அபுதாபி போலீசார் தங்களது ரோந்து பணிகளில் பயன்படுத்தவதற்காக டுகாட்டி
பணிகளே வி4 எஸ் பைக்கை வாங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில்
பார்ப்போம்.
மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் அபுதாபியில்
மிக பெரிய வர்த்தகம் எல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு
சாதாரண மக்கள் கூட பெரும்பாலும் சூப்பர் கார்களுடன் தான் உலா வருகின்றனர்.
பொது மக்களுக்கே அப்படி என்றால், அவர்கள் செய்யும் குற்றங்களை
தடுக்க வரும் போலீசார் அதற்கும் மேலே நவீன தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்ட
வாகனங்களை தானே வைத்திருக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாக தான் தற்போது அபுதாபி
போலீசார் டுகாட்டி பணிகளே வி4 எஸ் பைக்கை வாங்கி தங்களது காவல் பணியில் இணைத்து
கொண்டுள்ளனர்.
இவர்களிடம் ஏற்கனவே லைகன் ஹைப்பர்ஸ்போர்ட், ஆடி ஆர்8, லம்போர்கினி
ஹூராகேன், நிஸான் ஜிடி-ஆர் மற்றும் புகாட்டி வேய்ரான் உள்ளிட்ட பல சூப்பர் கார்கள்
அணிவகுத்து உள்ளன. இதில் தற்போது டுகாட்டி பணிகளே வி4 எஸ் பைக்கும் சேர்த்துள்ளது.
அபுதாபி போலீசார் வாங்கியுள்ள இந்த டுகாட்டி பைக்குகள் வி4 ஆர்
மாடலின் தோற்றத்தை வெளிப்படுத்தினாலும், அவை கொண்டுள்ள சஸ்பென்ஷன் அமைப்பினால்
டுகாட்டி வி4 எஸ் மாடல் என அந்நாட்டின் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. ஏனெனில் பணிகளே
வி4 ஆர் பைக் மேனுவலாக சரி செய்யக்கூடிய சஸ்பென்ஷன் அமைப்பை தான் பெற்றிருக்கும்.
ஆனால் இவற்றில் எலக்ட்ரானிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் அமைப்பு
கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தான் இவை இரண்டும் அடையாளப்படுத்தப்படுகின்றன.
இந்த வி4 எஸ் பைக்கின் முன் சக்கரத்தில் ஓலின்ஸ் என்ஐஎக்ஸ்-30
ஃபோர்க்ஸும், பின் சக்கரத்தில் ஓலின்ஸ் டிடிஎக்ஸ்-36 ஷாக்கும் சஸ்பென்ஷன் பணியை
கவனிக்கின்றன. ஓலின்ஸ் இசி 2.0 என்கிற அமைப்பு தான் பைக்கின் அப்சார்ப்ஷனை
கட்டுப்படுத்துகிறது. ப்ரேக்கிங் அமைப்பாக முன் சக்கரத்தில் ட்வின் டிஸ்க்கும்
பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளது.
அலுமினியம் மற்றும் லித்தியம்-இரும்பு பேட்டரியினை வி4 மாடலின்
இந்த எஸ் வேரியண்ட் கொண்டுள்ளது. மேலும் பணிகளே வி4 பைக்கின் அனைத்து
வேரியண்ட்களிலும் ஏரோடைனாமிக் பேக்கேஜும் வழங்கப்பட்டுள்ளன. மோட்டோஜிபி பைக்குகளை
முன் உதாரணமாக கொண்டு வி4 பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ள இந்த ஏரோடைனாமிக்
பேக்கேஜ்களால் பைக் வளைவுகளில் மிகவும் சாய்வாக செல்லும்போதும் அதன் நிலைத்தன்மை
மிக அதிகமாக இருக்கும்.
இது மட்டுமில்லாமல் இந்த பைக்குகள் சில கஸ்டமைஸ்ட்
மாற்றங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன. அதாவது இடது பக்க ஸ்விட்ச்கியரில் சில
கூடுதல் கண்ட்ரோல்களும் மற்றும் அபுதாபி போலீஸ் என்கிற பேட்ஜ் ஹேண்டில்பாருக்கு
கீழாகவும் கொடுக்கப்பட்டுள்ளன.
1,103சிசி டெஸ்மோசெடிசி ஸ்ட்ராடேல், 90 டிகிரி வி4, லிக்யூடு
கூல்டு என்ஜினை இந்த பணிகளே வி4 பைக் கொண்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக
13,000 ஆர்பிஎம்-ல் 214 பிஎச்பி பவரையும், 10,000 ஆர்பிஎம்-ல் 123.5 என்எம் டார்க்
திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
மேலும், டுகாட்டி ட்ராக்ஷன் கண்ட்ரோல் (டிடிசி) இவிஒ2, ஏபிஎஸ்
கார்னரிங் இவிஒ, டுகாட்டி ஸ்லைட் கண்ட்ரோல் (டிஎஸ்சி), டுகாட்டி வீலிங் கண்ட்ரோல்
(டிடபிள்யூசி) இவிஒ, டுகாட்டி குய்க் ஷிஃப்ட் அப்/டவுன் (டி க்யூஎஸ்) இவிஒ 2,
என்ஜின் ப்ரேக் கண்ட்ரோல் (இபிசி) இவிஒ, டுகாட்டி பவர் லான்ச் (டிபிஎல்) போன்ற
தொழிற்நுட்ப அம்சங்களையும் இந்த பணிகளே வி4 எஸ் பைக் தன்னுள் கொண்டுள்ளது.
இந்த பைக் இந்தியாவில் ரூ.26.5 லட்சத்தில் விற்பனை
செய்யப்படுகிறது. இவ்வளவு அதிகமான விலை கொண்ட பைக்குகள் பலருக்கு கனவாக இருக்கும்
நிலையில் அபுதாபி போலீசார் இந்த பைக்குடன் தான் நாள் முழுவதும் பணியாற்றவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக