Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 12 டிசம்பர், 2019

புத்திசாலித்தனம்..!

 Image result for புத்திசாலித்தனம்
ரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது. நாயை பிடித்து சாப்பிட வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டுநாயின் கவலை. ஓடிச்செல்வதால் பயனில்லை, ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டுநாயால் வேகமாக ஓட முடியாது.

எனவே காட்டுநாய் உடனே வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்ததும் உடனே அந்த காட்டுநாய்க்கு ஒரு யோசனை தோன்றியது. சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப்புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரானபோது காட்டுநாய் உரத்த குரலில் இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா? என்று தேடிப்பார்க்க வேண்டும் என்றது.

இதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது. இந்த காட்டுநாய் சிறுத்தைப்புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல் தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைத்து சத்தம் இல்லாமல் பின்னோக்கி சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது.

அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப்புலியுடன் பகிர்ந்து கொண்டு சிறுத்தைப்புலியுடன் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது. எனவே சிறுத்தைப்புலியை பின் தொடர்ந்து அந்த குரங்கு வேகமாக ஓடிச்சென்றது. காட்டுநாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டது. குரங்கு, சிறுத்தைப்புலியிடம் சென்று காட்டுநாய், சிறுத்தைப்புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப்புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்தது.

அந்த காட்டுநாய் என்னையே ஏமாற்றலாம் என்று நினைக்கிறதா? அதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன். இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு, குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்கார். நாம் அந்த காட்டுநாயை பிடிக்கலாம் என்றது. குரங்கு, சிறுத்தைப்புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.

இரண்டும் நாயை நோக்கி சென்றன. சிறுத்தையும், குரங்கும் சேர்ந்து வருவதை காட்டுநாய் பார்த்தது. இந்த திருட்டு குரங்கு என்னை இப்படி ஆபத்தில் மாட்டி விட்டதே இப்போது என்ன செய்வது? என்று அந்த காட்டுநாய் யோசித்தது. அப்படி யோசித்ததே தவிர, அதற்காக அந்த காட்டுநாய் பயந்து ஓடவில்லை.

அந்த சிறுத்தைப்புலியையும், குரங்கையும் பார்க்காத மாதிரி நடித்து அவைகளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தது. அவை அருகில் நெருங்கியதும் அந்த காட்டுநாய் உரத்த குரலில், அந்த போக்கிரி குரங்கு எங்கேபோய் தொலைந்தது. அதனை நம்பவே முடியாது. நான் இன்னொரு சிறுத்தைப்புலியை சாப்பிடுவதற்கு பிடித்துக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி அரை மணிநேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்த குரங்கை காணோமே? என்றது. காட்டுநாய் சொன்னதை கேட்ட சிறுத்தைப்புலி தன் கோபம் முழுவதையும் குரங்கின் மீது திருப்பியது. அதனை கடித்துக் குதறி கொன்று தின்றுவிட்டது.

நீதி :
வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வரலாம். ஆபத்துக்களும் வரலாம். ஆனால், பிரச்சனைகளை நேருக்கு நேர் சந்தித்து புத்திசாலித்தனமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!