ஒரு நாட்டின் பொருளாதாரத்தில்,
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருப்பது நல்லது. அப்போது தான் தொழில்நுட்ப ரீதியாக
தொழில்கள் முன்னேறிக் கொண்டே இருக்கும்.
இன்று இந்தியப் பொருளாதாரமும் அப்படித்
தான் இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை. அது தான் நஷ்டம். இந்தியாவில்
வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனமான
பேடிஎம் தொடங்கி நேற்று தொடங்கிய குட்டி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை பலரும்
நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது நாம் பார்க்கப்போகும் ஆன்லைன்
மளிகை டெலிவரி நிறுவனமான குரோஃபர்ஸுக்கும் இதே கதி தான்.
நஷ்டம்
குரோஃபர்ஸ் நிறுவனத்தில் சாஃப்ட் பேங்,
டைகர் குளோபல் போன்ற பெரிய பெரிய ஜாம்பவான் நிறுவனங்களே கோடிக் கணக்கில் முதலீடு
செய்து இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் 2018 - 19 நிதி ஆண்டின் நஷ்டம் மட்டும்
448 கோடி ரூபாயாம். 2017 - 18 நிதி ஆண்டில் இந்த நஷ்டம் 258 கோடி ரூபாயாக
இருந்தது.
வருவாய்
இத்தனை பெரிய நஷ்டம் வந்தாலும், நிறுவன
தலைமையும், முதலீட்டாளர்களும் சந்தோஷப்படும் விதத்தில், குரோஃபர்ஸ் நிறுவனத்தின்
ஆண்டு வருமானம் 56 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. தொகை கணக்கில் பார்த்தால்,
குரோஃபர்ஸின் மொத்த வருமானம் கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் 53 கோடி ரூபாயாக
இருந்தது. இந்த 2018 - 19 நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 83 கோடி
ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.
போட்டி
இந்த குரோஃபர்ஸ் நிறுவனம் தன்னுடைய
நேரடி போட்டியாளராக பிக் பாஸ்கட், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களை எதிர்
கொண்டு வியாபாரம் செய்து வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க... குரோஃபர்ஸ்
நிறுவனமோ தன் மொத்த விற்பனை 2017 - 18 நிதி ஆண்டை விட 300 சதவிகிதம் அதிகரித்துக்
காட்டி இருக்கிறது.
இலக்கு
தொகை கணக்கில் பார்த்தால், கடந்த 2018
- 19 நிதி ஆண்டில் 2500 கோடி ரூபாய் அளவுக்கு சரக்குகளை விற்பனை செய்து
இருக்கிறது. இந்த 2019 - 20 நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளை
விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கிறார்களாம்..!
நாங்கள்
தான்
தற்போது இந்தியாவின் மிகப் பெரிய
ஆன்லைன் மளிகைக் கடை குரோஃபர்ஸ் தான் என்கிறார்கள் குரோஃபர்ஸ் தரப்பினர்கள்.
அடுத்த 10 கோடி மக்களை குரோஃபர்ஸ் நிறுவன வாடிக்கையாளராக மாற்ற வேலை பார்த்து
வருகிறார்களாம். சமீபத்தில் தான் குரோஃபர்ஸ் சுமார் 200 மில்லியன் டாலர்
முதலீடுகளை சில முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றம்
குரோஃபர்ஸ் ஒரு ஆன்லைன் மளிகை டெலிவரி
நிறுவனமாக இருந்தாலும், வழக்கமான மளிகை கடைகளையும் தன் பிராண்ட் அவுட் லெட்டாக
மாற்ற பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்த பிராண்ட் அவுட் லெட்
திட்டத்தை தற்போதைக்கு டெல்லி மற்றும் என் சி ஆர் பகுதிகளில் மட்டுமே பேசிக்
கொண்டு இருக்கிறார்களாம்.
விரைவில்
குரோஃபர்ஸ் நிறுவனம் கூடிய விரைவில்,
பல நகரங்களில் இயங்குவதன் மூலம் தன் நிதி நிலையை மேம்படுத்தி லாபம் காட்டும் எனச்
சொல்கிறார்கள். அதோடு அடுத்த சில வருடங்களில் இந்திய பங்குச் சந்தைகளில் ஐபிஓ
வெளியிட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. வாழ்த்துக்கள் குரோஃபர்ஸ்.
இந்தியாவின் முகமாக இருக்கும் ஸ்டார்ட் அப்கள் வெற்றியைச் சுவைக்கட்டுமே..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக