Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 12 டிசம்பர், 2019

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரம்

 Image result for அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரம்
காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாக திருவுரு அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற இத்தலம் திருமாலின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக உள்ளது.

மூலவர் : உலகளந்த பெருமாள்
அம்பாள் : அமுதவல்லி நாச்சியார்
விமானம் : ஸாரஸ்ரீகர விமானம்
தீர்த்தம் : கவுரி தீர்த்தம்

தலச்சிறப்பு :

 அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில் காஞ்சிபுர மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 4 கோவில்கள் உள்ளது. நான்குமே திவ்ய தேசத்தை சேர்ந்தவை என்பது மிகவும் சிறப்பான ஒன்று. அவை 1.திருஊரகம் 2.திருநீரகம் 3.திருக்காரகம் மற்றும் 4.திருக்கார்வானம். இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது.

 திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு. ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருவுருவ அமைப்பு :

 மூலவர் சுவாமி உலகளந்த பெருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் திரிவிக்கிரம வடிவத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். 30 அடி உயரமுள்ள திருவுருவம் சிறப்பம்சமாகும். இந்த திருவுருவத்தின் இடது கால் உடலுக்கு செங்குத்தான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. வலது கால் மகாபலியின் தலை மீது அழுத்தியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளும் இரண்டு பக்கங்களிலும் விரிந்திருப்பதும் சிறப்பாகும்.

தல வரலாறு :

 மலைநாட்டு மன்னன் மகாபலி அசுரேந்திரனாக முடி சூட்டிக் கொண்டதும் அவனது கட்டளை மூன்று லோகங்களிலும் செயல்பாட்டிற்கு வந்தது. அதனால் தேவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தேவர்களின் கஷ்டங்களைப் போக்கவும், மகாபலியை அடக்கவும், திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் சென்று நிம்மதியாகப் பகவானைத் தியானிக்க, தனக்கென்று ஒர் இடம் தேவைப்படுகிறது. அதனை அளித்தால் நன்மையாக இருக்கும் எனக் கேட்டார்.

 மகாபலியும் இதற்கு உடன்பட்டு தேவையான அளவு இடத்தை எடுத்து கொள்ளக் கூறினார். உடனே திருமால் திரிவிக்ரம வடிவம் எடுத்து தன்னுடைய ஒரு திருவடியால் மேலுலகத்தையும், மற்றொரு அடியால் கீழுலகத்தையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடமில்லை என மகாபலியிடம் வாமனர் கூற, அதற்கு மகாபலி அடியேனின் சிரசு இருக்கிறது என்று கூற, திரிவிக்கிரமர் தன் பாதத்தை மகாபலியின் தலையில் வைத்து அழுத்தி அவனைப் பாதாள லோகத்தில் கொண்டு சேர்த்தார். மீண்டும் மூன்று லோகத்தையும் இந்திரரிடம் இருக்குமாறு செய்தார்.

 தானம் வாங்க வந்த பெருமாளின் விஸ்வரூப தரிசனத்தைக் காண முடியாமல் போய் விட்டதே என வருந்தி, அங்கேயே தவத்தில் ஆழ்ந்தான், மகாபலி. அவனுடைய தவத்திற்கு இணங்கி, காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாளாக உயர்ந்து நின்று காட்சியளித்தார். அத்தலமே ஊரகம் என்னும் உலகளந்த பெருமாள் கோவில்.

பிராத்தனை :

ஆணவம் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக