்கும் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள
அறிவுறுத்தி கொண்டிருந்தார்.
ராஜாமணி சார் தமது பள்ளி
மாணவர்களுக்கு காலைச் சாப்பாடு வாங்கி வரச் செய்து தாமும் சாப்பிட்டுக்
கொண்டிருந்தார். நல்ல பெரிய மைதானம். ஓரங்களில் வரிசையாக வேப்பமரங்கள். இதமாக
இருந்தது. ராஜாமணி சார் சாப்பாட்டு கையைக் கழுவிக் கொண்டிருக்கும் போது, என்ன
ராஜாமணி சார் எப்படி இருக்கீங்க என்ற குரல் வந்தப் பக்கம் திரும்பி பார்த்து, ஹேய்
நான் அப்பவே எதிர்பார்த்தேன், என்னடா இன்னும் நம்ம ஆளக் காணோமேன்னு, என்றவாறு
இருவரும் சற்றுத் தள்ளிப் போய் பேசிக்கொண்ருந்தனர். நாகராஜும் மற்ற மாணவர்களும்
ஆசிரியர் ராஜாமணியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து ராஜாமணி
சார் வந்தவரை அனுப்பிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்பி வந்தார்.
விளையாட்டுப் போட்டி
ஆரம்பித்துவிட்டது. மாணவர்கள் உற்சாகமாக கைத்தட்டி விளையாட்டை ரசித்துக்
கொண்டிருந்தனர். ராஜாமணி சார் தனது டீம் வீரர்களுக்கு யுக்திகளை சொல்லிக்
கொண்டிருந்தார். மாணவர்கள் கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். டேய் நாகராஜ்,
வெற்றி தான் நமது லட்சியம் கோப்பையை நாம் தான் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை
இருக்க வேண்டும், என்று உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது மீண்டும் அந்த
ஆசிரியர், அவர்தான் சாப்பிடும் போது வந்தாரே, அவர் பெயர் முகுந்தன். அவர் ஒரு
மெட்ரிக் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணி செய்கிறார்.
அவருடன் வந்த மாணவர்கள் சற்றுத் தள்ளி
நின்று கை மற்றும் காலை ஆட்டியும், நிமிர்ந்தும் குனிந்தும் தங்களைத்
தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர் விளையாடுவதற்கு. அவர்களைப் பார்த்தால் மேல்நிலைப்
பள்ளி மாணவர்கள் போல் தெரியவில்லை. கல்லூரி மாணவர்கள் போல் தெரிகிறது. அப்படி
உடற்கட்டு. முகுந்தன் தனது மாணவர்களைக் காட்டி பெருமை பேசிக் கொண்டிருந்தார்
ராஜாமணி சாரிடம். ஆசிரியர் முகுந்தனைப் பார்க்கும் போதெல்லாம், நாகராஜுக்கும்
அவனது டீம் வீரர்களுக்கும் ஏதோ செய்தது. லேசான எரிச்சலும், கோபமும் வருவதைத்
தடுக்க முடியவில்லை.
ஒலி பெருக்கியில், கேப்டன் நாகராஜ்
தனது அணி வீரர்களுடன் மைதானத்திற்கு வருமாறும், அவர்களை எதிர்த்து விளையாட
மணிகண்டன் தலைமையிலான அணி வீரர்கள் ஆடுகளத்திற்கு வருமாறு தங்களை ஆவலோடு
அழைக்கிறோம் என்று ஒலித்தது. நாகராஜ் தயாரானான் டீம் வீரர்களோடு. ஆசிரியர் ராஜாமணி
முன்னே செல்ல, தொடர்ந்து டீம் சென்றது. களத்தில் இறங்கும் பேர்து சுற்றி நின்ற
மாணவர் கூட்டம் கைத்தட்டி ஆரவாரம் செய்தது. தொடர்ந்து எதிரணியும் களத்தில் இறங்க
ஆரவாரம் அதிகமானது. நடுவர் இரு அணி கேப்டன்களையும் அழைத்து சைடா, ரைடா கேட்டு
விளையாட்டைத் துவங்கினார்.
விளையாட்டு சூடு பிடித்தது. நாகராஜ்
அணி முதல் பாதியில் ஜந்து புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தது. முதல்
பாதி இடைவேளையில் ராஜாமணி சார் மகிழ்ச்சி பொங்க தனது மாணவர்களுடன் கோட்டுக்கு
வெளியே நின்று கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார். முன்னணியில் இருக்கும் போது
விளையாட்டை எப்படி இறுதி வெற்றிக்கு நகர்த்தவது, தொடர்ந்து முன்னணியில் இருக்க
என்ன செய்ய வேண்டும், என்று கூறிக் கொண்டிருந்தார். இரண்டாம் பாதி விளையாட்டுத்
தொடங்கியது. எதிர் அணியினர் ஆக்ரோஷமாக விளையாட ஆரம்பித்தனர். அதிரடி ஆட்டம் தான்
வெற்றிக்கு வழி என்பதைத் தெரிந்து வைத்திருந்தனர். ஆனால், நாகராஜுன் அணி மிக
கவனமுடன், நிதானமாக ஆடினர். இறுதியாக நாகராஜ் அணி வெற்றி பெற்றது. இதனால் கால்
இறுதிக்கு தகுதி பெற்றது.
கால் இறுதிக்கு வெற்றி பெற்ற அணிகள்
இனி நாளை வந்தால் போதும் என்ற அறிவிப்பை ஒலிபெருக்கியில் அறிவிக்க ராஜாமணி சார்
தனது மாணவர்களை அழைத்துக் கொண்டு போய்விட்டார். மீண்டும் மறுநாள் விளையாட்டு
ஆரம்பித்தது. முகுந்தன் சார் ராஜாமணியைப் பார்த்து வந்து, சார் எங்க அணியும் கால்
இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்று அரை இறுதியில் எப்பபடியும் நாங்க தான்
வெற்றி பெறுவோம் ஏனென்றால் எங்களோடு ஆடிய அணியை இருபது புள்ளி வித்தியாசத்தில்
தோற்கடித்துவிட்டோம், என்று பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். நாகராஜ் முகத்தைத்
திருப்பிக் கொண்டான்.
நாகராஜ் அணியை விடையாட ஆடுகாளத்திற்கு
அழைக்க, ஆடுகளத்திற்குள் நுழைந்தார்கள். வெற்றி பெற்ற அணி என்பதால் கரகோஷம்
எழுந்தது. எதிர் அணியும் களத்திற்குள் இறங்க, பார்வையாளர்கள் ஆர்வம் மிகுந்து
போட்டியைக் காணத்தயாரானார்கள். போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. ராஜாமணி
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுவரை மூன்று அணிகளுடன் மோதி வெற்றி பெற்றாகிவிட்டது.
இனி நடக்கப் போவது தான் இறுதிப் போட்டி. இறுதிப் போட்டியில் யாருடன் மோதுவது
என்பது தொடர்ந்து வரும் விளையாட்டில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி தான்
என்பது உறுதியாகிவிடும்.
இறுதிப் போட்டிக்கு சிறந்த விளையாட்டை
மட்டும் வெளிப்படுத்தினால் போதாது. அசைக்க முடியாத மன உறுதியும் இருக்க வேண்டும்.
அதைத்தான் இப்போது ராஜாமணி சார் தனது மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்துக்
கொண்டிருந்தார். பயிற்சியுடனே நாம் தான் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை
ஊட்டினார். முகுந்தன் தனது பள்ளி மாணவர்களுடன், ராஜாமணியைப் பார்த்து வந்து
கொண்டிருந்தார். முகுந்தன் சாரைப் பார்த்ததும் நாகராஜுக்கு, இவர் ஏன்
தேவையில்லாமல் இங்கேயே வருகிறார், என்று மனதுக்குள் சலித்துக் கொண்டான். அருகில்
வந்ததும், ராஜாமணி சார், இறுதிப் போட்டியில் மோதப் போவது நம் இருவருடைய அணி தான்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் போட்டி நடக்கும் என்று நடுவர் சொன்னார். கோப்பையை
வெல்லப் போவது யார்? இது தான் இப்போது எல்லோருடைய பேச்சாக இருக்கிறது. ராஜாமணியா?
அல்லது முகுந்தனா? அரசுப் பள்ளியா? மெட்ரிக் பள்ளியா?
நாகராஜ் இதைக் கேட்டதும் சற்று
தயக்கமாகப் பார்த்தான். ஏனென்றால் தங்களோடு இறுதிப் போட்டியில் மோதப் போகும்
அணியில் உள்ள மாணவர்கள் பள்ளி மாணவர்கள் போல் இல்லை. கல்லூரி மாணவர்கள் போல்
இருந்தனர். அவர்களுடன் தன்னுடைய அணியினரைப் பார்த்தான். லேசாகப் பயம் கவ்விக்
கொண்டது, இருந்தாலும் நாகராஜ் பயத்தை வெளிக்காட்டவில்லை. தனது அணியினருடன் போட்டி
எப்படி அமையும் என்பது பற்றி குழுவாக நின்று ஆலோசனை செய்தான். திடீரென ஏதோ சிந்தனை
வந்து திரும்பிப் பார்த்தான். அங்கே தனது பள்ளி ஆசிரியர் ராஜாமணியும், முகுந்தனும்
தனிமையில் நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். திடுக்கிட்டான்.
தனது ஆசிரியர் விலைபோய் விட்டாரோ. இது
பற்றி தனது அணியினருடன் பேசினான். ஆமாடா நாகராஜ், அந்த முரட்டு வாத்தியார்
முகுந்தன் வந்தாலே நம்ம ராஜாமணி சார் அவரோடு தனியா போய் விடுகிறார். போன வருசமும்
அந்த முரட்டு முகுந்தன் ஸ்கூல் தான் கோப்பையை வென்றார்கள். ஏதாவது கோல்மால் செய்து
கோப்பையை வெல்வது தான் அவருடைய நோக்கம். அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமனாலும் செலவு
செய்வார். இறுதிப் போட்டிக்கு தேர்வான இரண்டு அணிகளும் ஆடுகளத்திற்கு வருமாறு ஒலி
பெருக்கியில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆசிரியர் ராஜாமணியும், ஆசிரியர்
முகுந்தனும் உடனடியாக தனது பள்ளி கபடிக் குழுவை ஆடுகளத்திற்கு அழைத்து வருமாறு
தங்களை அன்புடன் கேடடுக் கொள்கிறோம். ஒலிபெருக்கி அலறியது.
வெற்றிக் கோப்பைக்கான இறுதிப் போட்டி
தொடங்கியது. நடுவர் தலையா, பூவா போட்டு விளையாட்டைத் தொடங்கி வைத்தார். இரண்டு
அணிகளும் முழு பலத்தையும் பிரயோகிக்க வேண்டிய நேரம். அவர்களை விடப் பார்வையாளர்கள்
தான் டென்சனாக இருப்பதாகத் தெரிகிறது. இரண்டு அணிகளும் சமமாக ஆடியது. எந்த
அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இப்போது போட்டியின் நிலவரம் அரசுப்
பள்ளியா? மெட்ரிக் பள்ளியா? அரசுப் பள்ளி புள்ளி எடுத்தால் ஒரு சாளரும், மெட்ரிக்
பள்ளி புள்ளி எடுத்தால் ஒரு சாளரும் கைத்தட்டி, விசிலடித்து ஆதரவு தெரிவித்தனர்.
முதல் பாதி விளையாட்டு முடிந்தது. நாகராஜ் அணி அதான் அரசுப் பள்ளி இரண்டு
புள்ளிகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தது. அதனால் முகுந்தன் ஆசிரியர் படு
உற்சாகமாகக் காணப்பட்டார்.
இரண்டு ஆசிரியர்களும் தனது
மாணவர்களுடன், இனி எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றி ஆலோசனை வழங்கிக்
கொண்டிருந்தார்கள். இன்னும் பதினைந்து நிமிட விளையாட்டுத்தான் இருக்கிறது. வெற்றிக்
கோப்பை யாருக்கு என்பது தெரிந்துவிடும். இப்படிப்பட்ட நேரத்தில் பின்தங்கியுள்ள
அணி அதிரடி ஆட்டத்தையும், முன்னணியில் உள்ள அணி நிதானமான ஆட்டத்தையும்
வெளிப்படுத்துவது இயல்பு.
இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பமானது.
முதலில் ரைடு போகும் வாய்ப்பு நாகராஜ்க்கு. நாகராஜ் ரைடு போனான். மிகக் கவனமான
ஆட்டம் புள்ளியைக் கொடுத்துவிடக்கூடாது என்பதில் மெட்ரிக் அணி பின்வாங்கியது.
அதனால் நாகராஜ் முன்னேறிச் சென்று லாவகமாக போனஸ் கோட்டைத் தொட்டு ஒரு புள்ளி போனஸ்
புள்ளி பெற்றான். கரகோஷம் காதைக் கிழித்தது. இப்போது மெட்ரிக் பள்ளி ரைடு. புள்ளி
எடுக்கவிட்டாலும் பரவாயில்லை, பிடிபட்டு விடக்கூடாது என்பதில் தெளிவு.
இரண்டு அணிகளும் ஒருபுள்ளி
வித்தியாசத்தில் தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தது. அரசுப் பள்ளி ஒரு புள்ளி
எடுத்தால் மெட்ரிக் பள்ளியும் ஒரு புள்ளி எடுத்தது. அதனால் தொடர்ந்து மெட்ரிக்
பள்ளி ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தது. கடைசி ஒரு நிமிட ஆட்டம்.
தலா ஒரு ரைடு மட்டுமே சாத்தியம். மெட்ரிக் பள்ளி ரைடு வைத்தார்கள்.
பிடிபடவுமில்லை, புள்ளி எடுக்கவும் இல்லை. இது கடைசி ரைடு. நாகராஜ் ரைடு அதிரடியாக
ஒரு புள்ளி எடுத்தால் இரண்டு அணிகளும் சமபுள்ளி அதனால் விளையாட்டு ட்ராவில்
முடியும். அதன் பிறகு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு ரைடு வழங்குவார்கள். எந்த அணி
ஒரு புள்ளி எடுக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதுதான் ரூல்.
கடைசி ரைடாக நாகராஜ் சென்றான்.
நாகராஜ் யாரையும் அடிக்கவில்லையென்றால் மெட்ரிக் பள்ளி வெற்றி பெற்றதாக
அறிவிக்கப்படும். அதனால் அவர்கள் பிடிக்க முயற்சி செய்யாமல் பின்னால் தள்ளி
தள்ளிப் பேனார்கள். பின்னால் தள்ளிப் போய் போனதால் ஒரு மாணவன் கோட்டில்
மிதித்துவிட்டான். அவனை நாகராஜ் மேலும் நெருங்க, நாகராஜை பிடிக்க முற்பட்டவனை வேறொருவனை
தொட்டுவிட்டு வெற்றியுடன் திரும்பினான். நடுவர்களில் ஒருவர் ஒரு புள்ளியைக்
காட்டினார். மற்றொரு நடுவரோ இரண்டு புள்ளிகளைக் காட்டினார். இதனால் கோபம் அடைந்த
ராஜாமணி சார் இரண்டு புள்ளி, வெற்றி, வெற்றி, என்று கத்தினார். உடனே அருகில் நின்ற
முகுந்தன் ராஜாமணியைப் பார்த்து ஒருமையில் நீ என்ன சொல்வது என்று சத்தமாக
கத்தினார்.
நடுவர்கள் இருவரும்
குழம்பிவிட்டார்கள். பார்வையாளர்கள், இரண்டு புள்ளி, இரண்டு புள்ளி, அரசுப்பள்ளி
வெற்றி, அரசுப் பள்ளி வெற்றி என்று கோஷம் போட்டார்கள். நடுவரிடம் முகுந்தன்
முறையிட்டார். மேலும் இரு அணிகளுக்கும் ஒவ்வொரு ரைடு கொடுங்கள் என்று கேட்க,
நடுவர்கள் இது பற்றி ஆலோசித்தார்கள். ஆனால், ராஜாமணியோ முடியாது... முடியவே
முடியாது. எங்கள் அணி வெற்றி பெற்றுவிட்டது. வெற்றி பெற்றதாக அறிவியுங்கள் என்று
நடுவர்களிடம் கேட்க, முகுந்தன் நீ என்னடா சொல்றது, என்று ராஜாமணியின் சட்டையைப்
பிடித்து அடிக்க ராஜாமணி நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே நாகராஜ் முகுந்தன்
ஆசிரியரை அடிக்கப் பாய்ந்து வந்தான். சுதாரித்துக் கொண்ட ராஜாமணி சார் நாகராஜை
கட்டிப் பிடித்து, டேய் நீ வெற்றி பெற்றவர். ஒரு ஆசிரியரை அடித்து கெட்ட பெயர் வாங்கிடாதே
என்று அலாக்காய் தூக்கி வெளியே கொண்டு வந்தார்.
'சார் உங்க மேல் கை வைத்தவன் கையை
ஒடிக்காமல் விடக்கூடாது. எங்களை விடுங்க சார்". என்று முரண்டு பிடித்தான்.
அப்போது ஒலி பெருக்கி முழங்கியது. கேப்டன் நாகராஜ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில்
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. வெற்றி பெற்ற அரசுப் பள்ளிக்கு எங்களது
பாராட்டுக்கள். மேலும் அப்பள்ளியின் சார்பாக விளையாடிய கேப்டன் நாகராஜ்க்கும்,
உடற்கல்வி ஆசிரியர் ராஜாமணிக்கும் எங்களது பராட்டுக்கள். கரவொலி கோரசாக
எழும்பியது.
ராஜாமணி சார் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
தடுமாறி நடந்து வரும் கைக் குழந்தையைத் தாய் இரு கைகளையும் நீட்டி தூக்க
முற்படுவது போல் ஆசிரியர் ராஜாமணி கண்களில் நீர் முட்ட இரு கைகளையும் நாகராஜை
நோக்கி நீட்டினார். ஆனால், நாகராஜ் தலைமையில் மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து
ஆசிரியர் ராஜாமணியைத் தூக்க அவரின் கிழிந்த சட்டை தொங்கி காற்றில் ஆடியது.
கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக